தலையங்கம்

நடைமுறை சாத்தியமா?

ஆசிரியர்

பட்டாசு வெடிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரின் அமர்வு தனது இறுதித் தீர்ப்பை வெளியிட்டிருக்கிறது. தீர்ப்பின் நோக்கமும் பயனும் வரவேற்புக்குரியது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், தீபாவளி பண்டிக்கைக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், வெளிவந்திருக்கும் இந்தத் தீர்ப்பு நடைமுறைச் சாத்தியமா என்பதுதான் ஐயப்பாடாக இருக்கிறது. 
காற்று மாசைக் கட்டுப்படுத்த, பட்டாசு உற்பத்தி செய்வதையும் அதை விற்பனை செய்வதையும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் முன்னால் விசாரணைக்கு வந்த மனு. அந்த மனுவின் மீதான தீர்ப்பில், அனுமதிக்கப்பட்ட ஒலி மற்றும் புகை வரம்புக்குள் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் மட்டுமே இந்தியாவில் விற்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய பட்டாசுகள் பசுமைப் பட்டாசுகளாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
காற்று மாசு, ஒலி மாசு, திடக்கழிவு பிரச்னைகளுக்கு சர வெடிப் பட்டாசுகள் வித்திடுகின்றன என்பதால் அவற்றின் தயாரிப்புக்கும் விற்பனைக்கும் தடை விதித்திருக்கிறது தீர்ப்பு. பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறித்தும் வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக தடை செய்யப்பட்ட பட்டாசுகளின் விற்பனைக்கும் நடைபெறும் விதிமீறல்களுக்கும் அந்தந்தப் பகுதி காவல்துறை ஆய்வாளர்களை பொறுப்பாக்கி இருக்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதுபோல, பட்டாசு உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் வாழ்வாதாரம் எப்படி அடிப்படை உரிமையோ, அதைவிட இந்தியாவின் 130 கோடி மக்களின் உடல் நலம் முக்கியம் என்பதால் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதையும் வரவேற்காமல் இருக்க முடியவில்லை.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் கொல்கத்தாவில் தாஸ்குப்தா என்பவர் ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலை நடத்திவந்தார். அந்தத் தொழிற்சாலையில் சண்முக நாடார், அய்ய நாடார் என்கிற சிவகாசியைச் சேர்ந்த ஒன்றுவிட்டச் சகோதரர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். அங்குதான் தீப்பெட்டித் தயாரிப்பு குறித்து அவர்கள் கற்றுக்கொண்டனர். சொந்த ஊரான சிவகாசிக்குத் திரும்பி அங்கே அவர்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகளை நிறுவியதிலிருந்து தொடங்கியது இந்தியாவின் பட்டாசு தயாரிப்புத் தொழில். சிவகாசி படிப்படியாக வளர்ந்து பட்டாசுத் தயாரிப்புத் தொழிலின் கேந்திரமாக மாறியது என்பது வரலாறு. இந்தியாவில் பட்டாசு இறக்குமதிக்கு அனுமதியில்லை. அண்டை நாடு என்பதால் சீனாவிலிருந்து திருட்டுத்தனமாக கோடிக்கணக்கான ரூபாய்க்கு இந்தியாவுக்குள் பட்டாசுகள் கடத்தி விற்கப்படும் நிலை தொடர்கிறது என்பதுதான் உண்மை.
சிவகாசியில் மட்டும் ஏறத்தாழ 1.,070 சிறிய, பெரிய பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அவற்றால் நேரிடையாக 3 லட்சம் பேரும், மறைமுகமாக 5 லட்சம் பேரும் வேலைவாய்ப்புப் பெறுகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில் இந்தியா முழுவதும் ஆங்காங்கே பட்டாசு விற்பனை மூலம் வேலைவாய்ப்புப் பெறுபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள். இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகின்றன. இந்தப் பின்னணியில்தான் உச்சநீதிமன்றத்தின் இப்போதைய அதிரடித் தீர்ப்பு ஒட்டுமொத்த பட்டாசு தயாரிப்புத் தொழிலுக்கும் அநேகமாக முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. 
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியில் பல நடைமுறை அசாத்தியங்கள் காணப்படுகின்றன. மூன்று மாதத்திற்கு முன்பே சிவகாசியிலிருந்து பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் விநியோகம் செய்யப்பட்டுவிட்டன. தீபாவளிக்கு இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு லட்சக்கணக்கான பட்டாசு சில்லறை விற்பனையாளர்களை நடுத்தெருவில் நிறுத்திவிடக்கூடும். பண்டிகைக் காலத்தை பயன்படுத்தி லாபம் ஈட்ட நினைத்து, கடன் வாங்கி முதல் போட்டிருக்கும் அவர்களின் தீபாவளி, கண்ணீரில்தான் கழியும் என்பதை நீதிபதிகள் ஏன் யோசிக்கவில்லை என்று புரியவில்லை. 
130 கோடி மக்களின் உடல் நலம் குறித்த அக்கறை, ஆறு மாதங்களுக்கு முன்பு வந்திருக்க வேண்டும். அல்லது அடுத்த தீபாவளிக்கு நடைமுறைப்படுத்துவதுபோல இந்தத் தீர்ப்பு அமைந்திருக்க வேண்டும். 
விதிமுறை மீறல்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு காவல்துறையை பொறுப்பாக்கியிருப்பது சரியான புரிதல் இன்மையின் வெளிப்பாடு. இந்தியாவில் எந்தவொரு காவல் நிலையத்திலும் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் இல்லை என்பதையும், ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 133 காவலர்கள் என்கிற விகிதத்தில்தான் காணப்படுகின்றனர் என்பதையும் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிந்திக்காமல் போனது ஆச்சரியமாக இருக்கிறது. 
எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு கேள்வியும் எழுகிறது. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட வேண்டிய இதுபோன்ற முடிவுகளில் எல்லாம் நீதித்துறை தலையிட்டு ஆட்சியாளர்களுக்கு உத்தரவிடத் தொடங்கினால், பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், நிர்வாகமும் எதற்காக இயங்க வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி. தீர்ப்பின் நோக்கம் புரிகிறது. ஆனால், அது நடைமுறை சாத்தியமா, அதில் நீதித்துறை தலையிட வேண்டுமா என்றெல்லாம் சந்தேகம் எழுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT