மது மயக்க மரணங்கள்!

உத்தரகண்டிலும், உத்தரப் பிரதேசத்திலும் நடந்திருக்கும் கள்ளச் சாராய மரணங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.


உத்தரகண்டிலும், உத்தரப் பிரதேசத்திலும் நடந்திருக்கும் கள்ளச் சாராய மரணங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன. 116-க்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். அதைவிட இரண்டு மடங்கு பேர் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்தக் கள்ளச் சாராய மரணம் தொடர்பாக இதுவரை 200-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தரப்பட்டிருக்கிறது.
அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவது, சில குற்றவாளிகள் கைது செய்யப்படுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது-இவையெல்லாம் ஒவ்வொரு முறையும் கள்ளச் சாராயத்தால் பாதிப்பு ஏற்படும்போது நடைபெறுகின்ற சடங்குகளாக மாறிவிட்டிருக்கின்றன. ஊடகங்கள் பரபரப்பாகக் கள்ளச் சாராய மரணங்கள் குறித்து செய்திகள் வெளியிடுவதும், காவல் துறையினர் மற்றும் கலால் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதும் தொடர்கின்றனவே தவிர, கள்ளச் சாராய தயாரிப்புக்கும் அதனால் ஏற்படும் மரணங்களுக்கும் முடிவு எட்டப்படாமல் தொடர்கிறது.
1982-இல் கேரள மாநிலம், கொச்சியை அடுத்த வைப்பின் தீவில் நடந்த கள்ளச் சாராய விபத்து இன்று வரை பேசப்படுகிறது. கடற்கரைப் பகுதியில் அமைந்திருக்கும் வைப்பினில் மீன் பிடித்தல் தொடர்பானவர்களும், கூலி வேலை செய்பவர்களும்தான் காணப்படுகின்றனர். வைப்பின் கள்ளச் சாராய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இவர்கள்தான். 
1982-ஆம் ஆண்டு ஓணம் பண்டிகையையொட்டி, வைப்பின் தீவிலுள்ள அரசாங்கத்தின் உரிமம் பெற்ற சாராயக் கடைகள் மூலம்தான் கள்ளச் சாராயம் விற்கப்பட்டது என்பதுதான் வேடிக்கை. அந்த விபத்தில் 77 பேர் மரணமடைந்தனர்; 63 பேர் பார்வையிழந்தனர்; 15 பேர் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 700-க்கும் அதிகமான குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்தன. அரசு அதிகாரிகளின் துணையோடும் ஒப்புதலோடும்தான் வைப்பின் கள்ளச் சாராய விபத்து நடந்தது என்பது வரலாறு. 
இந்த நூற்றாண்டில் தென்னிந்தியாவில் கள்ளச் சாராயம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், வட மாநிலங்களில் இப்போதும் மிகப் பெரிய சவாலாகத்தான் தொடர்கிறது. 2009-இல் குஜராத், 2011 மற்றும் 2015-இல் மேற்கு வங்கம், 2012-இல் ஒடிஸா, 2015-இல் மும்பை, 2016-இல் பிகார் என்று தொடர்ந்து கள்ளச் சாராய விபத்துகள் நடந்து வருகின்றன. இந்த எல்லா 
விபத்துகளிலும் பலர் மரணமடைய நேர்ந்தது. சட்டவிரோதமாகக் கள்ளச் சாராயம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதால் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
குஜராத்தில் நடந்த கள்ளச் சாராய மரணம், மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. 136-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து,  சட்ட விரோதமாகச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கும், கள்ளச் சாராயம் விநியோகம் செய்பவர்களுக்கும் தூக்குத் தண்டனை வழங்க வழிகோலும் வகையில் குஜராத் சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலத்தில், கள்ளச் சாராய தயாரிப்பு குறையவில்லை என்பது மட்டுமல்லாமல், கள்ளச் சாராய விற்பனையை மையமாகக் கொண்டு சட்டவிரோத சக்திகள் வலுவடைந்தன என்பதுதான் உண்மை. 
கள்ளச் சாராயத்துக்கு எதிரான சட்டங்களும் விதிமுறைகளும், கள்ளச் சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் கள்ளச் சாராயம் தயாரிப்பது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதுதான் மிச்சம். மதுவிலக்கு அமலில் இல்லாத மாநிலங்களில் சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் தயாரிப்பவர்கள் அந்தந்த மாநிலங்களின் அரசியல் சூழலைத் தீர்மானிக்கும் அளவுக்குப் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றனர்.
மது தயாரிப்பு, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை கடுமையான ஒழுங்காற்றுதலுக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. உயிருக்கு ஆபத்தான விஷம் உள்ளிட்ட மருந்துகள், மருந்துக் கடைகள் மூலம் வெளிப்படையாகவே விற்பனை செய்யப்படுகின்றன. அவை முறையாக சுகாதாரத் துறையினரால் சோதனையிடப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது கள்ளச் சாராயமும் கண்காணிக்க முடியாத ஒன்றல்ல. 
அதிகமான வரி விதிப்பால் பெரிய அளவில் லாபம் ஈட்ட முடிகிறது என்பதால்தான் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதுதான் முறையான கண்காணிப்பில்லாமல் இருப்பதன் அடிப்படைக் காரணம். அதிகாரப்பூர்வ சாராய விற்பனையாளர்களைக் கண்காணிப்பதும், சட்டவிரோத கள்ளச் சாராய விற்பனையைத் தடுப்பதும் முனைப்பு இருந்தால் காவல் துறைக்கு சாத்தியமே!
ஒவ்வொரு முறை கள்ளச் சாராய மரணங்கள் ஏற்படும்போதும் மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கைகள் எழுவது வழக்கமாகி விட்டிருக்கிறது. மதுவிலக்கினால் மட்டும் மதுப் பழக்கத்தை நிறுத்திவிடவோ, கள்ளச் சாராய உற்பத்தியையும் விநியோகத்தையும் தடுத்துவிடவோ முடியும் என்று நினைப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கும். 
மக்கள் மத்தியில் மதுப்பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கள்ளச் சாராயத் தொழிலில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு அரசியல் கட்சிகள் பாதுகாப்பு அளிப்பது தொடரும் வரை கள்ளச் சாராய விற்பனையும், அதனால் ஏற்படும் மரணங்களும் தொடரும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com