நீதித்துறையின் வெளிப்படைத்தன்மை...

நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் முறை மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் கொலீஜியம் முறையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவதன்

நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் முறை மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் கொலீஜியம் முறையில் நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்படுவதன் வெளிப்படைத்தன்மை குறித்த அரசியல் சாசன வழக்குதான் அதற்குக் காரணம். 
கடந்த பல ஆண்டுகளாகவே நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக்கொள்ளும் கொலீஜியம் முறை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. ஏனைய எல்லாத் தளங்களிலும் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் நீதித்துறை, தனது செயல்பாடுகள் குறித்த வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த ஏன் முன்வரவில்லை என்கிற விமர்சனம் எழுப்பப்படுகிறது. கொலீஜியம் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், கொலீஜியம் நியமன முறையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்துவது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்ற கொலீஜியம் மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட 126 பேரில் 60 பேர் மத்திய சட்ட அமைச்சகத்தால் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டனர். மத்திய சட்ட அமைச்சகம் அந்த 60 பேரை நிராகரித்ததற்கு அவர்களது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நாணயம், தங்களது நண்பர்கள் உறவினர்களுக்காக அவர்கள் காட்டும் சிறப்புச் சலுகைகள், உண்மையான வருமானத்தை மறைத்தல் ஆகியவை சுட்டிக்காட்டப்பட்டன. இவையெல்லாம் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள். 
இந்தப் பின்னணியில்தான் மத்திய சட்ட அமைச்சகம் ஒவ்வோர் உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கென்று செயலகம் ஒன்றை உருவாக்கி, கொலீஜியத்தின் பரிந்துரைகளை விசாரிப்பது என்று ஆலோசனை கூறியது. ஆனால், நீதித்துறை அதை நிராகரித்துவிட்டது. இப்போது உச்சநீதிமன்றத்தில் கொலீஜியம் தொடர்பான அரசியல் சாசன வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. 
தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், உச்சநீதிமன்றத்தில் தகவல் கேட்டு ஒரு மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள் ஏ.பி.ஷா, ஏ.கே. பட்நாயக், வி.கே. குப்தா ஆகிய மூவரையும் பின்தள்ளிவிட்டு, நீதிபதிகள் எச்.எல்.தத்து, ஏ.கே. கங்குலி, ஆர்.எம். லோதா ஆகியோருக்குப் பதவி உயர்வு கொடுத்ததன் காரணம் கேட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது அந்த மனு. உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் அந்த முடிவால்தான், நீதிபதிகள் தத்துவும், லோதாவும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக முடிந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுபாஷ் சந்திர அகர்வாலின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சுபாஷ் சந்திர அகர்வால் தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். அந்த ஆணையம் உச்சநீதிமன்றத்தின் வாதத்தை நிராகரித்து, சுபாஷ் சந்திர அகர்வாலின் கேள்விக்கு பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. 
தலைமை தகவல் ஆணையரின் உத்தரவை உச்சநீதிமன்றம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தனிநபர்களின் தலையீட்டுக்கு நீதித் துறை உள்ளாகக் கூடாது என்றும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிபதிகளின் செயல்பாடுகள் கொண்டுவரப்பட்டால், அது நீதித்துறையின் சுதந்திரத் தன்மைக்கு எதிராக அமையும் என்றும் உச்சநீதிமன்றம் கருதியது.
தலைமை தகவல் ஆணையரின் உத்தரவுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் உச்சநீதிமன்றம் மேல்முறையீடு செய்தது. ஆனால், தில்லி உயர்நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை நிராகரித்து விட்டது. 
2010 ஜனவரியில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, முந்தைய உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து 2010 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலேயே முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதி டி. சுதர்சன் ரெட்டியிடம் அந்த முறையீடு வந்தபோது, அவர் அதை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து விலகிக்கொண்டார். 
மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் கழித்து, அந்த முறையீட்டை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று  2014-இல்  தீர்மானித்தது. அந்த வழக்குதான் இப்போது உச்சநீதிமன்றத்தில் விவாதத்துக்கு வந்திருக்கிறது. 
2009-இல் வழங்கப்பட்ட தலைமைத் தகவல் ஆணையரின் உத்தரவு ஏற்றுக்கொள்ளப்பட்டால், நீதித்துறையின் எல்லா நியமனங்கள், இடமாற்றங்கள் குறித்த விவரங்களை யார் வேண்டுமானாலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும். நீதித்துறை நியமனங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என்பது ஒரு சாராரின் வாதம். ஒரு நீதிபதியின் பதவி உயர்வு அல்லது இடமாறுதல் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் பொதுவெளியில் தெரிவிக்கப்பட்டால், அந்த நீதிபதியால் தொடர்ந்து சுதந்திரமாகச் செயல்பட முடியாது என்றும், பொதுமக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குலைந்துவிடும் என்றும் மறுவாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே நடக்கும் கடிதப் பரிவர்த்தனைகளின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறது. 
அதே நேரத்தில், கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் குறித்த மறுபரிசீலனை அவசியம் தேவை என்பதையும் வலியுறுத்தியாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com