கண்டனத்துக்குரிய யோசனை!

சுதந்திர இந்திய வரலாற்றில், வேறு எவருக்கும் இல்லாத தனி இடமும் தனிச் சிறப்பும் பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு உண்டு.


சுதந்திர இந்திய வரலாற்றில், வேறு எவருக்கும் இல்லாத தனி இடமும் தனிச் சிறப்பும் பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு உண்டு. இந்தியா சுதந்திரமடைந்த முதல் 17 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராகப் பதவி வகித்தவர். மூன்று பொதுத் தேர்தல்களில் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றது. 
இன்றைய காங்கிரஸ் கட்சியின் மீதும், அதன் தலைமைப் பொறுப்பிலிருக்கும் பண்டித நேருவின் குடும்ப வாரிசுகள் மீதும் இருக்கும் வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் பண்டித ஜவாஹர்லால் நேரு மீது காட்ட முற்படுவது நியாயமல்ல. புது தில்லியில் இருக்கும் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தை அனைத்துப் பிரதமர்களின் காட்சியகமாக மாற்ற நினைப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் புது தில்லியில் உள்ள தீன்மூர்த்தி பவனத்தில் அமைந்திருக்கிறது. அன்றைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, 1964 மே 27-ஆம் தேதி மறையும் வரை 16 ஆண்டுகள் தீன்மூர்த்தி பவனத்தில்தான் வசித்தார். 
இப்போது தீன்மூர்த்தி பவனத்தில் மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம், டாக்டர் கரண் சிங் தலைமையிலான நிர்வாகக் குழுவின் மேற்பார்வையில் செயல்படுகிறது. 1964-இல் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு நினைவு நிதியின் அலுவலகமும் இங்குதான் அமைந்திருக்கிறது. 
30 ஏக்கர் நிலப் பரப்பில் குடியரசுத் தலைவர் மாளிகையை எதிர்நோக்கி இருக்கும் தீன்மூர்த்தி பவனம், தில்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று என்பது மட்டுமல்ல, தில்லிக்கு விஜயம் செய்யும் பல வெளிநாட்டுப் பிரமுகர்களும், இந்திய, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் விஜயம் செய்யும் இடங்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. பண்டித ஜவாஹர்லால் நேருவின் பல்வேறு வெளிநாட்டுப் பயணங்களின்போது அவருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகள், அவரது தனிச் சேகரிப்பில் இருந்த புத்தகங்கள், அவருடைய அன்றாட உபயோகப் பொருள்கள் ஆகியவை பொதுமக்கள் பார்வைக்கு தீன்மூர்த்தி பவனத்தில் வைக்கப்பட்டு இருக்கின்றன. 
தீன்மூர்த்தி பவனத்தை பண்டித நேருவுக்கு மட்டுமே உரித்தான தனி நினைவகமாக இல்லாமல், இந்தியாவின் அனைத்து முன்ளாள், இந்நாள், வருங்காலப் பிரதமர்களின் நினைவைப் போற்றும் அருங்காட்சியகமாக மாற்ற முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசு. அதன் மூலம் பண்டித நேருவின் தனித்துவத்தை அகற்ற முடியும் என்று அரசு கருதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
பண்டித நேருவைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதமர்களாக இருந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கிறார்கள். இந்திய வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களது நினைவைப் போற்றும் விதத்தில், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இருந்து, நவீன இந்தியாவை உருவாக்கிய பெருமைக்குரிய பண்டித ஜவாஹர்லால் நேரு, ஏனைய பிரதமர்கள் அனைவரில் இருந்தும் மாறுபட்டு மிக உயர்ந்த உன்னதமான இடத்தைப் பெற்றிருப்பவர் என்பதை நாம் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. 
மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்' தேசிய புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவரும் தில்லிக்குச் சென்றால் ராஜ்காட்டுக்கு சென்று அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்துவதைத் தங்களது கடமையாகக் கருதுகிறார்கள். யமுனை நதிக்கரையில், அமைந்த ராஜ்காட்' இப்போதும் தனித்தன்மையுடன் பாதுகாக்கப்படுகிறது. 
மகாத்மா காந்திக்குப் பிறகு மறைந்த பண்டித நேருவுக்கு தனியாக சாந்தி வனம்', லால் பகதூர் சாஸ்திரிக்கு விஜய் காட்', 
சௌத்ரி சரண் சிங்குக்கு கிசான் காட்', சந்திரசேகருக்கு ஜனநாயக் ஸ்தல்' என்று தனித்தனியாக நினைவிடங்கள் அமைக்கப்பட்டனவே தவிர, காந்தியின் நினைவிடத்தில் மற்றவர்களுக்கும் நினைவிடம் ஏற்படுத்தவில்லை. அதேபோல தீன்மூர்த்தி பவனமும் பண்டித ஜவாஹர்லால் நேருவின் நினைவிடமாக மட்டுமே இருப்பதுதான் சரியாக இருக்கும்.
தீன்மூர்த்தி பவனத்தில் மத்திய கலாசார அமைச்சகம் ஏற்படுத்த நினைக்கும் அனைத்துப் பிரதமர்களுக்குமான நினைவகத்தில் பண்டித நேருவின் தலைமையின் கீழ் இந்தியா, சீனாவுடனான போரில் தோல்வியடைந்தது, இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சியில் அவசரநிலைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் பெற்ற அவர்களது தவறுகளும் பதிவு செய்யப்படும்' என்கிற கலாசார அமைச்சக அதிகாரி ஒருவரின் கூற்று அரசின் மனப்போக்கை வெளிச்சம் போடுகிறது. எல்லா பிரதமர்களுக்குமான நினைவகமாக மாற்றி பண்டித ஜவாஹர்லால் நேருவின் முக்கியத்துவத்தைக் குறைப்பதும், முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் நடந்த தவறுகளை பெரிதுப்படுத்திக் காட்டுவதும்தான் அரசின் முடிவுக்குக் காரணமென்றால், அது வன்மையான கண்டனத்துக்கு உரியது. 
முதிர்ந்த ஜனநாயகத்தில், கட்சிகள் ஆட்சிக்கு வருவதும் 
வெளியேறுவதும் சகஜம். தவறான முன்னுதாரணம் ஒன்று ஏற்படுத்தப்படுமேயானால், வருங்கால ஆட்சியாளர்கள் நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதை விட, பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தங்களது நேரத்தை வீணாக்குவார்கள். தீன்மூர்த்தி பவனத்திலும், நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திலும் மாற்றம் ஏற்படுத்தும் யோசனையை அரசு கைவிட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com