உங்கள் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் நன்றாக அமைய என்னென்ன செய்ய வேண்டும்?

அப்பாடா! எல்லாம் ஆயிற்று. பெண்ணுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து பேரன், பேத்திகள் பிரசவம் பார்த்து........எத்தனையோ செய்தாகிவிட்டது.
உங்கள் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் நன்றாக அமைய என்னென்ன செய்ய வேண்டும்?

அப்பாடா! எல்லாம் ஆயிற்று. பெண்ணுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து பேரன், பேத்திகள் பிரசவம் பார்த்து........எத்தனையோ செய்தாகிவிட்டது. பேரன் பேத்திகளும் இப்போது தலைக்கு மேல் வளர்ந்துவிட்டார்கள். பிள்ளை நல்லபடியாக படித்து வெளிநாடு போய்விட்டான். அவனது மனைவி குழந்தைகள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். வயதான காலத்தில் வேறு என்ன வேண்டும்? ஆஹா! எப்பேர்பட்ட பேறு இது! மற்றவர்கள் நம்மைப் பார்த்து இப்படிச் சொல்லும்போது நம் மனதில் தோன்றும்: ‘எல்லாம் சரி தான். பெற்ற குழந்தைகள் நம்முடன் இல்லையே என்ற குறையை என்ன செய்வது?’ என்று.

மிகவும் உண்மை. ஒரு நிமிடம் யோசியுங்கள்! எத்தனை காலம் தான் அவர்கள் நம்முடன் இருப்பார்கள்? நாம் நமது பெற்றோர்களுடன் எத்தனை காலம் இருந்தோம்? குழந்தைகள் நடக்கத் துவங்கும் போதே நம்மைவிட்டு தூரத்தான் செல்லுகிறார்கள், இல்லையா? கூப்பிடக் கூப்பிட தூர ஓடுகிறார்கள், இல்லையா? அப்போது எத்தனை சந்தோஷப்பட்டோம்? இப்போது ஏன் குறைப்பட்டுக் கொள்ள வேண்டும்? அவர்கள் அவர்களது வாழ்க்கையை வாழட்டும். நாம் நமது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்குவோம்.

இரண்டாவது இன்னிங்க்ஸ் நன்றாக அமைய என்னென்ன வேண்டும்?

பணமின்றி ஓரணுவும் அசையாது

வாழ்க்கைக்கு மிகவும் தேவையானது பணம். மாற்றுக் கருத்தே இல்லை. குருவி மாதிரி சேமித்து வைத்து பெண்ணின் கல்யாணம், பிள்ளையின் படிப்பு என்று செலவழித்தது போக மீதமிருக்கும் பணத்தை இனி உங்களுக்காகப் பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகள், பேரக்குழந்தைகளின் பணத்தேவை பற்றிய யோசனைகள் வேண்டாம். அவர்களுக்குக் கொடுக்காமல் சேமித்து வைத்துள்ள பணத்தை உங்களுக்காக செலவழித்துக் கொள்வதா என்ற குற்ற உணர்ச்சியும் தேவையில்லை. நீங்கள் இத்தனை வருடங்கள் அவர்களைப் பார்த்துக் கொண்டீர்கள்; கல்வி கொடுத்தீர்கள்; உண்ண உணவு, தங்க இடம் எல்லாம் கொடுத்தீர்கள். திருமணமும் செய்து கொடுத்து சொந்தக் காலில் நிற்கத் தேவையானவற்றைச் செய்தாயிற்று. இனி அவர்களுக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பது அவர்களது பொறுப்பு.

இந்த வயதில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதும் சரியல்ல. இப்போது உங்களுக்குத் தேவை அமைதி. சொந்தக் காசில் சூடு வைத்துக் கொள்ள வேண்டாம்.

பசிக்கு சாப்பிடுங்கள்

நன்றாகச் சாப்பிட்டு – கவனிக்கவும்: கன்னாபின்னா என்று இல்லை - நல்ல தூக்கம் தூங்குங்கள். வாழ்வதற்காக மட்டும் சாப்பிடுவது என்று பழகுங்கள். வயதாக வயதாக நமது உடல் உழைப்பு குறைகிறது. சாப்பாடும் அதற்கு ஏற்றாற்போல குறைவாக இருக்க வேண்டும். தூக்கம் வரும்போது தூங்குங்கள். தூக்கத்தைத் தள்ளிப் போடப் போட அதுவும் உங்களிடமிருந்து தூரப்போகும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி, குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருங்கள். இரவு நேரத்தில் எளிமையான ஆகாரம் உண்பது நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். தண்ணீர் நிறையக் குடியுங்கள். உடலில் உள்ள கழிவுகள் வெளியேற தண்ணீர் உதவும்.

ஆரோக்கியம் என்னும் செல்வம்  

ஆரோக்கிய வாழ்விற்கு தேவையானவற்றைச் செய்யுங்கள். மிதமான உடற்பயிற்சி – தினமும் நடைப்பயிற்சி – செய்யுங்கள். நோய்கள் அதி விரைவில் உங்களை பாதிக்கலாம். ஆனால் ஆரோக்கியமாக இருப்பது என்பது கடினமான ஒன்று. இதனால்தான் உடல்நலம் பேணுதல் மிகவும் முக்கியம். அத்துடன் உங்களுடைய மருத்துவ மற்றும் உடல் தேவைகளை நீங்கள் அறிந்திருப்பதும் மிகவும் முக்கியம். நீங்கள் நன்றாக இருப்பதாக நினைக்கும் போதும் ஹெல்த் செக்கப் அவசியம். உங்கள் உடல்நலம் பற்றிய புரிதலுடன் இருங்கள். உடல்நலத்தைப் புறக்கணிக்காதீர்கள். ஆரோக்கியமான சிந்தனை, ஆரோக்கியமான உடல் இரண்டுமே இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆட மிகவும் தேவை.

உடல்நலம் பேணுதல்

சிலருக்கு சிறிய வயதிலேயே உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம். வயதாக ஆக,  இவை அதிகமாகும். அவற்றை அதிகம் பாராட்டாமல் இதுவும் வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு நிலை என்று எடுத்துக் கொள்ளுங்கள். மனதளவில் அவற்றை சிறிய விஷயமாக எண்ணுங்கள். மருந்து மாத்திரைகளை வேளை தவறாமல் சாப்பிடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களுடைய மருத்துவருடன் தொடர்பில் இருங்கள்.

நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை உங்களுக்குத் தந்த பரிசு இவை. உடல்நலக் குறைவு உங்கள் மன நலத்தைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இவற்றின் மேல் அதிக கவனம் செலுத்தினால் நீங்கள் யார் என்பதே மறந்துவிடும். ஒருகாலத்தில் சிரிப்பும் வேடிக்கையான பேச்சுமாய் இருந்த நீங்கள் மறைந்தே போவீர்கள்.

வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கையை அனுபவியுங்கள்   

மிகச் சிறந்த, மிகவும் அழகான பொருட்களை உங்கள் வாழ்க்கைத் துணைக்கு வாங்கிக் கொடுங்கள். உங்கள் பணத்தை உங்கள் துணையுடன் அனுபவியுங்கள். முதல் இன்னிங்க்ஸ் ஆடி முடித்தாயிற்று. இப்போது இரண்டாவது இன்னிங்க்ஸையும் அவருடன் தான் ஆடப் போகிறீர்கள். அதனால் இதுதான் மிகவும் முக்கியம். ஒருநாள் யாரோ ஒருவர் முன்னால் போக வேண்டிவரும். துணைக்காக ஏங்கும் காலம் வரும். அப்போது உங்களிடம் இருக்கும் பணத்தால் அவரைத் திரும்பக் கொண்டு வர முடியாது. அதனால் இருவருமாக வாழ்க்கையை அனுபவியுங்கள். இருவருமாகப் பிடித்த பாட்டுக் கச்சேரிகள், திரைப்படங்கள், சுற்றுலாக்கள், கோவில்கள் போய்வாருங்கள். இரண்டாவது இன்னிங்க்ஸில் உங்கள் காதல் மேலும் வலுப்பெறட்டும்.

எத்தனை வயதானாலும் மனதில் அன்பு  குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையை, வாழ்க்கைத் துணையை, உங்கள் குடும்பத்தை, இந்த உலகத்தை நேசியுங்கள். ஒரு மனிதனுக்கு ஞானமும், பாசமும் இருக்கும்வரையில் அவனுக்கு வயதாவதே இல்லை.

நிகழ்காலம் முக்கியம்

மேடைப் பேச்சாளர் ஒருவர் ஒரு ஜோக் அடித்தார். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

ஒருநிமிட இடைவெளி விட்டு மறுபடியும் அதே ஜோக்கைச் சொன்னார். சிலர் மட்டுமே சிரித்தனர்.

மறுபடியும் சில நிமிடங்களுக்குப் பின் அதே ஜோக்கைச் சொன்னார். யாரும் சிரிக்கவில்லை.

புன்னகையுடன் அவர் சொன்னார்: ‘ஒரே ஜோக் தான். திரும்பத்திரும்ப சொல்லும்போது புளித்து விடுகிறது. மறுபடி மறுபடி சிரிக்க முடியவில்லை. அதே போலத்தான் நடந்து முடிந்த விஷயங்களும்’.

சின்னச் சின்ன விஷயங்களுக்கு மன அழுத்தம் வேண்டாம். உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ பார்த்துவிட்டீர்கள். நல்ல நினைவுகள், தீய நினைவுகள் எல்லாம் உங்கள் மனதில் இருக்கலாம். எப்போதும் நிகழ்காலத்தில் வாழுங்கள். பழைய நினைவுகள் உங்களை அழுத்த இடம் கொடுக்காதீர்கள். எதிர்காலத்தை நினைத்து அச்சப் படாதீர்கள். இப்போதைய நிலையைப் பற்றி சந்தோஷப்படுங்கள். இதனால் சின்ன விஷயங்கள் மறைந்துவிடும்.

பெருமைப்படுங்கள்

உங்களைப் பற்றிய பெருமை உள்ளும் புறமும் நிறைந்திருக்கட்டும். தலைமுடியை வெட்டிக்கொள்வது, நகங்களை வெட்டிக் கொள்வது என்பவை தொடரட்டும். பல் வைத்தியரிடம் போய்வாருங்கள். நீங்கள் வழக்கமாக பூசிக் கொள்ளும் வாசனைத் திரவியங்கள், பவுடர் ஆகியவற்றை தொடர்ந்து வாங்குங்கள்; பயன்படுத்துங்கள். உங்கள் வெளித்தோற்றம் நன்றாக இருக்கும்போது அந்த நிறைவு உங்கள் உள்ளத்திலும் பிரதிபலிக்கும்.

 உங்கள் வயதுக்கேற்ற நவீன உடைகளை அணியுங்கள். உங்களுக்கென்று ஒரு தனித்துவமான ஸ்டைல் இருக்கட்டும். நவநாகரீகமாக இருக்கவேண்டும் என்பதற்காக இளைஞர்கள் அணியும் உடைகளை அணிவது பொருத்தமாக இருக்காது. ஆனால் இத்தனை வருடங்கள் உங்களுக்கென்று ஒரு பாணியை பின்பற்றியிருப்பீர்கள், இல்லையா? அதை தொடருங்கள். ஆடை பாதி. ஆள் பாதி என்பது நினைவில் இருக்கட்டும்.

லேட்டஸ்ட் ஆக இருங்கள்

செய்தித்தாள்களைப் படித்து சமீபத்திய, தினசரி விவரங்களை அறிந்து வைத்திருங்கள். செய்தி சேனல்களைப் பாருங்கள். உலக நிலவரம் தெரிய வரும். இணையத்தில் உங்களுக்கென்று ஒரு கணக்கு வைத்துக் கொண்டு நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள். சமூக வலைத்தளங்களில் பங்கு பெறுங்கள். யார் கண்டார்கள், அங்கு உங்களது பழைய நண்பர்களை மறுபடியும் சந்திக்கலாம்.  நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வயது ஒரு தடையல்ல.

இளமை எனும் பூங்காற்று

இளம் வயதினருக்கும், அவர்களது கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுங்கள். ‘சின்ன பசங்க....’ என்று மனதில் நினைத்துக் கொண்டு முகத்தில் ஒரு ஏளனப் புன்னகையுடன் அவர்களைப் பார்க்காதீர்கள். இன்றைய தலைமுறை நாலும் தெரிந்தவர்கள். அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்களுடன் பேசும்  போது குரலில் அடக்கம் இருக்கட்டும். நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுங்கள் உங்களிடமிருக்கும் பல நல்ல விஷயங்கள் அவர்களிடம் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள்தான் எதிர்காலம். அவர்கள் காட்டிய வழியில் தான் உலகம் நாளை போகும். கேலி கிண்டல் இல்லாத அறிவுரை கொடுங்கள். நேற்று நீங்கள் கடைபிடித்த நல்லொழுக்கங்கள் நாளைக்கும் நீடித்து நிற்கும் என்பதை புரிய வையுங்கள்.

 'எங்கள் காலத்தில்...’ என்று பேசாதீர்கள். இதுவும் உங்கள் காலம்தான். இப்போது நடைபெறும் இந்த நிகழ்காலத்தில் நீங்களும் ஒரு பகுதிதான். வாழ்க்கையை அனுபவியுங்கள்..

பாசிடிவ் எண்ணங்கள்

சிலர் தங்களது வயதான காலத்தை மிகவும் இயல்பாக ஏற்றுக் கொள்ளுகிறார்கள். சிலர் வெறுப்புடனும், கசப்புடனும் எதிர்கொள்ளுகிறார்கள். இனி இருக்கும் காலத்தை வீணடிப்பது சரியல்ல. சந்தோஷத்துடன், பாசிடிவ் ஆன எண்ணங்களுடன் இருப்பவர்களுடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக மாறும். வெட்டி அரட்டை அடிப்பவர்கள்,  பிறரைத் தூற்றுபவர்களை விட்டு விலகுங்கள். இவர்களுடனான உங்கள் நட்பு உங்களை இன்னும் வயதானவர்களாகவும், கையாளக் கடினமானவர்களாகவும் காட்டும்.

தனிமையிலே இனிமை 

இந்த விதி உங்களுக்குச் சற்றுக் கடினமானதாகத் தோன்றக் கூடும். ஆனாலும் சற்று நிதானமாகச் சிந்தித்தால் இதில் உள்ள உண்மைகள் புலப்படும். வயதான காலத்தில் பிள்ளைகளுடன், பெண்களுடன் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகாதீர்கள். குடும்பத்தினருடன் இருப்பது மிகப்பெரிய விஷயம் தான். ஆனால் நம் எல்லோருக்கும் தனிமை சற்றுத் தேவைப்படுகிறது என்பதும் உண்மைதானே? உங்களுடைய பொருளாதாரம் உங்களை தனியாக இருக்க அனுமதிக்காது என்றால் பிள்ளைகளுடன் இருக்கலாம். இல்லையென்றால் தனிமை இனிமைதான். பிள்ளை, பெண்களின் தேவை வேறு. நம் தேவை வேறு. நினைவில் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கைத் துணைவர் இல்லையென்றால் வேறு யாருடனாவது இருக்க முடியுமா என்று பாருங்கள். தனியாக நீங்கள் சமாளித்துக் கொள்ளுவீர்கள் என்றால் இருந்து விடுங்கள்.

பொழுதுபோக்கு

உங்கள் பொழுதுபோக்குகளைத் தொலைத்து விடாதீர்கள். இவை உங்கள் பொழுதுகளை பயனுள்ளதாகச் செய்யும் சக்தி படைத்தவை. உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு இருக்கட்டும். இல்லையென்றால் இப்போது புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். சின்னச்சின்ன பயணங்கள் மேற்கொள்ளலாம். நீண்ட தூரம் நடக்கலாம். செல்லப்பிராணிகள் வளர்க்க ஆரம்பிக்கலாம். தோட்டம் போடலாம். விளையாட்டுக்கள் புதிதாகக் கற்றுக்கொண்டோ அல்லது தெரிந்ததை தொடர்ந்தோ விளையாடலாம். ஓவியம், இசை கற்கலாம். தபால் தலை அல்லது பழைய நாணயங்கள் அல்லது அரிய, பழைய பொருட்கள் சேகரிக்கலாம். என் மாமா ஒருவர் பழைய காலத்தில் புழங்கிவந்த பாக்குவெட்டிகளை சேகரித்து வைத்துள்ளார். விதம்விதமான அந்தப் பாக்குவெட்டிகள் பார்க்கப்பார்க்க பரவசத்தைக் கொடுக்கும்.  உங்களுக்குப் பிடித்ததை சேகரியுங்கள். வாழ்க்கை எத்தனை இனிமையானது என்று புரியும்.

 விழாக்காலம்

திருமணங்கள், மற்றும் சின்னச்சின்ன விழாக்களுக்குப் போய்வாருங்கள். நேரம் போவதுடன் உங்கள் வயது உறவினர்களைப் பார்க்கவும் முடியும். அவர்களுடன் பேசுவது உங்கள் வாழ்க்கையை எடை போட உதவும். புதிதாக எவரையாவது அங்கு சந்திக்க நேரலாம். ஒரு புதிய நட்பு உருவாகலாம். அல்லது நீண்ட நாட்களாக பார்க்காதவர்களைப் பார்க்க நேரிடலாம். பழைய நட்பைப் புதுப்பித்துக் கொள்ளலாம். மொத்தத்தில் வீட்டிலேயே அடைந்து கிடக்காதீர்கள். அருங்காட்சியகம், பறவைகள் சரணாலயம், மிருகக்காட்சி சாலை என்று போய்வாருங்கள். சிறிய வயதில் ரசிக்காதவை இப்போது ரசிக்கக்கூடியதாக மாறியிருக்கும்.

 பேசுவதும் கலைதான்

நிறைய பேசுங்கள். அதே சமயம் அடுத்தவர் பேசும்போது நீங்கள் பேசுவதைக் குறைத்துக்கொண்டு அவர் சொல்லுவதைக் கேளுங்கள். அவர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். யாரோ ஒருவர் உங்களிடம் அகப்பட்டுக் கொண்டார் என்று நினைத்துக் கொண்டு உங்கள் ஆவலாதிகளை அள்ளி விடவேண்டாம். வயதானவர்கள் என்றாலே சிறுவயதுக்காரர்கள் ஓடி ஒளிவார்கள். ஏகப்பட்ட கேள்விகள் வேண்டியது வேண்டாதது என்று கேட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம்தான். உங்கள் சிறுவயது அனுபவத்தைச் சொல்ல ஆரம்பிக்காதீர்கள்.

மன்னியுங்கள்; மன்னிப்புக் கேளுங்கள்; மறந்துவிடுங்கள்

உங்களை யாராவது புண்படுத்தினால் அவர்களை மன்னியுங்கள். நீங்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். வெறுப்புகளை உங்களுடனேயே எடுத்துச் செல்லாதீர்கள். வெறுப்புகள் உங்களை துன்பத்தில் தள்ளும். வாழ்க்கை கசந்து போகும். யார் சரி என்பது இங்கு முக்கியமில்லை. மனதிற்குள் பழிவாங்கும் உணர்ச்சியை வைத்துக் கொண்டிருப்பது நீங்கள் விஷத்தைக் குடித்துவிட்டு அடுத்தவர் இறக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதைப் போல. விஷத்தை நாடாதீர்கள். மன்னியுங்கள்; மறந்துவிடுங்கள். கடந்து செல்லுங்கள்.

 உங்கள் நம்பிக்கை உங்களுடன்

நீங்கள் ஒருவிஷயத்தை நம்பினால் உங்களுடன் இருக்கட்டும் அந்த நம்பிக்கை. மற்றவரையும் நம்ப வைக்க வேண்டும் என்று முயற்சிக்காதீர்கள். இதனால் உங்களுக்கு எரிச்சல் தான் மிஞ்சும். அவர்களுக்கு தேவையான முடிவை அவர்களே எடுப்பார்கள். உங்களது நம்பிக்கையின் படி வாழ்ந்து முன்னுதாரணமாக இருங்கள். உங்களுடைய நம்பிக்கைகளுக்கு உண்மையாக இருந்து, அந்த நினைவுகள் உங்களுக்கு துணையாக இருக்கட்டும்.

சிரித்து வாழுங்கள் 

சிரியுங்கள். வாய்விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும் எத்தனை  அதிர்ஷ்டக்காரர் நீங்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீண்ட நாட்கள் வாழ்க்கையை வாழ்ந்தவர். உங்கள் குடும்பத்திலேயே இத்தனை வருடங்கள் வாழ்ந்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். முழு வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைத்திருக்காது. ஆனால் அந்த பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. சிரிப்பதில் ஒன்றும் தவறில்லை. உங்களுக்கு அருகில் இருக்கும், சுற்றி இருக்கும் நகைச்சுவையை உணரக் கற்றுக்கொள்ளுங்கள்.

 யார் என்ன சொன்னால் என்ன?

மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி மறந்தே விடுங்கள். எப்படியும் பேசப்போகிறார்கள்; நினைக்கப் போகிறார்கள். பேசட்டும்; நினைக்கட்டும் நீங்கள் அதைப்பற்றிக் கவலை கொள்ளவேண்டாம். நீங்கள் செய்தவற்றைப் பற்றிய பெருமை உங்கள் மனதில் நிறைந்திருக்கட்டும். உங்களைப் பற்றியோ, உங்களது நினைவுகள் பற்றியோ, இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்வு பற்றியோ அவர்களுக்குத் தெரியாது. நீங்கள் உங்கள் வாழ்க்கை சரித்திரத்தில் எழுத வேண்டியவை இன்னும் நிறைய இருக்கிறது. எழுத ஆரம்பியுங்கள். நிறைய ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்; மனதை அமைதிப் படுத்துங்கள். எத்தனை சந்தோஷமாக இருக்க முடியுமோ, அத்தனை சந்தோஷமாக இருங்கள்.

பொறுப்புகள் நிறைந்த முதல் இன்னிங்க்ஸ் ஆடி முடித்துவிட்டோம். பொறுப்புகளை நல்லபடியாக முடித்த திருப்தியுடன், மிகப்பெரிய சந்தோஷத்துடன் அதே சமயம் நம்மை நாமே திரும்பிப் பார்த்துக் கொள்ள வாய்ப்புக் கொடுக்கும் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடுவோம் வாருங்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com