வறட்சி... உட்புறமும் தோலிலும்!

எண்ணெய்க்குளியல் இல்லாமலிருந்து திடீரென எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்வதானால் உடலை
வறட்சி... உட்புறமும் தோலிலும்!

எனக்கு உடலில் பல இடங்களில் தோல் வெடித்து காய்ந்து போய் வறண்டுவிட்டது. எண்ணெய் தேய்த்துக் குளித்துப் பழக்கமில்லை. தேய்த்துக் குளித்தால் வறட்சி நீங்கும் என என் அம்மா கூறுகிறார். உடல் உட்புற வறட்சியால் இது ஏற்படுவதாக எனக்கு தோன்றுகிறது. இதை எப்படி குணப்படுத்தலாம்? ஹீமோகுளோபின் குறைவாக உள்ளது.

-மாயா, சென்னை.

உங்களைப் போன்ற உடல் நிலையுள்ளவர்கள் வெகுநாட்கள் எண்ணெய்க்குளியல் இல்லாமலிருந்து திடீரென எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்வதானால் உடலை அதற்குத் தகுந்ததாக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொள்பவர்கள் கூட கடுமையான நோய், விரதம், குடும்பசூழ்நிலை, அன்புக்குரியவரின் மரணம், சோகம் முதலியவற்றால் அதனை விடநேரிடலாம். உள்ளும் புறமும் வறண்டு விடும். அப்போது "கிருஸரம்' என்ற உணவு வகையை ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது. அரிசி, உளுந்தம் பருப்பு, எள்ளு இந்த மூன்றையும் 4:2:1 என்ற அளவில் சேர்த்து, லேசாக வறுத்து பெருந்தூளாக்கிக் கொள்ளவும். இதனைக் கஞ்சியாக்கி வெல்லச் சர்க்கரை சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும். இதனால் உடலின் உட்புற வறட்சியும் நெய்ப்பின்மையும் குறையும். உடலை எண்ணெய்குளியலுக்கு ஏற்றதாக்கும். எண்ணெய் தேய்த்துக் கொண்டால் உட்புறச் சூடு அதிகமாவதாகச் சிலர் கூறுவர். அவர்கள் இம்முறையைக் கையாண்டால் இந்த பாதிப்பு ஏற்படாது.

உடல், மனம், புலன்கள், ஆத்மா என்று நான்கு கூட்டுப் பொருள்கள் அடங்கியது வாழும் இந்த உடல். இந்த நான்கின் கூட்டையே பிராணன் என்று குறிப்பிடுவார்கள். பிராணன் உடலில் தங்கவும், பிராணனின் இயக்கம் உடலில் சரியே நடக்கவும் உடலுக்கு நெய்ப்பு தேவைப்படுகிறது. உடலில் இந்த நெய்ப்பு உள்ளவரை தான் உறுப்புகள் உரசல் இல்லாமல் மெதுவாக ஒன்கொன்று பிடிப்புடன் இருக்கின்றன. உயிரே இதனால் தான் உடலில் இருப்பதாக ஸூச்ருதர் எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார். அதனால் நீங்கள் எடுத்துள்ள தீர்மானம் மிகவும் சரியானது தான்.

மனிதனின் தோலில் லேசான மெழுக்குப்பூச்சு உண்டு. அதில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றி, மெழுகுப்பூச்சு கரையாமல் பாதுகாக்கவே தோலுக்கு எண்ணெய் தடவுகிறோம். தோலில் எண்ணெய்ப் பதமும் தராமல் சோப்புத் தேய்த்துக் குளிக்கும் போது தோல் வறண்டுவிடுகிறது, வெடித்துவிடுகிறது, சிதில் சிதல்களாகப் பிரிந்து உதிர்கிறது. இவற்றின் விளைவுகளே தலையில் பொடுகு, உள்ளங்கால் வெடிப்பு, தோல் வறட்சி முதலியவை. அதனால் நீங்கள் எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கதே.

ரத்த அணுக்கள் குறைவதாலும் தோல் வறட்சி, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். அதனால் இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய நெய்யில் காய்ச்சப்பட்ட மூலிகை மருந்துகளைத்தான் முதலில் கொடுக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. உடல் நிலைக்குத் தக்கவாறு தாடிமாதிகிருதம், திக்தகம்கிருதம், பஞ்சகவ்யம் கிருதம் போன்றவற்றில் ஒன்றை நோயாளி அருந்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நெய்ப்பினுடைய வரவு உடலில் நன்கு உணரப்பட்டதும், உலர் திராட்சையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை கசக்கிப்பிழிந்து வடிகட்டி, நோயாளியை குடிக்கச் செய்து பேதி செய்ய வேண்டும் என்றும், அதன் பிறகே ரத்த அணுக்களின் வளர்ச்சிக்கு உதவிடும் கஷாயங்களும் சூரணங்களும் மாத்திரைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.

திராஷாதி லேஹ்யம், சியவனப்பிராஸம் லேஹ்யம், தசமூலஹரீதகீ லேஹ்யம் போன்ற நெய்ப்பு தரும் மருந்துகள் மூலமாகவும் குடல் உட்புற வறட்சியை நீக்கி அதன் வழியாக தோலில் ஏற்பட்டுள்ள வெடிப்பு, வறட்சி போன்ற உபாதைகளையெல்லாம் நீக்கிக் கொள்ளலாம். ஆயுர்வேத மூலிகை எண்ணெய் மருந்துகளாகிய மஹாமாஷ தைலம், தான்வன்திரம் தைலம், பிரபஞ்சன விமர்தனம் குழம்பு ஆகியவற்றில் ஒன்றிரண்டை கலந்து உடலில் வெதுவெதுப்பாகத் தேய்த்துக் குளிப்பதின் மூலமாகவும் தோல் வறட்சியைக் குறைக்க முடியும்.

தேங்காய்ப்பால், எள்ளு, உளுந்து போன்ற நெய்ப்பு தரும் பொருட்களை உணவில் சற்று அதிகமாகச் சேர்த்தால் உட்புற வறட்சியை நீக்கிக் கொள்ளலாம். வறட்சி தரும் கசப்புச் சுவை, காரம், துவர்ப்புச் சுவைகளைக் குறைப்பது நல்லது. "தைலதாரா' எனப்படும் பிரசித்தி பெற்ற சிகிச்சை தற்சமயம் ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படுகிறது. தோலில் மென்மையை ஏற்படுத்தி வலுவூட்டும் இந்த முறை தங்களுக்கு நல்ல பலனைத் தரலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com