தலையங்கம்

அக்கறையின்மைதான் காரணம்!

ஆசிரியர்

அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 முதல் லோக்பால் நியமனத்தை வலியுறுத்தி, அண்ணா ஹசாரே 
மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். உச்சநீதிமன்றமும் ஊழலுக்கு எதிரான லோக்பால் அமைப்பை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு அரசுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. லோக்பால் சட்டத்தின் கீழ் எட்டு பேர் கொண்ட தேடுதல் குழுவின் பரிந்துரையை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது. 
2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி லோக்பால் மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமானது. லோக்பால் சட்டத்தின்படி, எட்டு பேர் கொண்ட தேடுதல் குழு நியமிக்கப்பட்டு, லோக்பாலாக நியமிப்பதற்கான பெயர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். 
லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட்டு ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் கழிந்த பிறகுதான் தேடுதல் குழு அமைக்கப்பட்டு லோக்பாலுக்கான பணி தொடங்கியது. 2018 செப்டம்பரில் காமன் காஸ் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்த பிறகுதான் தேடுதல் குழுவை அமைக்க அரசு முற்பட்டது.
ஒருவழியாகத் தேடுதல் குழு நியமிக்கப்பட்டது என்றாலும், தேடுதல் குழுவின் செயல்பாட்டிற்கான அலுவலகமோ, ஊழியர்களோ, கட்டமைப்பு வசதிகளோ எதுவுமே செய்யப்படவில்லை. தேடுதல் குழுவுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் உடனடியாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டிருக்கிறது.
லோக்பாலுக்கு அப்போது ஆதரவளித்த பாஜக, ஆட்சிக்கு வந்தவுடன் காங்கிரஸ் கட்சியைப் போலவே லோக்பால் அமைப்பதில் அக்கறை காட்டவில்லை. பாஜகவும் சரி, காங்கிரஸ் கட்சியும் சரி, இரண்டுமே ஆரம்பம் முதலே லோக்பால் மசோதாவைப் பொருத்தவரை முனைப்புக் காட்டவில்லை என்பதுதான் உண்மை. பாஜக எதிர்க்கட்சியாக இருந்தபோது லோக்பால் மசோதாவை தீவிரமாக ஆதரித்தது. அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு நடத்திய நாடு தழுவிய அளவிலான போராட்டத்தை பாஜக மட்டுமல்ல, ஏனைய எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன. போராட்டம் வலுத்ததைத் தொடர்ந்து வேறுவழியில்லாமல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013-இல் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சட்டமாக நிறைவேற்றியது. 
லோக்பால் அமைக்கப்படாமல் இருப்பதும், அதன் தலைமைப் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்படாமல் இருப்பதும் அரசியல் காரணங்களுக்காகத்தானே தவிர, அதில் நிர்வாகச் சிக்கல் எதுவும் இல்லை. இந்தக் காலதாமதத்திற்குப் பின்னால் இருப்பது அரசியல். 
தேடுதல் குழுவின் பரிந்துரைப் பட்டியலிலிருந்து லோக்பாலை தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும். பிரதமரின் தலைமையிலான அந்தத் தேர்வுக் குழுவில் மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, சட்ட வல்லுநர் ஒருவர் ஆகியோர் இடம்பெற வேண்டும் என்கிறது லோக்பால் சட்டம். அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவர், மக்களவையில் இல்லை என்பதைக் காரணம் காட்டி, தேர்வுக் குழு கூடாமல் காலம் தாழ்த்தப்படுகிறது என்பதால்தான் லோக்பால் நியமனம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
குறைந்தது 55 உறுப்பினர்களாவது மக்களவையில் இருந்தால் மட்டுமே, எந்த ஒரு கட்சிக்கும் எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்து தரப்பட வேண்டும் என்பது விதி. அதனால் மக்களவையில் 44 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தைப் பெற முடியவில்லை. 1980-லும், 1984-லும்கூட, போதிய உறுப்பினர்கள் இல்லாததால் இதேபோல எந்த ஒரு கட்சிக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து தரப்படவில்லை. முன்னுதாரணங்களின் அடிப்படையில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸின் எதிர்க்கட்சி அந்தஸ்து கோரிக்கையை நிராகரித்திருக்கிறார். அவரது முடிவில் குறை காண முடியாது. 
ஆனால், காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை என்பதாலும், எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவியில் ஒருவர் இல்லை என்பதாலும் லோக்பால் தேர்வுக் குழு செயல்படாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர், சிபிஐ இயக்குநர் ஆகியோரின் தேர்விலும்கூட எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினராக இடம்பெற வேண்டும் என்பது விதி. ஒரு சிறிய விதிமுறைத் திருத்தத்தின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையில் உள்ள மக்களவை எதிர்க்கட்சியின் தலைவரை அந்த நியமனங்களுக்காக எதிர்க்கட்சித் தலைவராகக் கருதலாம் என்பதை அரசு ஏற்றுக்கொண்டிருக்கிறது. 
அப்படி இருக்கும்போது, லோக்பால் தேர்வுக் குழுவிலும் அரசு அதே வழிமுறையைப் பின்பற்றுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? தன்னை உறுப்பினராக அறிவிக்காமல் சிறப்பு அழைப்பாளராக அழைத்ததை ஏற்றுக்கொள்ளாமல் மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்வுக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் லோக்பால் நியமனத்தில் ஈடுபாடு காட்டாததன் விளைவால்தான், இந்தப் பிரச்னை தீர்வு எட்டப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. 
உச்சநீதிமன்றத்தின் உத்தரவும், அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதமும் மட்டுமே லோக்பால் அமைப்பை ஏற்படுத்திவிடாது. அரசியல் கட்சிகளுக்கு ஊழலுக்கு எதிரான அமைப்பை ஏற்படுத்துவதில் அக்கறை ஏற்படாதவரையில், லோக்பால் விவாதமாகத்தான் தொடருமே தவிர, நடைமுறைச் சாத்தியம் ஆகப்போவதில்லை!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT