தன்னம்பிக்கையின்மையா.. தோல்வி பயமா?

எந்தவோர் அமைப்பும் விமர்சனத்துக்கோ, ஆய்வுக்கோ அப்பாற்பட்டதல்ல. அதே நேரத்தில், அடிப்படை ஆதாரமே இல்லாமல் அரசியல் சாசன அமைப்பு ஒன்றின் மீது ஐயப்பாட்டை எழுப்புவது பொறுப்புள்ள அரசியல்


எந்தவோர் அமைப்பும் விமர்சனத்துக்கோ, ஆய்வுக்கோ அப்பாற்பட்டதல்ல. அதே நேரத்தில், அடிப்படை ஆதாரமே இல்லாமல் அரசியல் சாசன அமைப்பு ஒன்றின் மீது ஐயப்பாட்டை எழுப்புவது பொறுப்புள்ள அரசியல் கட்சிகளுக்கு அழகல்ல. இந்தியாவிலுள்ள அரசியல் சாசன அமைப்புகளில் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைப்புகளில் ஒன்றாக தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட அமைப்பின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுப்புவதும், கேள்வி எழுப்புவதும் அந்த அமைப்பின் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும். 
2004 பொதுத் தேர்தலில் இந்தியாவின் வாக்கெடுப்பு முறை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு மாற்றப்பட்டது முதல் தொடர்ந்து அந்த இயந்திரம் குறித்து ஒவ்வொரு தேர்தலின் போதும் அப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் அரசியல் கட்சி சந்தேகத்தை எழுப்புவது வாடிக்கையாகி விட்டிருக்கிறது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அவ்வப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்த சந்தேகத்தை எழுப்பியிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாக வெளிவந்தவுடன் வசதியாக அவர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து மெளனமாகி விடுகின்றன.
தேர்தல் ஆணையம், வாக்குப் பதிவு இயந்திரத்தை வாக்களிக்கும்போதோ, அதற்குப் பிறகோ, எந்தவிதத்திலும் யாரும் மாற்றம் செய்வது இயலாது என்று பலமுறை உறுதியளித்துவிட்டது. ஒருபடி மேலே போய், வாக்குப் பதிவு இயந்திரத்தைத் தவறாகக் கையாண்டு தங்களது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு அனைத்துத் தரப்பினருக்கும் வாய்ப்பும் வழங்கியது. ஆனால், எந்தவொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தின் சவாலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதிலிருந்து அவர்களது குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமில்லாதது என்பது தெளிவாகிறது.
2019 பொதுத்தேர்தலில் முதல்முறையாக அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வாக்காளர் ஒப்புகைச் சீட்டையும் இணைக்க முடிவெடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். கடந்த 2017 மார்ச் மாதம் முதல் நடந்த தேர்தல்களின்போது 1,500 வாக்குப் பதிவு மையங்களில் பதிவான வாக்குகளும், வாக்காளர் ஒப்புகைச் சீட்டுகளும் 100% ஒத்துப்போயிருக்கின்றன. அதனடிப்படையில்தான் இப்போது இந்தியா முழுவதும் எல்லா மக்களவைத் தொகுதிகளிலும் சில மையங்களில் மட்டும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு முறையை அறிமுகப்படுத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் முறையான செயல்பாட்டை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்திருக்கிறது. இந்த நிலையில்தான் எதிர்க்கட்சிகள் சரிபாதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு இணைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன.
தேர்தல் ஆணையம் சிறப்பு வல்லுநர் குழு ஒன்றை அமைத்து, வாக்காளர் ஒப்புகைச் சீட்டு முறையின் நடைமுறை சாத்தியத்தை ஆய்வு செய்தது. அதன்படி, 479 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூலம் 10.35 லட்சம் வாக்குகளும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளும் பொருத்திப் பார்க்கப்பட்டன. அதனடிப்படையில் 99.99% நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒரு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்கு ஒப்புகைச் சீட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில்தான் இந்தத் தேர்தலில் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கியமான காரணங்களில் ஒன்று, வாக்குச் சீட்டு எண்ணப்படும் கால விரயத்தைக் குறைக்கவும், வாக்குப்பதிவின்போது செல்லாத வாக்குகளைக் குறைக்கவும், வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டு கள்ள வாக்குகள் போடப்படுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான். ஒரு வாக்குச் சாவடியின் வாக்கு ஒப்புகைச் சீட்டை வாக்குப் பதிவுடன் சரிபார்ப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரமாகும். அப்படியானால், ஒரு தொகுதியிலுள்ள 250-க்கும் அதிகமான வாக்குச் சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை சரி பார்க்க 250 மணிநேரம் தேவைப்படுகிறது. பாதிக்குப் பாதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு வசதியை இணைப்பது என்பது தேவையில்லாத காலவிரயத்தை ஏற்படுத்தும் என்பதுடன் எதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டதோ அதன் பயனையே இல்லாததாக்கி விடும்.
அதே நேரத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்திலோ, வாக்காளர் ஒப்புகைச் சீட்டு முறையிலோ தவறு ஏற்படுமேயானால் உடனடியாக அதை மாற்றுவதைத் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். எங்கேயோ ஓரிரு இடங்களில் ஏற்படும் தவறுகள் சமூக ஊடகங்களால் பரப்பப்பட்டு மிகைப்படுத்தப்படும் என்றாலும்கூட, தேவையில்லாத விமர்சனங்களுக்கும் வதந்திகளுக்கும் வழி
கோலும்  என்பதை ஆணையம் உணர வேண்டும். 
தில்லி, பிகார், பஞ்சாப், சமீபத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என்று பல மாநிலங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையும் தேர்தல் ஆணையத்தின் நடுநிலையான செயல்பாடும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தும், தேவையில்லாமல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த ஐயப்பாடுகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப முற்படுவது அவர்களின் தன்னம்பிக்கையின்மையின், தோல்வி பயத்தின் வெளிப்பாடு என்று கருத இடமிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com