நாடாளுமன்றம் எதற்காக?

அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்துவதில் குறைகாண முடியாது. இதுவரை 124 முறை இந்திய

அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்துவதில் குறைகாண முடியாது. இதுவரை 124 முறை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த முற்பட்டிருக்கிறோம் என்று சொல்வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பலமே தவிர, பலவீனமல்ல. 
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தும்போது, அதற்கென்று சில விதிமுறைகளை அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த உணர்வுகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனும்போது, அரசியலமைப்புச் சட்டம் அவமதிக்கப்படுகிறது என்றுதான் கொள்ள வேண்டும்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு அவசரச் சட்டங்களைப் பிறப்பிக்கும்போது அதை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று வர்ணித்தவர் பண்டித ஜவாஹர்லால் நேரு. தான் பிரதமரான பிறகு, அரசியல் நிர்ணய சபையில், அரசியலமைப்புச் சட்டத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்று வாதாடியவரும் அவர்தான். 
அரசியலமைப்புச் சட்டம் 123-ஆவது பிரிவின்படி, அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையில் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கும் உரிமை குடியரசுத் தலைவருக்குத் தரப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற அவைகள் கூடாமல் இருக்கும்போதுதான் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். அப்படியே பிறப்பிக்கப்பட்டாலும் அடுத்த முறை நாடாளுமன்றம் கூடும்போது, அந்த அவசரச் சட்டம், ஆறு வார காலங்களுக்குள் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்றாக வேண்டும். அப்படிப் பெறாமல் போனால், அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும். அதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு நிலம் கையகப்படுத்தும் சட்டம்.
1952 முதல் 1964 வரை பண்டித ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது 66 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. அவர் காட்டிய வழியில் அடுத்துவந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்தனர். ஜனதா கட்சி ஆட்சியில் (1977-80) 28, தேசிய முன்னணி ஆட்சியில் (1989-91) 16, ஐக்கிய முன்னணி ஆட்சியில் (1996-98) 77, வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் (1998-2004) 58, மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (2004-2014) 61 என்று அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அவசரச் சட்டத்தை சர்வாதிகாரப் போக்கு, நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தடம்புரளச் செய்யும் செயல்பாடு என்று வர்ணிப்பதும், ஆட்சிக்கு வந்தால் அவசரச் சட்டத்தைப் பயன்படுத்துவதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது.
அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவது எந்த அளவுக்கு ஜனநாயக முறைகேடோ, அதேபோல முறையான, போதுமான அளவு விவாதம் நடைபெறாமல் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் ஏற்படுத்துவதும், மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதும் ஜனநாயக முரண். கடந்த வாரம் மக்களவையில் இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 
கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவும், பொதுப்பிரிவினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10% வேலைவாய்ப்பிலும், கல்வியிலும் இட ஒதுக்கீடு வழங்கும் 124-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டிருக்கும் விதம் ஏற்புடையதல்ல. இரண்டு அவைகளும் இது குறித்து முறையாக விவாதிக்காதது மிகப்பெரிய தவறு.
இந்தியப் பிரிவினையின்போது ஆப்கானிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய வங்கதேசம்) ஆகிய பகுதிகளிலிருந்து இந்துக்கள், ஜைனர்கள், பெளத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்ஸிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். முஸ்லிம் பெரும்பான்மைப் பகுதிகளிலிருந்து அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட மதச் சிறுபான்மையினர் இந்தியாவில் அடைக்கலம் புகுந்தனர். 
பிரிவினைக்குப் பிறகும்கூட இந்த நாடுகளில் தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளைத் தாங்க முடியாமல், மதச் சிறுபான்மையினர் பலர் இந்தியாவில் அடைக்கலம் தேடியிருக்கிறார்கள். சட்ட அனுமதி இல்லாமல் இந்தியாவில் குடியேறிய இவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கச் சட்டம் வழிகோலுகிறது. 2014-க்கு முன்பு அப்படி இந்தியாவில் குடியேறியவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்க, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா வழிகோலுகிறது. இந்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. முக்கியமான இந்த மசோதா முறையாக விவாதிக்கப்படாதது சரியல்ல.
இரண்டாவது மசோதா, 124-ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா. இதன்படி கல்வி, வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கும் 10% ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்க வழிகோலப்படுகிறது. முதலாவது மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படாமல் அடுத்த கூட்டத்தொடருக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது மசோதா, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 
இரண்டே நாள்களில் இந்த இரண்டு முக்கியமான மசோதாக்
களையும் நாடாளுமன்றம் முறையாக விவாதிக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. 10% இட ஒதுக்கீட்டு மசோதாவை அவைக்கு வெளியே விமர்சிக்கும் கட்சிகளும்கூட, 124-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்கிற நம்பிக்கையில் அரசியல் காரணங்களுக்காக ஆதரித்து வாக்களித்த போலித்தனம் அதிர்ச்சி அளிக்கிறது. 
அவசரச் சட்டங்களின் மூலமும், விவாதங்களே இல்லாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதன் மூலமும் ஆட்சி நடக்கும் என்றால் எதற்காக நாடாளுமன்றம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com