தலையங்கம்

திறமைகளின் அணிவகுப்பு!

ஆசிரியர்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, இங்கிலாந்தில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திய அணியில் விளையாடும் வீரர்களை, கிரிக்கெட் தேர்வுக் குழுவினர் மிகுந்த கவனத்துடன் தேர்ந்தெடுத்திருப்பதுடன், பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சிலும் சரி எல்லாவிதத் திறமைகளுக்கும்  போதுமான, சரிசமமான இடமளித்திருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இங்கிலாந்தில் வரும் மே 30-ஆம் தேதி தொடங்க இருக்கும் 12-ஆவது உலகக் கோப்பைக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு அனுபவமிக்க ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கியிருக்கிறார்கள். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குறைந்தது 50 ஆட்டங்களிலாவது பங்கேற்ற அனுபவசாலிகள் மட்டுமே உலகக் கோப்பை போட்டியில் இடம்பெறுவதற்கு முழுமையான தகுதி பெற்றவர்கள் என்கிற கருத்து உண்டு. இந்திய அணியில் இடம்பெறும் 15 ஆட்டக்காரர்களில் ஒன்பது பேர், 50-க்கும் மேற்பட்ட ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கு பெற்றவர்கள். தோனி 341 ஆட்டங்களில் பங்கேற்றார் என்றால், அணியில் நான்கு பேர் 50 ஆட்டங்களில் பங்கேற்றவர்கள். 14 ஒரு நாள் ஆட்டங்களில் பங்கேற்ற கே.எல். ராகுலும், ஒன்பது ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்ற விஜய் சங்கரும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்றாலும்கூட, அவர்களது திறமையைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

இந்திய அணியில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களும் வேகப் பந்துவீச்சாளர்களும், சுழல் பந்துவீச்சாளர்களும் இடம்பெற்றிருக்கின்றனர். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலுமே வல்லவர்களாக இருக்கும் விஜய் சங்கர், ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, கேதார் ஜாதவ் ஆகிய நால்வரும் கேப்டன் கோலியின் தலைமையிலான அணிக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணியின் பந்துவீச்சைப் பற்றிக் கூறுவதாக இருந்தால், இடம்பெற்றிருக்கும் 15 பேரில் ஒன்பது பேர் பந்துவீச்சாளர்கள். ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகிய மூவரும் வேகப் பந்துவீச்சாளர்கள் என்றால், சஹலும், குல்தீப் யாதவும் சுழல் பந்துவீச்சாளர்கள். குல்தீப் யாதவும், யுஜவேந்திர சஹலும் சுழல் பந்துவீச்சில் சிறப்புத் திறமை பெற்றவர்கள். தொடக்கப் பந்துவீச்சில் தங்களது திறமையை பல முறை நிரூபித்திருப்பவர்கள் ஜஸ்ப்ரீத் பும்ராவும், புவனேஸ்வர் குமாரும், முகமது ஷமியும். 

ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் வழக்கம்போல தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. மூன்றாவது ஆட்டக்காரராக வழக்கமாகக் களமிறங்கும் கேப்டன் விராட் கோலியின் பேட்டிங் திறமை பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரன்களை அள்ளிக் குவிப்பதில் தன்னிகரற்ற திறமையை பலமுறை நிரூபித்திருக்கிறார். 

இந்திய அணியைத் தேர்ந்தெடுப்பதில் தேர்வுக் குழுவின் முன்னால் இருந்த மிகப் பெரிய கேள்வி, நான்காவது ஆட்டக்காரராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும், ஒருவேளை தோனிக்கு காயம் ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக விளையாட சரியான விக்கெட் கீப்பர் யார் என்பதும்தான். "மிடில் ஆர்டர்' என்று கூறப்படும் நான்காவது ஆட்டக்காரராக ஆல்ரவுண்டர் விஜய் சங்கரையும், மகேந்திர சிங் தோனிக்கு மாற்றாக இருப்பதற்கு தினேஷ் கார்த்திக்கையும் தேர்வுக் குழுவினர் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 

விஜய் சங்கர் அனுபவசாலியல்ல என்றாலும்கூட, அவரது தேர்வு எந்தவித விமர்சனத்தையும் எழுப்பவில்லை. ரிஷப் பந்த்தை பின் தள்ளிவிட்டு தினேஷ் கார்த்திக்கைத் தேர்ந்தெடுத்திருப்பதை சிலர் குறைகூறாமல் இல்லை. ஆனால், தினேஷ் கார்த்திக் அனுபவசாலி என்பதையும், ரிஷப் பந்த்தைவிட விக்கெட் கீப்பராக சிறப்பாகச் செயல்படுபவர் என்பதிலும் சந்தேகமில்லை. ரிஷப் பந்த்தும், அம்பதி ராயுடுவும் மாற்று வீரர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பதால், தேவை ஏற்படும்போது அவர்களது திறமையையும் பயன்படுத்தும் வாய்ப்பு கேப்டன் கோலிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

விஜய் சங்கரை நான்காவது ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுப்பதற்கு இன்னும் சில காரணங்கள் கூறப்படுகின்றன. இங்கிலாந்து ஆட்டக்காரர்களின் ஸ்விங் பந்துவீச்சை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனாக அவர் இருக்கிறார் என்பதும், இங்கிலாந்தின் சூழலுக்கு அவருடைய மிதவேகப் பந்துவீச்சு இந்திய அணிக்குக் கை கொடுக்கும் என்பதாலும் முன்னுரிமை பெற்றிருக்கக் கூடும். விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன் ஆகியோரின் பேட்டிங் திறமை உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

1983-இல் இதற்கு முன்னால் இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை பந்தயத்தில் கபில் தேவின் தலைமையில் வெற்றிவாகை சூடியபோது இந்திய அணி எந்த அளவுக்கு திறமைகளின் ஒட்டுமொத்த அணியாகக் காட்சியளித்ததோ அதைப்போல இந்த முறையும் காட்சியளிக்கிறது. இந்திய அணியின் முதல் பதினொன்று ஆட்டக்காரர்களின் வரிசை ரோஹித், தவன், கோலி, சங்கர், தோனி, ஜாதவ், பாண்டியா, குல்தீப், புவனேஸ்வர், பும்ரா, ஷமி என்பதாக இருக்கும். விராட் கோலியின் பேட்டிங் திறமையும், எம்.எஸ். தோனியின் உலகக் கோப்பையை வென்ற அனுபவமும் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களின் அணிவகுப்பும் வரும் ஜூன் 5-ஆம் தேதி செளதாம்ப்டன் நகரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்வதில் தொடங்கி, இங்கிலாந்தில் வெற்றிக் கோப்பையை மீண்டும் ஒருமுறை கைப்பற்றுவதில் முடியும் என்கிற நம்பிக்கையை இந்திய அணியின் பட்டியல் ஏற்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT