தலையங்கம்

போதும்,  உதட்டளவு கரிசனம்!

ஆசிரியர்


திடீரென்று நமது அரசியல் கட்சிகளுக்கு மகளிர் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது. ஒடிஸாவில் நவீன் பட்நாயக்கின் ஆளும் பிஜு ஜனதா தளம் மக்களவைத் தேர்தலில் தனது வேட்பாளர் பட்டியலில் மகளிருக்கு 33% இடங்களை ஒதுக்குவதாக அறிவித்தது. அடுத்த அறிவிப்பு மேற்கு வங்கத்திலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜியால் வெளியிடப்பட்டது. திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 இடங்களில் 19 இடங்களை மகளிருக்கு ஒதுக்குவதாக அறிவித்து, தனது வேட்பாளர் பட்டியலில் பெண் வேட்பாளர்களுக்கு 41% ஒதுக்கீடு செய்திருக்கிறது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலேயே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணமூல் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டவர்களில் 35% மகளிர் இருப்பதை உறுதி செய்திருந்தார். இப்போது அது 41%-ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
1990-இல் முன்னாள் முதல்வரும், நவீன் பட்நாயக்கின் தந்தையுமான பிஜு பட்நாயக்தான் இந்தியாவில் முதல் முறையாக பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் 33% மகளிர் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியவர். 2012-இல் அவரது மகன் முதல்வர் நவீன் பட்நாயக் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளிலும், நகராட்சி அமைப்புகளிலும் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 50%-ஆக அதிகரித்தார். 
தேசிய அளவில் மகளிருக்கு இடஒதுக்கீடு என்கிற கருத்தை முதன்முதலில் முன்மொழிந்தது அன்றைய ராஜீவ் காந்தி அரசுதான். பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் 33% மகளிருக்கு  ஒதுக்கீடு செய்ய ராஜீவ் காந்தி அரசு கொண்டுவந்த சட்டம் வழிகோலியது. 2008-இல் 108-ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி மக்களவையிலும், சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் கட்டாயமாக்குவது என்று முன்மொழியப்பட்டது. 
அந்த மசோதா 2010-இல் மாநிலங்களவையின் ஒப்புதல் பெற்றும்கூட, மக்களவையால் நிறைவேற்றப்படாமல் 2014-இல் 15-ஆவது மக்களவை காலாவதியானதைத் தொடர்ந்து, அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இப்போது 17-ஆவது மக்களவைக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், மீண்டும் மகளிருக்கான இடஒதுக்கீடு முக்கியத்துவம் பெற்றிருப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 39.7 கோடியாக இருந்த  பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, 2019-இல் 8.8% அதிகரித்து 43.2 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.4% மட்டுமே அதிகரித்திருக்கிறது என்பதையும் நாம் உணர வேண்டும். 1980-இல் வெறும் 51%-ஆக மட்டுமே இருந்த பெண்களின் வாக்குப்பதிவு, 2014 தேர்தலில் அதுவரை இல்லாத அளவில் 65.3%-ஆக உயர்ந்தது. 
கடந்த 5 ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் 30-இல் 22 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், மொத்த மக்களவை வேட்பாளர்களில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வெறும் 8% மட்டுமே என்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களில் 11% மட்டுமே மகளிர் என்பதும், மகளிருக்கான இடஒதுக்கீடு எந்தளவுக்கு அவசியமாகிறது என்று எடுத்தியம்புகின்றன.
2017-இல் வளர்ச்சி அடையும் சமுதாயங்கள் குறித்து சர்வதேச அளவில் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளிலும், அரசியல் கட்சிகளிலும் பெண்களுக்கான இடம் குறித்த அந்த ஆய்வில், 193 நாடுகளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை அமைப்புகளிலுள்ள பெண் பிரதிநிதித்துவத்தில் இந்தியா 143-ஆவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்திருக்கிறது. உலக  சராசரியான 22%-இல், இந்திய நாடாளுமன்ற அமைப்புகளில்  மகளிரின் பங்கு 11% மட்டுமே என்பதிலிருந்து எந்த அளவுக்கு மகளிர் பிரதிநிதித்துவத்தில் பின்தங்கி இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இப்போதைய நிலையில் 20 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் 13 லட்சம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவி வகிக்கிறார்கள். மகளிருக்கான பிரதிநிதித்துவம் என்பது ஆண்களின் கைப்பாவைகளாகச் செயல்படும் பெண்களின் பிரதிநிதித்துவம் என்கிற தவறான கருத்தை இவர்கள் பொய்யாக்கி இருக்கிறார்கள். பஞ்சாயத்துராஜ் அமைப்புகளில் பெண்களுக்குக் கிடைத்திருக்கும் முக்கியத்துவமும், வாய்ப்பும் சட்டப்பேரவை மக்களவையில் பிரதிபலிக்க வேண்டிய காலகட்டம் வந்திருப்பதைத்தான் பிஜு ஜனதா தளமும், திரிணமூல் காங்கிரஸும் தங்களது வேட்பாளர்களின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றன. ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிபடுத்தப் போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்திருப்பதன் பின்னணியும் இதுதான்.
நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் ஆண் உறுப்பினர்களுக்கு நிகரான பங்களிப்பை உறுதிப்படுத்த மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை. பெண்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து சமூக நலத் திட்டங்களையும், இலவசங்களையும் அறிவிக்கும் எல்லா முன்னணி அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலில் சரிபாதி இடம் பெண்களுக்குத் தரப்படுவதை உறுதிப்படுத்தினாலே போதும். 
சர்வதேச அளவில் அதிகார மையத்தில் அதிக அளவில்  பெண்கள் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறிவிடும். 
பாஜகவும், காங்கிரஸும், இடதுசாரி கட்சிகளும் முக்கியமான எல்லா மாநில கட்சிகளும் மகளிர் ஒதுக்கீடு குறித்து  உதட்டளவு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்தி, சரிபாதி இடங்களில் பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். பிஜு ஜனதா தளமும், திரிணமூல் காங்கிரஸும் இதற்கு வழிகாட்டி இருக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT