விபரீதம் காத்திருக்கிறது!

பெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. ராஜஸ்தானைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசமும் தனது மாநில வரியிலிருந்து இரண்டு

பெட்ரோல் - டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. ராஜஸ்தானைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசமும் தனது மாநில வரியிலிருந்து இரண்டு ரூபாயைக் குறைத்துக்கொண்டிருக்கிறது. ரூ.80-ஐ தாண்டி விட்ட நிலையில், விலைக்குறைப்பு என்ற பெயரில், இரண்டு, மூன்று ரூபாயைக் குறைப்பதால் பெரிய அளவில் பயனேதும் கிடைத்துவிடப் போவதில்லை. 
பெட்ரோல் - டீசல் விலையில் ஏறத்தாழ 46% மத்திய, மாநில அரசுகளின் வரிகளாக வசூலிக்கப்படுவதால்தான், இந்தியாவில் இந்தளவு அதிகமான விலை உயர்வுக்கு காரணம். அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றில் இந்திய அளவிலான பெட்ரோல் - டீசல் விலை இல்லை என்பதன் காரணமும் அதுதான்.
இந்தியாவிலேயே தலைநகர் தில்லியில்தான் பெட்ரோல் - டீசல் விலை மிகவும் குறைவு. தில்லியைவிட ஏனைய மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு மாநில அரசுகள் பெட்ரோல் - டீசல் மீது விதிக்கும் அதிகமான வரிதான் காரணம். அதுமட்டுமல்லாமல், கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டிருக்கும் கலால் வரியும் மிக முக்கியமான காரணம். பெட்ரோல் மீதான கலால் வரி கடந்த 4 ஆண்டுகளில் 105% அதிகரித்து இப்போது லிட்டர் ஒன்றுக்கு ரூ.19.48 வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல் மீதான கலால் வரி 105% அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்றால் டீசல் மீதான கலால் வரியோ 331% அதிகரித்திருக்கிறது. இதுபோதாதென்று, மாநிலங்கள் விதிக்கும் வரியும் பெட்ரோல் - டீசலின் சில்லறை விற்பனை விலைக்கு ஏற்றாற்போல அதிகரித்து வருகின்றன. 
தலைநகர் தில்லியின் விலையை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், ரூ.19.48 கலால் வரி அல்லாமல் ரூ.17.16 வாட் வரி, ரூ.3.64 முகவர் கமிஷன், ரூ.40.45 அடிப்படை விலை என்று ரூ.80.73-க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறது. அதேபோல டீசலின் அடிப்படை விலை ரூ.44.28 மட்டுமே. ரூ.15.33 கலால் வரி, ரூ.10,70 வாட் வரி, ரூ.2.52 முகவர் கமிஷன் என்று சேரும்போது நுகர்வோருக்கான சில்லறை விற்பனை விலை ரூ.72.83 ஆகி விடுகிறது. 
பெட்ரோல் - டீசல் விலை இந்தளவு அதிகரித்திருப்பதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. குறிப்பாக, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஒரு முக்கியமான காரணம் என்றால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்திருப்பது இன்னொரு முக்கியமான காரணம். இவையிரண்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மறுக்க முடியாது. 
சர்வதேச கச்சா எண்ணெய் விலை முந்தைய மூன்றாண்டுகளில், கடுமையாகச் சரிந்தபோது, அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்காமல், கலால் வரியை அதிகரித்து மத்திய அரசு எடுத்துக்கொண்ட நிலையில், இப்போது சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கும் நிலையில், அதை மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி கூறும் தார்மிக உரிமை அரசுக்கு இல்லை.
ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து மத்திய அரசு தனது கலால் வரியை குறைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. கலால் வரியில் ரூ.2 குறைத்தாலும்கூட அது மத்திய அரசின் வருவாயில் ரூ.28,000 கோடியிலிருந்து ரூ.30,000 கோடி வரை இழப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் மாநில அரசுகள் தங்களது வரியை குறைத்துக் கொள்ளட்டும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது. 
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதும், சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருப்பதும் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை மட்டுமல்ல, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் பெரிய அளவில் அதிகரிக்கும். நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதை சமாளிப்பது என்பது மத்திய அரசுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. 
கடந்த 3 ஆண்டுகளாக, கச்சா எண்ணெய் விலை குறைவால் மத்திய அரசுக்குக் கிடைத்த மிகப்பெரிய வருவாய் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் பயன்பட்டன. இப்போது தனது வரியை மத்திய அரசு குறைத்துக்கொண்டால் அதன் விளைவாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத, கைவிட வேண்டிய நிலைமை ஏற்படலாம். அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலைச் சந்திக்க இருக்கும் நிலையில் இந்த ஆபத்தான முயற்சியில் மத்திய அரசு ஈடுபடத் தயங்குகிறது. 
தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக இருந்தாலும், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாக இருந்தாலும், பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆட்சியாக இருந்தாலும் எல்லா மத்திய, மாநில 
அரசுகளுக்கும் பெட்ரோல் - டீசலில் இருந்து கிடைக்கும் வரிதான் கணிசமான வருவாய். இதை இழக்க எந்தவொரு அரசும் தயாராக இருக்காது. அதேநேரத்தில், கணிசமான அளவுக்கு பெட்ரோல் - டீசல் விலை குறையாவிட்டால் அதுவே ஆட்சிக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும். 
இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது. அது என்னவென்றால், உடனடியாக பெட்ரோல் - டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது. ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரிவிதிப்பு 28%. அதனால் பெட்ரோல் - டீசல் விலையும் குறையும். ஜிஎஸ்டி வருவாயும் அதிகரிக்கும். பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆட்சிக்கு எதிரான ஆத்திரமும் ஓரளவுக்கு குறையும். இனியும் 
கால தாமதம் செய்தால் ஆட்சியாளர்கள் விபரீதத்தை எதிர்கொள்ள நேரிடும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com