கூடினார்கள்... பிரிந்தார்கள்!

தேசியக் கட்சிகள்

தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்று 23 எதிர்க்கட்சிகள் கடந்த சனிக்கிழமை கொல்கத்தாவிலுள்ள பிரிகேட் பேரேட் மைதானத்தில் கூடின. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டிய அந்த "ஐக்கிய இந்தியப் பேரணி' திருப்புமுனைப் பேரணியாக அமையுமா, இல்லை பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடிப் பேசி, கையசைத்துப் பிரியும் நிகழ்வாக வரலாற்றில் பதிவாகுமா என்பதை 2019 மக்களவைத் தேர்தல் முடிவுதான் தெளிவுபடுத்தும்.

இதற்கு முன்னால் அமைந்த எதிர்க்கட்சிக் கூட்டணிகளுக்குப் பின்னால் இடதுசாரிகள் உந்து சக்தியாகத் திகழ்ந்தனர். இப்போது ஒருபுறம் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியும், இன்னொருபுறம் தெலங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் முனைப்புக் காட்டுகிறார்கள். இது போதாதென்று, தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதித் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், காங்கிரஸýம் பாஜகவும் இல்லாத மாநிலக் கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுகிறார்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ கலந்து கொள்ளாமல் அபிஷேக் சிங்வியை அனுப்பி இருக்கிறார்கள். தெலங்கானா ராஷ்டிர சமிதி கலந்துகொள்ளவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாயாவதி கலந்து கொள்ளாமல் பிரதிநிதியை அனுப்பி இருக்கிறார். மம்தா பானர்ஜி கூட்டிய பேரணி என்பதால் இடதுசாரிகள் கலந்து கொள்ளவில்லை. எதிர்பார்த்தது போலவே பிஜு ஜனதா தளம் ஒதுங்கிக் கொண்டிருக்கிறது.

கொல்கத்தாவில் நடந்த ஐக்கிய இந்தியப் பேரணியை, எதிர்க்கட்சிகளின் பேரணி என்று கூறுவதைவிட, மாநிலக் கட்சிகளின் கூட்டணி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட கட்சிகளுக்கு அவரவர் மாநிலத்தில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக வலுவாக இல்லை. 

ஏற்கெனவே, காங்கிரûஸ அகற்றி நிறுத்திவிட்டு உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை அறிவித்து விட்டிருக்கின்றன. 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் போட்டியிட்ட ரேபரேலி, அமேதி என்று இரு தொகுதிகளை மட்டும்தான் காங்கிரஸால் வெற்றி பெற முடிந்தது. 2009-இல் தனித்துப் போட்டியிட்டபோது காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த முறை தனித்துப் போட்டியிட்டு அதைவிட அதிக இடங்களில் வெற்றிபெற முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. 

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வெற்றி பெற்றதுபோல, உத்தரப் பிரதேசத்திலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட முடியும் என்று காங்கிரஸ் கட்சி நினைப்பதில் தவறில்லை. அதே நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தங்களது வாக்கு வங்கியைப் பாதிக்கக்கூடும் என்று சமாஜவாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கருதுகின்றன. காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் அது பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து அந்தக் கட்சிக்கு சாதகமான நிலைமையை ஏற்படுத்திவிடக் கூடும்.

ஆம் ஆத்மி கட்சியும் சரி, காங்கிரஸýடன் கூட்டணிக்குத் தயாராக இல்லை. தில்லியிலும், பஞ்சாபிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறது. அநேகமாக பிகாரிலும்கூட ராஷ்ட்ரீய ஜனதா தளம் அமைக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளப்படாது என்றுதான் தோன்றுகிறது. மேற்கு வங்கம், ஒடிஸா, தெலங்கானா, ஆந்திரம்  ஆகிய மாநிலங்களிலும் மாநிலக் கட்சிகள் காங்கிரûஸச் சேர்த்துக் கொள்ளாது என்பதுதான் நிலைமை. கர்நாடகத்திலும் மக்களவைத் தேர்தல் வரை, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணி தொடருமா என்பது கேள்விக்குறியாகத் தோற்ற
மளிக்கிறது.

1984-இல் தொடங்கி 2014 வரை ஒன்பது மக்களவைத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 2009-இல்தான் மாநிலக் கட்சிகள் மிக அதிகமான வாக்குகளைப் பெற்றன. 1984-இல் மிகவும் குறைவான 43.5% வாக்குகளும், 2009-இல் 52.6% வாக்குகளும் மாநிலக் கட்சிகள் பெற்றன. 2014-இல் மாநிலக் கட்சிகள் பெற்ற வாக்குகள் 49.2%.

மாநிலக் கட்சிகளின் வாக்கு விகிதம் கணிசமாக இருந்தாலும்கூட, மக்களவைத் தேர்தல்களில் அந்தக் கட்சிகள் ஏதாவது ஒரு தேசியக் கட்சியுடன் தேர்தலுக்கு முன்போ அல்லது பின்னரோ கூட்டணி அமைத்ததால் மட்டுமே ஆட்சியில் அமர முடிந்திருக்கிறது. அந்தக் கட்சிகள் பெறும் வாக்குகளுக்கு நிகரான அளவுக்கு இடங்களில் அவை வெற்றிபெற முடிந்ததில்லை என்பதுதான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் செய்தி.கொல்கத்தா பிரிகேட் பேரேட் மைதானத்தில் நடந்த இந்திய ஐக்கியப் பேரணி மூன்று செய்திகளைத் தெரிவிக்கிறது. "நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அகற்றுவது என்பது முதலாவது இலக்கு; தேர்தலுக்குப் பிறகுதான் யார் பிரதமர் என்று அறிவிக்கப்படும் என்பதன் மூலம் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் அல்ல என்பது இரண்டாவது செய்தி; பாஜகவை வீழ்த்தும் அதே நேரத்தில், காங்கிரஸýம் வலுவடைந்துவிடக் கூடாது என்பது மற்றொரு இலக்கு.'

எதிர்க்கட்சிகள் ஒருங்கிணையும் போதெல்லாம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது உண்மை. ஆனால், மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்க பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் என்று தேசியக் கட்சிகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலில் உருவான மாநிலக் கட்சிகள், இப்போது பாஜகவுக்கு எதிராகக் கூடுவதும் பிரிவதும் பரபரப்பை ஏற்படுத்த உதவுமே தவிர, அரசியல் மாற்றத்துக்கு வழிகோலுமா என்பது சந்தேகமாக இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com