மாயாவதியின் முடிவு!

அரசியல் இயக்கங்களும், தனிநபர் செல்வாக்கில் உருவான கட்சிகளும்

அரசியல் இயக்கங்களும், தனிநபர் செல்வாக்கில் உருவான கட்சிகளும் குடும்பக் கட்சிகளாக மாறுவது என்பது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்தியாவின் முன்னோடி அரசியல் கட்சியும், விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய இயக்கமுமான காங்கிரஸ் கட்சி குடும்பக் கட்சியாக மாறியது. அதைப் பின்பற்றி பல கட்சிகளும் குடும்ப அரசியலை வரித்துக்கொண்டன. 
இப்போது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் குடும்பக் கட்சியாக மாறுகிறது.
17-ஆவது மக்களவைத் தேர்தலில் மத்தியிலும், உத்தரப் பிரதேசத்திலும் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ள, அதுவரை எதிரும் புதிருமாக இருந்த சமாஜவாதி கட்சியும், மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் தங்களது மனமாச்சரியங்களை ஒதுக்கிவிட்டு இணைந்து போட்டியிடத் தீர்மானித்தன. அஜித் சிங்கின் ராஷ்ட்ரீய லோக்தள கட்சியையும் இணைத்துக்கொண்டு வலுவான மூன்று கட்சிக் கூட்டணி அமைத்து பாஜகவை எதிர்கொள்ள முற்பட்டன.
போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவெடுத்தபோதே, அந்த மூன்று கட்சிக் கூட்டணி வலுவிழந்துவிட்டது. கடந்த 2014-இல் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியாத பகுஜன் சமாஜ் கட்சி, 10 இடங்களிலும், சமாஜவாதி கட்சி முந்தைய தேர்தலில் வெற்றி பெற்றிருந்த ஐந்து இடங்களிலும் வெற்றி பெற முடிந்ததே தவிர, பாஜகவின் வெற்றி வாய்ப்பை பெரிய அளவில் அந்தக் கூட்டணியால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த சில நாள்களிலேயே, கூட்டணியின் படுதோல்விக்கு சமாஜவாதி கட்சியினரை குற்றம்சாட்ட முற்பட்டார் மாயாவதி. 2014-இல் ஓர் இடத்தில்கூட வெற்றி  பெற முடியாத பகுஜன் சமாஜ் கட்சி, இந்த முறை 10 இடங்களில் வெற்றி பெற்றதற்கு சமாஜவாதி கட்சியின் யாதவர் வாக்கு வங்கிதான் காரணமென்பதை ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை. கடந்த திங்கள்கிழமை சமாஜவாதி கட்சியுடனான தனது கட்சியின் உறவை அதிகாரபூர்வமாக முறித்துக்கொண்டார் அவர். இனிவரும் தேர்தல்
களில் யாருடனும் கூட்டணி அமைத்துக் கொள்வதில்லை என்றும், தனித்துப் போட்டியிடுவது என்றும் மாயாவதி அறிவித்தார். 
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இப்போது புதியதொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தனது சகோதரர் ஆனந்த்குமாரை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணைத் தலைவராகவும், அவரது மகனும், மாயாவதியின் மருமகனுமான ஆகாஷ் ஆனந்தை தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்திருக்கிறார் அவர். தலித்துக்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி, பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்காக கன்ஷிராமால் தொடங்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது புதியதொரு பாதையில் 
பயணிக்க முற்பட்டிருக்கிறது. 
கூட்டணி அமைப்பதும், கூட்டணியிலிருந்து விலகுவதும் மாயாவதிக்கு எப்படி சகஜமோ, அதேபோல திடீர் அரசியல் முடிவுகளை எடுப்பதும் அவருக்குப் புதிதல்ல. கடந்த ஆண்டு மே மாதம்தான், தனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் பகுஜன் சமாஜ்  கட்சியில் எந்தவிதப் பொறுப்புகளும் வகிக்கக்கூடாது என்று அவர் அறிவித்தார். இப்போது தனது சகோதரரை துணைத் தலைவராக்கியிருக்கிறார். 
கடந்த சில மாதங்களாகவே ஆனந்த்குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்தின் முக்கியத்துவம் பகுஜன் சமாஜ் கட்சியில் அதிகரித்து வருகிறது. 24 வயது ஆகாஷ்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் மாயாவதியின் வலது கரமாகச் செயல்பட்டார். ஆனால், தேசிய ஒருங்கிணைப்பாளர் என்கிற முக்கியமான பொறுப்புக்கு மாயாவதி அவரை தேர்ந்தெடுப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 
இந்தியாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அதிமுக ஆகிய நான்கு கட்சிகள் மட்டும்தான் எந்தவொரு தனிநபரின் கட்டுப்பாட்டிலோ, குடும்பத்தின் கட்டுப்பாட்டிலோ இல்லாமல் செயல்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பாஜக இயங்குகிறது என்றாலும், அந்தக் கட்சி வகுக்கப்பட்ட அரசியல் நெறிமுறைகளின் அடிப்படையில்தான் இப்போதும் செயல்படுகிறது என்பதை 
ஜெ.பி. நட்டா செயல் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வெளிப்படுத்துகிறது.
பிஜு ஜனதா தளம் (நவீன் பட்நாயக்), ஐக்கிய ஜனதா தளம் (நிதீஷ் குமார்), ஆம் ஆத்மி கட்சி (அரவிந்த் கேஜரிவால்) ஆகிய மூன்று கட்சிகள் மட்டும்தான் தனிநபர் செல்வாக்கின் அடிப்படையிலான கட்சிகளாக செயல்படுகின்றன. தனிநபர் கட்சிகளாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் இப்போது குடும்ப அரசியலை வரித்துக் கொண்டிருக்கும் கட்சிகளாக மாறிவிட்டிருக்கின்றன.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் திமுகவைத் தவிர, காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய குடும்பக் கட்சிகள் அனைத்துமே வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு திமுகவின் செல்வாக்கைவிட பரவலாகக் காணப்பட்ட பாஜக மீதான எதிர்ப்பும், அதன் விளைவாக காங்கிரஸ் இடம் பெற்றிருந்ததால் திமுக கூட்டணிக்குக் கிடைத்த ஆதரவும்தான் காரணமென்று கூற வேண்டும். 
தலித் மக்களின் மேம்பாடு என்கிற உயரிய இலக்குடன் கன்ஷிராமால் தொடங்கப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது மாயாவதியின் குடும்பக் கட்சியாக மாறுகிறது. அரசியல் கட்சிகள் குடும்பக் கட்சிகளாக மாற்றப்படுவதற்கு காரணம், கோடிக்கணக்கிலான மதிப்பிலுள்ள கட்சியின் சொத்துகள்தான் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com