பழையன கழிதல்...

இந்தியாவிலேயே மிகவும் சிறப்பாக அரசுப் போக்குவரத்துத் துறை இயங்கிய மாநிலமாக, தமிழகம் ஒரு காலத்தில் இருந்து வந்தது.


இந்தியாவிலேயே மிகவும் சிறப்பாக அரசுப் போக்குவரத்துத் துறை இயங்கிய மாநிலமாக, தமிழகம் ஒரு காலத்தில் இருந்து வந்தது. ஆனால், இப்போது நிலைமை அதுவல்ல. ஏனைய பல மாநிலங்களைப்போல தமிழகத்தின் பொது போக்குவரத்துத் துறையும் இழப்பில் இயங்குவது மட்டுமல்லாமல், தரத்திலும் சேவையிலும்கூட எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுப்பவையாக இல்லை. 
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.603 கோடி செலவில் 2,316 புதிய ஊர்திகளை வாங்கி அறிமுகப்படுத்தியிருக்கிறது. 
தமிழகத்தின் எட்டு அரசுப் போக்குவரத்து நிறுவனங்களில்  21,678 ஊர்திகள் செயல்படுகின்றன. புதிய ஊர்திகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளும் அநேகமாக அரசுப் போக்குவரத்து நிறுவனங்களால் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதும், அரசு அதிக அளவில் ஊர்திகளை இயக்கியதால்தான் தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் சாலைகள் அமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க சாதனை.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில சமூக ஆர்வலர்கள் அண்மையில் பெற்றிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அடைய வைக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தின் எட்டு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் ஊர்திகளைப் பராமரிப்பதற்காக ரூ.1,700 கோடி செலவிடப்பட்டிருக்கிறது என்பது அந்தத் தகவல்களில் ஒன்று. இந்த ரூ.1,700 கோடியை பராமரிப்புக்குச் செலவிட்டதற்குப் பதிலாக 6,200 புதிய ஊர்திகளை வாங்கியிருக்கலாமே என்று கேள்வி எழுப்பப்படுகிறது. 
தனியார் வாகனங்களைப்போல அரசின் நிறுவனங்கள் அவ்வப்போது புதிய புதிய ஊர்திகளை வாங்குவதும், பழைய ஊர்திகளை பராமரிப்பதற்குப் பதிலாக விற்று விடுவதும் ஏற்புடைய அணுகுமுறையல்ல. பராமரிப்புக்காக செலவிடப்பட்டிருக்கும் பெரும் பணம் ஊழலால் விரயமாக்கப்பட்டதாக இருந்துவிடலாகாது என்பதை மட்டும் உறுதிப்படுத்த வேண்டும். 
மிகவும் பழைய ஊர்திகள் பெரும் பொருள்செலவில் பராமரிக்கப்படுவதைவிட, அவை நிராகரிக்கப்பட்டு புதிய ஊர்திகளை அறிமுகப்படுத்துவது என்பது தவறில்லை. ஆனால், அதற்கு தேவைப்
படும் பெரும் முதலீட்டை ஒதுக்கீடு செய்யும் நிலையில், அரசின் நிதி நிலைமை இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது படிப்படியாக செயல்படுத்த வேண்டிய வழிமுறையே தவிர, ஒரேயடியாக நடைமுறைப்படுத்துவது என்பது சாத்தியமல்ல. 
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, போக்குவரத்து ஊர்திகளின் பராமரிப்புச் செலவில் கணிசமான தொகை உதிரி பாகங்களை வாங்குவதற்கும், டயர்களை மாற்றுவதற்கும்தான் செலவிடப்பட்டிருக்கிறது. போக்குவரத்து ஊர்திகளின் டயர்களை இரண்டு லட்சம் கி.மீ.களுக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஒரு முறையோ இரு முறையோ ரீ-டிரேடிங் எனப்படும் மேம்படுத்துதல் முறையை கையாளலாம் என்றாலும்கூட, அவை ஊர்திகளின் பாதுகாப்பான ஓட்டத்துக்கு உத்தரவாதம் அளிக்காது. 
உதிரி பாகங்களைப் பொருத்தவரை செலவினத்தைக் குறைப்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் நிராகரிக்கப்பட்ட ஊர்திகளிலிருந்து பழைய உதிரி பாகங்களை பயன்படுத்தும் போக்கு காணப்படுகிறது. அதன் மூலம் புதிதாக உதிரி பாகங்களை வாங்குவதை தவிர்க்க இயலும். ஆனால், இதன் விளைவாக ஆங்காங்கே அரசுப் போக்குவரத்து ஊர்திகள் நின்றுவிடுவதும், அதனால் அரசுப் போக்குவரத்து ஊர்திகளின் மீதான நம்பகத்தன்மை குறைவதும் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. இதற்குப் பதிலாக புதிய உதிரி பாகங்களைப் பயன்படுத்துவதும், மிகவும் பழுதுபட்ட ஊர்திகளைப் போக்குவரத்துக் கழகங்கள் நிராகரிப்பதும்தான் புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.
பழைய போக்குவரத்து ஊர்திகளை, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் முடிந்தவரை இயக்குவது என்கிற கொள்கை குறித்த மறுபரிசீலனை அவசியமாகிறது. பழுதுபட்ட உதிரி பாகங்கள், தேய்மானம், அதிகமான டயர்கள், வலுவிழந்துபோன ஊர்திகள் இவையெல்லாம் பராமரிப்புச் செலவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கும் காரணமாகி விடுகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதுபோன்ற ஊர்திகளை இயக்கும்போது ஏற்படும் விபத்துகளுக்கு ஓட்டுநர்களை மட்டுமே குறை கூறுவதும் நியாயமான அணுகுமுறை அல்ல. 
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் போக்குவரத்துக் கழக ஊர்திகளால் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் 13,700  சாலை விபத்துகளில் 4,700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். அந்த விபத்துகளில் அதிகமான விபத்துகளுக்குக் காரணமாக இருந்தது சென்னை  மாநகர் போக்குவரத்துக் கழகம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்த விபத்துகளுக்கு ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல், முறையான பராமரிப்பு இல்லாத பழைய ஊர்திகளும் ஒரு முக்கியமான காரணம்.
தமிழகத்தில் எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்களும் சேர்ந்து நாளொன்றுக்கு ரூ.9 கோடி இழப்பை எதிர்கொள்கின்றன. 
இந்த நிலையிலும்கூட மேலும் 12,000 புதிய ஊர்திகளை வாங்கி சேவையை மேம்படுத்தும் முயற்சியில் தமிழக அரசின் போக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டிருக்கிறது. அது வரவேற்புக்குரிய செயல்பாடு என்றாலும், போக்குவரத்துக் கழகங்களில் காணப்படும் ஊழலை அகற்றி, பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கு வழிகோலி, மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதை அதிகரித்தால் மட்டும்தான் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்கிற அவசியமற்ற, தவறான கோரிக்கையை எதிர்கொள்ள முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com