கழிவுநீர்த் தொட்டி மரணங்கள்!

இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்தும்கூட, மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் அவலம் தொடர்கிறது

இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்தும்கூட, மனிதர்களே மனிதக் கழிவுகளை அகற்றும் அவலம் தொடர்கிறது. 1993-இல் மனிதர்கள் மலம் அள்ளுவதை தடை செய்ய சட்டம் நிறைவேற்றப்பட்டது. 2013-இல் அந்தச் சட்டத்தில் திருத்தமும் கொண்டுவரப்பட்டது. அப்படியும்கூட, எந்தவிதப் பயனோ மாற்றமோ இல்லாத நிலை தொடர்கிறது.
 கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கியபோது விஷவாயுவால் தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். இதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம் ஊராட்சியில் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கியபோது, விஷவாயு தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமை பலியாகியிருக்கிறார்கள்.
 குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள விடுதி ஒன்றின் கழிவுநீர்த் தொட்டியை கடந்த ஜூன் 15-ஆம் தேதி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி ஏழு பேர் இறந்தனர். அதேபோல, ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் கடந்த புதன்கிழமை மழைநீர் வடிகால் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டதை சீராக்க, தொட்டியில் இறங்கிய நான்கு பேர் உயிரிழந்தனர். ஏப்ரல் மாதம் குருகிராமில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தப்படுத்த உள்ளே இறங்கிய இரண்டு துப்புரவுத் தொழிலாளிகள் அதற்குள்ளேயே விழுந்து மாண்டிருக்கிறார்கள்.
 துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. துப்புரவுத் தொழிலாளர்களின் நலன் பேணுவது அதன் குறிக்கோள். அந்த ஆணையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரப்படி, 2017 முதல் ஐந்து நாள்களுக்கு ஒருமுறை கழிவுநீர்த் தொட்டியில் இறங்கும் தொழிலாளி ஒருவர் சராசரியாக உயிரிழக்கிறார். இதிலிருந்து, துப்புரவுத் தொழிலாளர்களே நேரடியாகக் கழிவுநீர்த் தொட்டிகளில் இறங்கி சுத்தப்படுத்துவதைத் தடை செய்யும் 1993 சட்டம் எந்த அளவுக்கு மீறப்படுகிறது என்பது வெளிப்படுகிறது.
 1993-இல் துப்புரவுத் தொழிலாளிகள் மனிதக் கழிவுகளை அகற்றுவது சட்டப்படி தடை செய்யப்பட்டது என்றால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2013-இல் அந்தச் சட்டத்தை மேலும் வலுப்படுத்த அதில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. மனிதத் துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் மறுவாழ்வுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்தனைக்குப் பிறகும்கூட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் நேரடியாக துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவுநீர்த் தொட்டிகளிலும், கழிவுநீர் ஓடைகளிலும் இறங்கி வேலை செய்வதற்கு வற்புறுத்தப்படுகிறார்கள். இதற்கு அவர்களது வறுமையும், பிறப்பும், அதிகாரிகளின் இரக்கமற்ற மனோபாவமும்தான் காரணம்.
 திருத்தப்பட்ட "துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் மறுவாழ்வுச் சட்டம் - 2013'-இன் 7-ஆவது பிரிவின்படி, பாதுகாப்புக் கவசம் உள்ளிட்டமுன்னேற்பாடுகள்இல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்களைச் செயல்படப் பணித்தல் சட்டப்படி குற்றம். அதற்கு தண்டனையோ, அபராதமோ - இவை இரண்டுமோ விதிக்கப்படலாம். அப்படியிருந்தும், அது குறித்துக் கவலைப்படாமல் கழிவுநீர்த் தொட்டிகளிலும் கழிவுநீர் ஓடைகளிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் நேரடியாக இறக்கப்பட்டு துப்புரவு செய்ய பணிக்கப்படுகிறார்கள் என்றால், அதிகாரிகள் வர்க்கம் அந்தச் சட்டம் குறித்துக் கவலைப்படவில்லை என்றுதான் பொருள்.
 2014-இல் பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவியேற்றபோது இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்ய செயல்படை ஒன்று அமைக்கப்பட்டது. அதன் முதல்கட்ட ஆய்வின்படி, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளிகளின் எண்ணிக்கை 53,236. இது 12 மாநிலங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை மட்டுமே. பல மாநிலங்கள் மனித துப்புரவுத் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன, மறைக்கின்றன.
 மனித துப்புரவுத் தொழிலாளர்களின் கழிவுநீர்த் தொட்டி மரணங்களுக்கு இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன. முதலாவது காரணம், சமூக ரீதியிலானது. காலங்காலமாக துப்புரவுத் தொழிலாளர்கள் மீதான சமூகத் தீண்டாமை முக்கியமான காரணம்.
 இரண்டாவது காரணம், எத்தனையோ தொழில்நுட்பம் வந்தும்கூட, அதில் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகள் முதலீடு செய்யாமல், இன்னும்கூடக் கழிவுநீர்த் தொட்டிகளில் துப்புரவுத் தொழிலாளர்களை நேரடியாக இறக்கி சுத்தப்படுத்த வற்புறுத்துவது.
 துப்புரவுத் தொழிலாளர் சட்டத்தை மீறுபவர்கள் தண்டிக்கப்பட்டால், கழிவுநீரில் இறங்கிப் பணியாற்றும்போது மரணமடையும் துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சம்பவங்களும் தொடராது, அதிகரிக்காது. இந்தப் பிரச்னையில் அதிகார வர்க்கமும், ஒப்பந்தக்காரர்களும் மட்டுமல்லாமல் நீதித் துறையும் மெத்தமான இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான், தொடரும் அசம்பாவிதங்கள்.
 தலித்திய அரசியல் கட்சிகளும்கூட, துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்து அதிகம் கவலைப்படுவதே இல்லை. அவர்கள் கணிசமான வாக்கு வங்கியாக இல்லாமல் இருப்பதும், தலித்துகளில் தீண்டத்தகாத தலித்துகளாக அவர்கள் கருதப்படுவதும் அதற்கு முக்கியமான காரணம்.
 துப்புரவுத் தொழிலாளர்களுக்கு கணிசமான ஊதியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதுடன் பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படுவதன் மூலம் ஓரளவுக்கு இந்தக் களங்கத்தைத் துடைக்க முடியும். இந்தக் களங்கம் தொடரும்வரை, கழிவுநீர்த் தொட்டி மரணங்களும் தொடரத்தான் செய்யும்!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com