மனம் ஒப்பவில்லை!

இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவின் ஒரு பகுதியை செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.இயற்கைக்கு முரணாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதோ, விலங்குகளுடன்

இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவின் ஒரு பகுதியை செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது.இயற்கைக்கு முரணாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதோ, விலங்குகளுடன் உறவு வைத்துக்கொள்வதோ 10 ஆண்டுகள் முதல் ஆயுள் காலம் வரை சிறைத் தண்டனை விதிக்கத்தக்க குற்றமாகக் கருதப்பட்டது. இந்தத் தீர்ப்பால் ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்பது அகற்றப்பட்டிருக்கிறது.
 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், ஆர்.எஃப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கியிருக்கும் 493 பக்கத் தீர்ப்பு தன்மறைப்பு நிலைக்கு (பிரைவஸி) ஆதரவான நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில், சமூக ஒழுக்கத்துக்கு இந்தத் தீர்ப்பால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சமும் எழாமல் இல்லை.
 1860-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனிய அரசு கொண்டுவந்த இந்திய தண்டனையியல் சட்டத்தின் பிரிவுகளில் ஒன்றுதான் இயற்கைக்கு முரணான உறவுகளைக் குற்றமாக அறிவித்ததற்கு அடிப்படை. இந்தச் சட்டப்பிரிவு, கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் போன்றோரை காவல் துறையும், அதிகார வர்க்கமும் கொடுமைப்படுத்தும் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் சமுதாயத்தின் ஏனைய மக்களைப்போல வாழும் அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று, தீர்ப்பு எழுதிய நீதிபதிகள் ஒரே குரலில் தெரிவித்திருக்கிறார்கள்.
 அமெரிக்கா, பிரேசில், ஸ்வீடன், பெல்ஜியம் உள்ளிட்ட 124 நாடுகள் ஏற்கெனவே ஓரினச் சேர்க்கையை அங்கீகரித்திருக்கின்றன. இங்கிலாந்திலேயே ஓரினச் சேர்க்கை அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரிட்டிஷ் காலனிகளான இந்தியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்னும்கூட ஓரினச் சேர்க்கைக்கு எதிராக சட்டம் இருக்கிறது என்பதுதான் ஓரினச் சேர்க்கையாளர்களின் குற்றச்சாட்டு. அவர்களது குற்றச்சாட்டை ஆமோதித்திருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு.
 நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பல மேலை நாடுகள் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரித்திருப்பதைக் குறிப்பிட்டு, இந்தியாவிலும் அவர்களுக்கு உரிமை தரப்பட வேண்டும் என்றும் ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றப் பட்டியலில் இருந்து அகற்றுவது அதன் முதல் கட்டம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நீதிபதி இந்து மல்ஹோத்ரா, ஓரினச் சேர்க்கை சமூகத்தினருக்கு உரிமைகள் மறுக்கப்பட்டதற்காகவும், அச்சத்துடன் வாழ வைத்ததற்காகவும் வரலாறு அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒரு படி மேலேபோய், ஒருவர் தனிமையில் தான் விரும்பிய வகையில் பாலியல் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது என்பது அவர் விருப்பம் என்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் தேசம் இயங்க வேண்டுமே தவிர, சமுதாய ஒழுக்கக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சட்டமும் நீதியும் நிலைநிறுத்தப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
 ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் தங்கள் குழந்தைகள் சட்டத்துக்கு பயந்து ஒளிவு மறைவாக செயல்பட வேண்டியிருக்கிறது என்று சில பெற்றோர்களும், துணிவுடன் தாங்கள் விரும்பிய விதத்தில் பாலியல் தொடர்புகளை சமூக அவமானம் இல்லாமல் பொதுவெளியில் அறிவித்துக்கொள்ள முடியவில்லை என்று ஓரினச் சேர்க்கையாளர்களும் முன்வைத்த கோரிக்கைகள் தனி மனித சுதந்திரம், தன்மறைப்பு நிலை ஆகியவற்றின் போர்வையில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
 ஒருவருடைய படுக்கையறையையும், தனிப்பட்ட உறவுகளையும் அரசு கண்காணிப்பது சுதந்திர நாட்டுக்கு ஏற்புடையதல்ல என்று ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், இந்தப் பிரச்னையை தண்டனைக்குரிய குற்றமல்ல என்று அறிவித்து அதற்கு அங்கீகாரம் அளிப்பது என்பது விபரீதங்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்காமல் இருக்கவும் முடியவில்லை. மேலை நாடுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்திருந்தாலும், கலாசார பண்பாட்டு விழுமியங்கள் சீரழிந்திருக்கும் நிலையில், இந்தியா அவர்களைப்போல தன்னையும் தகவமைத்துக் கொள்ளுமேயானால், நம்மிடம் எஞ்சியிருக்கும் அடிப்படைப் பண்பாட்டுக் கூறுகளையும் இழந்துபோய் நிற்கும் அவலத்தில் முடியக்கூடும். இனி அடுத்தக்கட்டமாக, ஓரினத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரமும் வழங்கப்பட்டுவிட்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கப்போகிறது என்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
 மதுவிலக்கு இருந்தபோது, மது அருந்துவது சமூக அவமானமாக கருதப்பட்டதால், இளைய தலைமுறையினர் பெருமளவில் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டனர். ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மதுவிலக்கு அகற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பாதிப்பைப்போல மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
 திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேநேரத்தில், ஓரினச் சேர்க்கைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஓரினச் சேர்க்கை போன்ற இயற்கை முரண்களை, சமுதாயம் பாராமுகமாக இருப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com