தலையங்கம்

இலக்கு - தேர்தல்!

ஆசிரியர்

நிதியமைச்சர் பியூஷ் கோயல் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பது இடைக்கால நிதிநிலை அறிக்கையல்ல, முழுமையான நிதிநிலை அறிக்கை. இது மரபு மீறல்தான் என்றாலும், சட்டப்படி இதில் தவறு காண முடியாது. மரபு மீறல்தான் என்றாலும், நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையை எதிர்க்க முடியாமல் எதிர்க்கட்சிகள் தர்மசங்கடத்தில் ஆழ்ந்திருக்கின்றன.

மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடுவோம் என்கிற தன்னம்பிக்கையாலோ அல்லது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய  நிர்ப்பந்தத்தாலோ, நரேந்திர மோடி அரசு முழுமையான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒரு பட்டயக் கணக்காயர் தயாரித்திருக்கும் நிதிநிலை அறிக்கை என்பது ஒவ்வொரு வரியிலும் பிரதிபலிக்கிறது. இதுவரை பெரும்பாலும் வழக்குரைஞர்கள் நிதியமைச்சர்களாக இருந்தது தவறு என்றும், நரேந்திர மோடி அரசு ஆரம்பத்திலேயே பியூஷ் கோயலை நிதியமைச்சராக வைத்துக் கொண்டிருந்தால், இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையை எட்டியிருக்கும் என்றும் தோன்ற வைப்பதாக அமைந்திருக்கிறது 2019-20-க்கான நிதிநிலை அறிக்கை.

பியூஷ் கோயல் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையில் வாய் பிளக்க வைக்கும் அறிவிப்பு ராணுவத்துக்கான ஒதுக்கீடுதான். இதுவரையில் இல்லாத அளவுக்கு ராணுவத்திற்கான ஒதுக்கீடு ரூ.3 லட்சம் கோடியைத் தாண்டுகிறது என்பது மட்டுமல்ல, தேவைப்பட்டால் நமது எல்லைகளைப் பாதுகாப்பதற்கு மேலும் நிதி ஒதுக்கீடு செய்ய அரசு தயங்காது என்றும் நிதியமைச்சர் தெரிவித்
திருக்கிறார். ராணுவத்தினரின் நீண்டநாள் கோரிக்கையான அனைவருக்கும் சமமான ஓய்வூதியம்  ஏற்றுக்கொள்ளப்பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்துத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதால், வருமான வரி இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் பெறுகிறது. வருமான வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது, கூடுதலாக 3.06 கோடி பேர் வருமானவரி செலுத்த முன்வந்திருக்கிறார்கள். அதனால், முந்தைய மன்மோகன் சிங் அரசின் கடைசி நிதிநிலை அறிக்கையின்போது (2013-14) இருந்த ரூ.6.38 லட்சம் கோடி வரி வருவாய் இப்போது ரூ.12 லட்சம் கோடியாக 
அதிகரித்திருக்கிறது.

ரூ.5.61 லட்சம் கோடி வரி வருவாய் அதிகரித்திருப்பதற்கு அதிக மதிப்புச் செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவு காரணமாக இருக்கக்கூடும். மிகப் பெரிய பாதிப்பையும், அரசுக்குக் கெட்ட பெயரையும் ஏற்படுத்திய அந்த முடிவு, தாமதமாக நன்மை பயக்கத் தொடங்கி இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதிகபட்ச வருமானவரி தாக்கல்களும், வரி வருவாயும் நிதியமைச்சரை வரிச் சலுகைகளை வாரி வழங்க உதவி இருக்கின்றன. சுதந்திர இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு மாத ஊதியம் பெறுவோரும், நடுத்தர வர்க்கத்தினரும் முந்தைய நிதியமைச்சர்கள் யாரிடமிருந்தும் பெற்றதில்லை என்கிற அளவிலான அதிரடிச் சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

2013-14-இல் ப. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட வருமானவரி விலக்குக்கான வரம்பு, கடந்த ஐந்து நிதிநிலை அறிக்கைகளில் மோடி அரசின் நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் படிப்படியாக உயர்த்தப்பட்டு, ரூ.2.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. இப்போது அதுவே ஒரேயடியாக ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டுகளில் ரூ.50,000 வீதம் அதிகரிக்காமல் இப்போது ஒரேயடியாக ரூ.2.5 லட்சம் அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு, அதிக மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கப்பட்ட முடிவால் அதிகரித்திருக்கும் வருவாய் காரணமாக இருக்கக்கூடும்.

வரிவிலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏனைய விலக்குகளையும் சேர்த்துப் பார்த்தால், நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வருமான வரிவிலக்கு 43% அதிகரித்து ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் முடிந்துவிடவில்லை. தற்போது ரூ.10 லட்சமாக உள்ள பணிக்கொடை ("கிராஜுட்டி') வரம்பு, ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதை ஏன் படிப்படியாக உயர்த்தி இருக்கக்கூடாது என்று கேட்கக்கூடும். தேர்தல் ஐந்தாண்டுக்கு ஒரு முறைதானே வருகிறது. ஆண்டுதோறும் வருவதில்லையே, அதனால்தான் போலிருக்கிறது.

சிறு-குறு விவசாயிகளுக்கு, அதாவது ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6,000 வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். மூன்று தவணையாக ரூ.2,000 வீதம் ஆண்டொன்றுக்கு வங்கி மூலம் இந்த நேரடி மானியம் வழங்கப்பட இருக்கிறது. வேளாண் இடரால் ஆத்திரத்தில் இருக்கும் விவசாயிகளைத் திருப்திப்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

முழுக்க முழுக்க வர இருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை என்பதிலும், தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் அரசு, சலுகைகளை வாரி வழங்கி இப்படியொரு முழு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வது தார்மிக அடிப்படையில் தவறு என்பதிலும் ஐயப்பாடே இல்லை. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்த்து மக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ளும் துணிவு எந்த எதிர்க்கட்சிக்குத்தான் இருக்கும்? அந்த வகையில் அரசியல் ரீதியாக வெற்றியடைந்திருக்கின்றனர் பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் பியூஷ் கோயலும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT