நிமோ ஜூடெக்ஸ் இன் காசா ஸ்வா!

நீதி முறையாக வழங்கப்பட்டால் மட்டும் போதாது, அது நேர்மையாக வழங்கப்படுகிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டும்.

நீதி முறையாக வழங்கப்பட்டால் மட்டும் போதாது, அது நேர்மையாக வழங்கப்படுகிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தவும் வேண்டும். அதேபோல, "நிமோ ஜூடெக்ஸ் இன் காசா ஸ்வா' என்கிற லத்தீன் சட்டவிதிக்கு, "தானே தனக்கு எதிரான வழக்கில் நீதிபதியாக இருக்க முடியாது' என்று பொருள். நேர்மையானவர், சட்டத்தைக் கரைத்துக் குடித்தவர், நீதிமான் என்றெல்லாம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், மேலே குறிப்பிட்ட பரவலாக அறியப்படும் இரண்டு சட்டவிதிகளையும் எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை. 

எந்தவொரு மனுவும் தாக்கல் செய்யப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு அவசர அவசரமாக கடந்த சனிக்கிழமை கூட்டப்பட்டது. அதற்கு முந்தைய நாள் மாலையில், முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தனக்கு கடுமையான பாலியல் தொந்தரவுகள் செய்ததாக உச்சநீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கு பிரமாணப் பத்திரம் அனுப்பியிருந்தார். அதன் அடிப்படையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு கூடியது. தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்பது அவசரமாக அந்த அமர்வைக் கூட்டுவதற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

கடந்த ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் இல்லத்தில் பெண் ஊழியர் ஒருவருக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பதுதான் குற்றச்சாட்டு. தன்னுடைய தலைமை நீதிபதி பதவியை முடக்குவதற்கு பெரிய சக்திகள் திட்டமிடுவதாகவும், தன்னுடைய நேர்மையையும், கெளரவத்தையும் குலைப்பதற்கு முயற்சிகள் நடப்பதாகவும், உச்சநீதிமன்றம் சில முக்கியமான வழக்குகளில் வழங்க இருக்கும் தீர்ப்புகளை முடக்குவதற்கு முனைகிறார்கள் என்றும் தலைமை நீதிபதி குற்றம்சாட்டினார். இந்தப் பின்னணியில் சில முக்கியமான கேள்விகளை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. 


உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவிடம் இந்த வழக்கை விசாரிக்க உத்தரவு பிறப்பிப்பதற்குப் பதிலாகத் தனது தலைமையில் ஓர் அமர்வை ஏற்படுத்தி, அவசர அவசரமாக இந்தப் பிரச்னையைத் தலைமை நீதிபதி விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது முதலாவது கேள்வி.


கடந்த ஆண்டு முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்பட நான்கு நீதிபதிகள் பொதுவெளியில் எழுப்பிய குற்றச்சாட்டு, அவர் முக்கியமான வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில்லை என்பது. இப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும்  நிலையில், தனக்கு அடுத்தபடியான இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்விடம் இந்தப் பிரச்னையை விசாரிக்க உத்தரவிடாமல், தனது தலைமையில் பதவி மூப்பு குறைந்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வை ஏற்படுத்தி தலைமை நீதிபதி விசாரிக்க முற்பட்டது சரியா என்பது இரண்டாவது கேள்வி. 

மூன்றாவதாக, அப்படியே விசாரிக்க முற்பட்டிருந்தாலும்கூட, அந்த அமர்வில் ஒரு பெண் நீதிபதி ஏன் இணைக்கப்படவில்லை என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டைப் புறந்தள்ளிவிட முடியாது. 

நீதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்படுவது புதிதொன்றுமல்ல. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே. கங்குலி, பாலியல் புகாரைத் தொடர்ந்து 2014-இல் மேற்கு வங்க மனித  உரிமை ஆணையத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டி வந்தது. இன்னொரு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகங்களில் எதுவும் வெளிவரக் கூடாது என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் 2011-இல் தடையுத்தரவு பெற்றிருக்கிறார். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவையின் மூன்று உறுப்பினர் கொண்ட விசாரணைக் குழுவின் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர் மீதான நடவடிக்கை 2017-இல்  கைவிடப்பட்டது. இப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறார்.

குற்றம் சுமத்திய பெண் ஊழியரின் தரப்பு வாதத்தைக் கேட்காமல் உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு விசாரிக்க முற்பட்டது, நீதி நேர்மையாக வழங்கப்படுகிறது என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தாலும், தீர்ப்பு எழுதும்போது இரண்டு பேர் கொண்ட அமர்வின் சார்பில் முடிவு அறிவிக்கப்பட்டிருப்பது அதைவிட வேடிக்கை. இவற்றுக்கெல்லாம் உச்சமாக, இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் தங்களுக்குப் பெண் உதவியாளர்களே வேண்டாம் என்று கோரியிருக்கிறார்கள். 

சரியோ - தவறோ, உண்மையோ - பொய்யோ தன் மீது பாலியல் குற்றச்சாட்டை ஒருவர் சுமத்தும்போது, அதுவும் பிரமாணப் பத்திரத்தில் சாட்சிகளை இணைத்து குற்றம் சுமத்தியிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு ஒழுங்காற்றுக் குழுவிடம் விசாரணைக்கு ஒப்படைத்திருந்தால், நேர்மையாளரான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது கேள்விக்கணைகளும், சந்தேகப் பார்வைகளும் எழுந்திருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com