கேள்வி எழுப்ப ஆள் இல்லையே...

இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான நோய்களுக்கும் சிகிச்சைகளுக்கும் காப்புரிமை வைத்திருக்கும் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களைச் சார்ந்துதான் நாம் இருந்தாக 


இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான நோய்களுக்கும் சிகிச்சைகளுக்கும் காப்புரிமை வைத்திருக்கும் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களைச் சார்ந்துதான் நாம் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. மருந்துகள் மட்டுமல்லாமல், சிகிச்சைக்குத் தேவைப்படும் செயற்கை உடல் உறுப்பு பாகங்கள், அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான அத்தியாவசியமான உபகரணங்கள் ஆகியவற்றைக்கூட இன்னும் நாம் இறக்குமதிதான் செய்கிறோம். பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் விற்பனை செய்வதைவிடப் பல மடங்கு அதிக விலைக்குத்தான் உயிர் காக்கும் மருந்துகளை இந்தியாவில் விற்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகளின் மீதும், மருந்துகளின் விற்பனை விலை மீதும் பல கட்டுப்பாடுகளை விதித்தது என்னவோ உண்மை. இதய அறுவைச் சிகிச்சைக்குத் தேவைப்படும் ஸ்டென்ட் உள்ளிட்ட கருவிகளின் விற்பனைக்கு விலை நிர்ணயம் செய்ததும், பொது (மூலக்கூறு) மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் வரவேற்புக்குரிய முயற்சிகள். கொள்கை அளவில் செய்யப்பட்ட அதுபோன்ற மாற்றங்கள் சாமானியர்களின் மருத்துவத்திலும், மருந்துகளுக்கான செலவிலும் பெரிய அளவில் பயனளித்ததா என்று ஆராய்ந்தால், உற்சாகமான பதிலை அளிக்க முடியவில்லை.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்தியாவில் இடுப்பு மூட்டு மாற்று சிகிச்சைக்கு அறிமுகப்படுத்திய ஏஎஸ்ஆர் எனப்படும் செயற்கை மூட்டு ஏற்படுத்திய பாதிப்பு குறித்து அனைவருக்கும் தெரியும். இப்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடட் என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் டிபூய் இன்டர்நேஷனல் லிமிடெட் அந்த செயற்கை மாற்று மூட்டினை இறக்குமதி செய்து இந்தியாவில் சந்தைப்படுத்தியது; அதனால் பலரும் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றம் வரை போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவ வேண்டிய மாநில அரசின் சுகாதாரத் துறைகளும், மத்திய அரசுமேகூட தொடக்கத்தில் முனைப்புக் காட்டாமல் இருந்த அவலம் மன்னிக்கக் கூடியதல்ல. மாநில அளவிலான குழுவின் பரிந்துரையின் பேரில் மத்திய  நிபுணர் குழு பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்தது. அதனடிப்படையில், தவறான செயற்கை மூட்டு பொருத்தப்பட்ட நோயாளிகளுக்குத் தரப்பட வேண்டிய இழப்பீட்டை மத்திய நிபுணர் குழு நிச்சயித்தது. அந்த முடிவின் அடிப்படையில்  இழப்பீடு கோரியிருக்கும் முதல் நோயாளிக்கு ரூ.74.5 லட்சம் இழப்பீடு வழங்க ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டிருக்கிறது.
இப்போதுதான், இழப்பீடு கோரிய முதலாவது பாதிக்கப்பட்டவருக்கு நிதி இழப்பீடு வழங்குவதற்கான முதல் கட்டம் எட்டப்பட்டிருக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இதை ஏற்றுக்கொள்ளப் போகிறதா, உடனடியாக இழப்பீட்டை வழங்கப் போகிறதா, அதைத் தொடர்ந்து ஏனைய பாதிக்கப்பட்ட நோயாளிகளும் இழப்பீடு பெறுவார்களா என்பதெல்லாம் கானல்நீர் போல் விரிகின்றன. இதைவிடப் பத்து மடங்கு அதிகம் இழப்பீட்டை அமெரிக்காவில் வழங்கும் அந்த நிறுவனம், இந்தியாவில் இழப்பீடு வழங்குவதற்குத் தயங்க என்ன காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இதே வழிமுறையை எல்லா மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கடைப்பிடிக்கின்றன. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆணையத்தின் உத்தரவுகளை மருந்து நிறுவனங்கள் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் நிதர்சனம். தவறான மருந்து தயாரிப்பு, அதிகமான லாபத்துடன் மருந்துகள் விற்பனை செய்வது, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமான விலையில் விற்பது ஆகியவற்றைக் கண்காணித்து, மருந்து நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்துக்கு உண்டு.
2013-14-க்குப் பிறகு தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் தனது கடமையைச் சரியாக ஆற்றுகிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. தவறான விலை நிர்ணயித்துக்காக மருந்து நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் பிணைக் கட்டணத்தைக்கூட அந்த நிறுவனங்கள் செலுத்துவதில்லை. அதை வசூலிப்பதிலும் ஆணையம் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2013-14-இல் ரூ.406.83 கோடிக்கான பிணைக் கட்டணம் விதிக்கப்பட்டதென்றால், நிறுவனங்களிடமிருந்து ஆணையம் வசூலித்திருப்பது ரூ.40.08 கோடி மட்டுமே; அதேபோன்று 2014-15-இல் ரூ.581.10 கோடி பிணைத் தொகையில் ரூ.90.17 கோடி; 2015-16-இல் ரூ.931.63 கோடியில் ரூ.12.23 கோடி; 2016-17-இல் ரூ. 704.12 கோடியில் ரூ.148.42 கோடி மட்டுமே நிறுவனங்களிடமிருந்து ஆணையத்தால் பெற முடிந்திருக்கிறது.
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று தடை உத்தரவு பெற்று விடுகின்றன. ஆணையமும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்குச் சாதகமாக பிணைத்தொகை வசூலிப்பதில் முனைப்புக் காட்டாமல் இருக்கிறது. இது குறித்து தட்டிக் கேட்க இந்தியாவில் வலிமையான நுகர்வோர் அமைப்புகளும் இல்லை. மக்கள் மத்தியில் தங்களது நியாயமான உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வும் இல்லை.
இப்படியிருக்கும் நிலையில், சந்தைப் பொருளாதாரம் என்பது சுரண்டல் பொருளாதாரமாக மாறிவிட்டிருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com