வரவேற்புக்குரிய முடிவு...!

பயமுறுத்த மட்டுமே தெரிந்த பல்லில்லாத சிங்கம் என்கிற தோற்றத்தை தனது அதிரடி நடவடிக்கைகளால் இந்தியத் தேர்தல் ஆணையம் அகற்றியிருக்கிறது.


பயமுறுத்த மட்டுமே தெரிந்த பல்லில்லாத சிங்கம் என்கிற தோற்றத்தை தனது அதிரடி நடவடிக்கைகளால் இந்தியத் தேர்தல் ஆணையம் அகற்றியிருக்கிறது. தேர்தல் நடத்தை நெறிமுறைகளை அறிவிக்கவும், அதை மீறுபவர்களை எச்சரிக்கவும்தான் முடியுமே தவிர, தேர்தல் ஆணையத்தால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்கிற எண்ணத்தில் இருந்த அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிரடி முடிவு நிச்சயமாக அதிர்ச்சியளிப்பதாக இருக்கும் என்பது உறுதி. 
29 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரங்கள் உண்டு என்பதையும், அதன்மூலம் பல தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் உணர்த்தினார். ஒலிபெருக்கி பிரசாரங்கள், வாக்காளர்களை வாகனங்களில் அழைத்து வருதல், சுவரொட்டி விளம்பரங்கள் போன்றவற்றுக்கு டி.என்.சேஷன் முற்றுப்புள்ளி வைத்ததிலிருந்து இந்தியாவின் தேர்தல் முறை தலைகீழ் மாற்றத்தைச் சந்தித்தது. 
தேர்தல் காலங்களில் காணப்பட்ட வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், கள்ள வாக்குப் போடுதல் போன்றவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வரவுக்குப் பிறகு அநேகமாக இல்லையென்றே கூறலாம். வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கள்ள வாக்கு போடும் செயல்பாடும் அநேகமாக முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், வாக்குக்கு பணம் கொடுப்பது, மத, ஜாதி ரீதியாக தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கப்படுவது, கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலைமை ஏற்பட்டிருப்பது ஆகியவை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரையும் திகைக்கவும் மிரளவும் வைத்திருக்கின்றன.
தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைக் கையிலெடுத்து நெறிமுறை மீறிய, தரக்குறைவான பரப்புரைக்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜவாதி கட்சித் தலைவர்களில் ஒருவரான ஆஸம் கான், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்குத் துணிந்து பிரசாரத் தடை விதித்து எச்சரித்திருக்கிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களின் மத உணர்வைத் தூண்டும் விதத்தில் பேசியதற்காகவும், உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில்  தன்னை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் நடிகையுமான ஜெயப்ரதாவின் ஒழுக்கம் குறித்தும், அவரது பெண்மையை இழிவுபடுத்தும் வகையில் ஆஸம் கான் கருத்துத் தெரிவித்ததற்காகவும் எந்தப் பிரசாரத்திலும் 72 மணி நேரம்  ஈடுபடக்கூடாது என்று அவர்களுக்கு ஆணையம் தடை விதித்திருக்கிறது. 
அதேபோல சஹரான்பூர், பரேலி தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்களின் உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் மாயாவதி பேசியதற்காகவும், தான் போட்டியிடும் சுல்தான்பூர் தொகுதியில் தனக்கு வாக்களிக்கவில்லையென்றால், தான் வெற்றி பெற்றால் புறக்கணிக்கப்படுவீர்கள் என்று முஸ்லிம் வாக்காளர்களை அமைச்சர் மேனகா காந்தி எச்சரித்ததற்காகவும் தேர்தல் ஆணையம் அவருக்கு 48 மணி நேரம் பிரசாரத் தடை விதித்திருக்கிறது. 
தேர்தல் நடத்தை நெறிமுறைகளைத் துணிவுடன் நடைமுறைப்படுத்த முற்பட்டதற்கு தேர்தல் ஆணையம் பாராட்டப்பட வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் பல முக்கியமான தொகுதிகளில் 
வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நேரத்தில் நான்கு முக்கியமான தலைவர்களுக்குப் பிரசாரத் தடை விதித்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே தனது அதிகார வரம்பை ஆணையத்தின் உத்தரவு எடுத்தியம்பும் என்று எதிர்பார்க்கலாம். 
தேர்தலின்போது இதுபோலப் பிரசாரத் தடை விதிப்பது புதிதல்ல. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஆஸம் கானுக்கும், பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் இதேபோலத் தடை விதிக்கப்பட்டது. பாஜக தலைவர் கிரிராஜ் சிங் என்பவருக்கு ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. 1999-இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்கப்பட்டதுடன், அவரது வாக்களிக்கும் உரிமையும் முடக்கப்பட்டது. 
2019 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரசாரத்தில் தெரிவித்த சில கருத்துகள் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. முஸ்லிம்கள் அதிகம் வாழும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதை பாகிஸ்தானில் போட்டியிடுவதுடன் ஒப்பிட்டு பாஜக தலைவர் அமித் ஷா பேசியது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. மோடி, அமித்ஷா இருவரின் விமர்சனங்கள் மத உணர்வின் அடிப்படையிலானவை என்றால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆகியோரின் பரப்புரைகள் தரக்குறைவானதாகவும், முகம் சுளிக்க வைப்பவையாகவும் இருக்கின்றன. அவர்கள் வகிக்கும் கட்சித் தலைவர் பதவிக்கு கௌரவம் சேர்ப்பதாக அவைஇல்லை.
மத உணர்வுகளைத் தூண்டும் விதத்திலும் தரக்குறைவான பரப்புரைகளிலும் ஈடுபடும் தலைவர்களும் வேட்பாளர்களும் ஒரு முறைக்கு இரு முறை கண்டிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டும் தங்களது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவர்களைத் தகுதி நீக்கம் செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்குத் தரப்பட வேண்டும். தங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுவிடும், அல்லது தங்களது கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்கிற அச்சம் இருந்தால்தான் பொறுப்புணர்வுடன் தேர்தல் பரப்புரைகள் அமையும். ஜனநாயகம் நிலைக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com