பிரதிபலிப்பதாக இல்லை!

உச்சநீதிமன்றத்தின் தலையீடும், தேர்தல் ஆணையத்தின் முனைப்பும், துணை ராணுவப் படையினரின் உதவியும் இருந்தும்கூட தேர்தலில் பணம் விளையாடுவதைத் தடுக்க முடியவில்லை என்பது கவலையளிக்கிறது.



உச்சநீதிமன்றத்தின் தலையீடும், தேர்தல் ஆணையத்தின் முனைப்பும், துணை ராணுவப் படையினரின் உதவியும் இருந்தும்கூட தேர்தலில் பணம் விளையாடுவதைத் தடுக்க முடியவில்லை என்பது கவலையளிக்கிறது. கட்டுக்கட்டாகப் புத்தம் புதிய கரன்சி நோட்டுகள் பெட்டிகளிலும் சாக்குகளிலும் பிடிபடுகின்றன. அப்படியானால், இந்தியாவில் கருப்புப் பண நடமாட்டம் குறையவேயில்லை என்பதுதானே பொருள்? பிடிபட்ட புத்தம் புதிய கரன்சி நோட்டுகள் எந்த வங்கியின் மூலம் பெறப்பட்டன என்பதைக் கண்டுபிடிப்பதொன்றும் சிரமம் இல்லை. ஆனால், எந்தவொரு வங்கி மேலாளரும் இதுவரை குற்றம்சாட்டப்படவோ, கேள்வி கேட்கப்படவோ இல்லை எனும்போது, கருப்புப் பண நடமாட்டத்தையும், தேர்தலில் பணம் விளையாடுவதையும் எப்படி தடுக்க முடியும்?
பண விநியோகம் தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்து வருவதைத்தான் பல்வேறு சம்பவங்கள் உணர்த்துகின்றன. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் அறிமுகத்தால் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், கள்ள வாக்குகள் போடுதல், மிரட்டி வாக்களிக்க வைப்பது போன்றவை குறைந்திருக்கின்றன. ஆனால், அரசியல் அராஜகத்தையும் பணப் பரிமாற்றத்தையும் தடுக்க முடியவில்லை. வேட்பாளருக்கான தேர்தல் செலவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரம்பு நடைமுறை சாத்தியமில்லாததாக இருப்பது அதற்கு ஒரு முக்கியமான காரணம். 
கணக்கில் காட்டப்பட்டும், காட்டப்படாமலும் தேர்தல் செலவினங்கள் கடுமையாக அதிகரித்திருந்தும்கூட, அதனால் பொதுப் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படாமல் இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. திடீரென்று பல கோடி ரூபாய் மக்கள் மத்தியில் புழங்குகிறது. பல்லாயிரக்கணக்கானோர் அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு வருகிறார்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் பணம் தரப்பட்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். அதன் விளைவாக குறுகிய அளவிலாவது விலைவாசி அதிகரித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. இந்தியாவில் நடக்கும் பொதுத் தேர்தல்கள் இதுபோன்ற பல விசித்திரங்களை ஏற்படுத்துகின்றன. 
கடந்த 16-ஆவது மக்களவைக்கான ஒன்பது கட்டத் தேர்தல் ஏப்ரல் 7 முதல் மே 12 வரை 36 நாள்கள் நடந்தன. இந்த முறை ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 39 நாள்களுக்கு 17-ஆவது மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவைப் போன்று மக்கள்தொகை அதிகமுள்ள இந்தோனேஷியாவிலும் பிரேஸிலிலும் ஒரே நாளில் தேர்தலை நடத்த முடிகிறது எனும்போது, இந்தியாவில் மட்டும் இத்தனை நீண்டு நிற்கும் தேர்தல் தேவைதானா என்கிற கேள்வி எழுகிறது. அதுவும் 543 மக்களவைத் தொகுதிகளுக்காக இத்தனை நாள்கள் நீண்டு நிற்கும் வாக்கெடுப்பு அவசியமற்றது என்று தோன்றுகிறது. 
1951-52-இல் நடந்த முதல் பொதுத் தேர்தல் நான்கு மாதம் நடந்தது. அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில் படிப்படியாக வாக்குப்பதிவு நாள்கள் குறைக்கப்பட்டன. 1962 முதல் 1989 வரையில் நடந்த மக்களவைத் தேர்தல்கள் 4 முதல் 10 நாள்களில் முடிந்துவிட்டன. 1980-இல் நான்கே நாள்களில் நடந்து முடிந்த மக்களவைக்கான தேர்தல்தான் இதுவரை நடந்த தேர்தல்களில் மிகவும் குறைவான கால அவகாசத்தில் நடத்தப்பட்ட தேர்தல். நான்கு நாள்களில் 1980-இல் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தலாம் என்றால், இப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வந்த பிறகும், 39 நாள்கள் மக்களவைத் தேர்தல் நீண்டு நிற்க வேண்டிய அவசியம்தான் என்ன?
பல கட்டத் தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் மிகப் பெரிய ஆயாசத்தை ஏற்படுத்தும். ஆரம்பக்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடந்துவிடும் தொகுதிகளில் பிரசாரத்திற்கான கால அவகாசம் குறைகிறது. அதனால் வேட்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடைசிக் கட்டங்களில் வாக்குப்பதிவுக்குச் செல்லும் தொகுதிகளில் போட்டியிடும்  வேட்பாளர்களுக்கு பணச் செலவும், நீண்டு நிற்கும் பிரசாரத்தால் ஏற்படும் பாதிப்பும் தவிர்க்க முடியாதவை. அதனால் பல கட்டத் தேர்தல்கள் பல நாள்கள் நடத்தப்படுவதன் மூலம் யாருக்கும் லாபம் இல்லை. சொல்லப்போனால், கோடை அதிகரிக்க அதிகரிக்க கடைசிக் கட்டங்களில் வாக்குப்பதிவு விகிதம் குறையும் அபாயமும் காணப்படுகிறது.
489 இடங்களைக் கொண்ட மக்களவைக்கு இந்தியாவின் முதல் தேர்தலில் 17.3 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இப்போது பல மடங்கு அதிகமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருந்தும்கூட நமது மக்களவை இடங்களின் எண்ணிக்கை 543-ஆகத்தான் இருக்கிறது. வெறும் 32 கோடி மக்கள்தொகையுள்ள அமெரிக்க மக்களவையில் (காங்கிரஸ்) 435 இடங்கள் இருக்கின்றன. ரஷியாவின் மக்களவையான டூமாவில் 14.45 கோடி வாக்காளர்களுக்கு 450 இடங்கள் இருக்கின்றன. 6.5 கோடி மக்கள்தொகையுள்ள பிரிட்டனின் மக்களவையில் 650 இடங்கள் இருக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது 90 கோடி வாக்காளர்களும், 130 கோடி மக்கள்தொகையுமுள்ள இந்திய மக்களவைக்கு 543 இடங்கள் என்பது முறையான பிரதிநிதித்துவமாகத் தெரியவில்லை. 
பெரும்பாலான மக்களவைத்  தொகுதிகள் என்பவை, குறைந்தது 10 லட்சம் வாக்காளர்களைக் கொண்டவையாக மாறிவிட்டிருக்கின்றன. இத்தனை வாக்காளர்களையும் பிரதிபலிப்பது என்பது இயலாது. அவர்களது பிரச்னைகளையெல்லாம் பிரதிபலிப்பவையாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். மக்களவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் மட்டுமே இந்திய ஜனநாயகம் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும். மக்களவைத் தொகுதிகளை அதிகரிப்பதும், தேர்தல் வாக்குப்பதிவு நாள்களைக் குறைப்பதும்தான் அடுத்தகட்ட தேர்தல் சீர்திருத்தமாக இருக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com