கண்ணான கண்ணே! - உங்களது கண்களை காப்பாற்ற புதிய ‘20-20-20’ விதி

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரியவர் சிறியவர் என வயது வரம்பே இல்லாமல் அனைவரும் நீண்ட நேரம் கணினித் திரையையோ அல்லது ஸ்மார்ட் ஃபோன்களையோதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 
கண்ணான கண்ணே! - உங்களது கண்களை காப்பாற்ற புதிய ‘20-20-20’ விதி

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பெரியவர் சிறியவர் என வயது வரம்பே இல்லாமல் அனைவரும் நீண்ட நேரம் கணினித் திரையையோ அல்லது ஸ்மார்ட் ஃபோன்களையோதான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதனால் அதிகம் பதிக்கப்படுவது நமது கண்கள்.

கண் பிரச்னைகள் ஒரே இரவில் வரக்கூடியதும் இல்லை, அதே போல் சட்டென்று சரியாகக் கூடியதும் இல்லை. ஒரு முறை பாதிக்கப்பட்டுவிட்ட கண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர இயலாது, சில சமயங்களில் அறுவை சிகிச்சைகளும் பல பக்க விளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு. தலைவலி, உலர்ந்த கண்கள் அல்லது கண்களில் நீர் வடிவது போன்றவை கண்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் ஆகும், ஆனால் பெரும்பாலும் நாம் இதை உதாசினம் படுத்திவிடுகிறோம். ‘கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்’ என்பதைப் போல் பிரச்னை தீவிரம் அடைந்த பின் மருத்துவரைத் தேடுவதில் எந்தவொரு பயனுமில்லை.

உங்களது கண்களை இயற்கையான வழியில் பாதுகாக்க சில எளிய வழிமுறைகளைப் பார்ப்போம்;

1. நிறையத் தண்ணீர் குடிப்பது:

பெரும்பாலான மருத்துவர்கள் உடலில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் எளியத் தீர்வு நிறையத் தண்ணீர் குடிப்பது என்று கூறுகிறார்கள். வறண்டக் கண்கள், கண்புரை வளர்வது போன்ற பிரச்னைகளை தினமும் 6-8 கோப்பைத் தண்ணீர் குடிப்பதால் தவிர்க்கலாம்.

2. பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்வது:

உங்களது தினசரி உணவில் நிறையப் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வது, ஊட்டச்சத்து குறைபாடுகளை சரி செய்து கண்களைப் பாதுகாக்கும். சில கண் நோய்கள் வருவதை முன்னதாகவே தடுக்கும் ஆற்றல் இந்தப் பழங்கள் மற்றும் காய்களில் உள்ளது. முக்கியமாக வைட்டமின் ஏ மற்றும் ஃபைபர் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள்.

3. டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்கவும்: 

கைப்பேசிகளைப் பேசுவதற்கு மட்டும் பயன் படுத்தினால் இந்தத் தொந்தரவே இல்லை, சதா சர்வ நேரமும் அதையே பார்த்து கொண்டிருப்பதால் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ நம்முடைய கண்கள்தான். இந்த பாதிப்பில் இருந்து கண்களை பாதுகாக்க ‘20-20-20’ விதியைக் கடைப்பிடியுங்கள். விதி மிகவும் எளிது ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு முறை கைப்பேசி திரையைத் தாண்டி 20 அடி தூரம் வரை 20 விநாடிகள் பார்க்கவும்.

4. புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் கண்ணாடியினை அணியவும்:

பயணத்தின் போது சூரியனில் இருந்து வெளிப்படும் கடுமையான இந்தப் புற ஊதா கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாக்கும் கண்ணாடி அணியவும். அதிக நேரம் கணினியின் முன் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் அதிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்களிலிருந்து உங்கள் கண்களை பாதுகாக்கும் கண்ணாடிகளை அணியவும்.

வாழ்க்கை முறை மாற்றங்களுக்கேற்ப ஆரோக்கியமான உணவை, சமமான ஊட்டச்சத்து பெரும் வகையில் உட்கொள்வது நல்லது. மேலும் கண் தசைகள் ஓய்வெடுக்கும் வகையில் சில பயிற்சிகளைச் செய்வது பார்வை பிரச்னைகளை சரி செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com