மருத்துவரைப் பார்க்கப் போகும் போது படபடப்பாக இருக்கிறதா?

நான் எப்போது டாக்டரைப் பார்க்கச் சென்றாலும் ஏதேனும் புதிய பிரச்னையைக் கூறிவிடுவாரோ என்ற பயத்திலேயே போகிறேன்.
மருத்துவரைப் பார்க்கப் போகும் போது படபடப்பாக இருக்கிறதா?

நான் எப்போது டாக்டரைப் பார்க்கச் சென்றாலும் ஏதேனும் புதிய பிரச்னையைக் கூறிவிடுவாரோ என்ற பயத்திலேயே போகிறேன். பதட்டமான அந்த சூழலில் அவர் ரத்த அழுத்தம் சோதிக்கும் போது, அதிகமாகவே காட்டுகிறது. உடனே எனக்கு ரத்த அழுத்த உபாதையைக் குறைக்கும் மாத்திரைகளை எழுதிக் கொடுத்துவிடுகிறார். நார்மலான ரத்த அழுத்தம் என்பது என்ன? இதற்கு ஆயுர்வேத மருந்து உள்ளதா?

-ராமசாமி, நெய்வேலி. 

ரத்தக் கொதிப்பு, உடல் மனம் இவற்றின் சகிப்புத் தன்மையைக் கெடுத்துக் கொள்வதால் ஏற்படும் நோய்களில் ஒன்று. சுக, துக்கங்களின் தாக்குதல் மனத்தையும் உடலையும் பாதிக்கும் போது, அதற்கு ஈடுகொடுக்கும் சக்தி உடலில் குறைந்துவிட்டால் இந்நோய் ஏற்படுகிறது. 

இதயத்திலிருந்து ரத்தம் வெளியே அனுப்பப்பட்டு உடல் முழுவதும் சுற்றித் திரும்ப இதயத்தை அடைவதும் பிராண வாயுவின் சேர்க்கையால் சுத்தப்படுத்தப்பட்டுத் திரும்ப வெளியே அனுப்பப்படுவதுமாக இந்த ரத்த ஸம்வஹனம் எனும் ரத்த ஓட்டம் உடலில் இடைவிடாமல் நிகழும் ஓர் இயற்கைச் செயல். இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் உறுப்புகள் இதயமும் ரத்தக் குழாய்களும். பங்கு கொள்ளும் தாது ரத்தம். இப்பணியை நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு ரத்த ஓட்டத்தை இயக்கி வைக்கும் வியான வாயுவைச் சேர்ந்தது. ஒரே சீரில் இச்செயல் நடைபெற இம்மூன்றும் சம நிலையில் இருந்து ஒத்துழைக்க வேண்டும்.

நடு வயதினருக்கு ஒரு நிமிடத்திற்குச் சுமார் 70 தடவை இதயம் சுருங்கி விரிகிறது. ஒவ்வொரு தடவை விரியும் போது இதயத்தினுள் ரத்தம் நிரம்புகிறது. அசுத்தமான ரத்தம் உள் நிரம்புவதைச் சுத்தி செய்வதற்காக நுரையீரலுக்குள் அனுப்புவதும், சுத்தியாகி உள் நிரம்பிய ரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் அனுப்புவதும் இதயம் சுருங்கிவிரியும் போது நிகழும் செயல்களாகும். இந்த நிகழ்ச்சியின் பிரதிபலிப்பைக் கை நாடியில் எளிதில் உணர்கிறோம். 

ரத்த ஓட்டத்திற்காக இதயமும் ரத்தக் குழாய்களும் ஒரே சீரில் இடைவிடாது சுருங்கி விரியச் செய்யும் சக்தி வியானவாயுவிடம் உள்ளது. மனப் பதட்ட நிலையில் வியான வாயு கட்டுக்கு மீறிச் செயல்படும் போது இந்த வேலையில் ஏற்றம் ஏற்படுகிறது. வியான வாயு சக்தி இழந்த நிலையில் இவ்வேலை மந்தப்படுகிறது. வியான வாயு அளவுக்கு மீறி கோபமடைந்து அதிகமாகிச் செயல்பட்டால் ரத்தக் கொதிப்பு ஹை ப்ளட் பிரஷர் ஏற்படுகிறது. ஆக வியான வாயு, ரத்த ஓட்டத்தில் அதனுள் ஏற்படும் அழுத்தம் இவற்றின் ஏற்ற நிலை, சம நிலை, தாழ்வு நிலை என்ற இந்த மூன்றையும் அளக்க ஸ்பிக்மோமானோ மீட்டர் உதவுகிறது.

ரக்த அழுத்தம் இந்த மீட்டரில் இரண்டு நிலைகளில் அளக்கப்படுகிறது. ஒன்று இதயம் சுருங்கி ரத்தம் குழாய்களில் வேகமாகப் பாய்ச்சப்படும் போது ரத்தக் குழாய் சுவர்களில் ரத்த ஓட்டத்தின் வேகம் எவ்விதம் பிரதிபலிக்கின்றது என்பதை அறிவது, இந்த அழுத்தம் ஸிஸ்டலிக் பிரஷர் எனப்படும். மற்றொன்று இதயம் விரியும் போது ரத்த ஓட்ட வேகம் மந்தப்படும் நிலையில் ரத்தக் குழாய்ச் சுவர்களில் எவ்விதம் பிரதிபலிக்கிறது என்பதை அறிவது. இந்த அழுத்தம் டயஸ்டலிக் பிரஷர் எனப்படும். 

இந்த அளவு வசிக்குமிடத்தின் சீதோஷ்ண நிலை, மனிதனின் வயது, தொழில், வசிக்கும் சூழ்நிலை, தற்காலிக மனோநிலை முதலியவற்றுக்கேற்ப மாறுபடும். ஆனாலும் பொதுவாகக் கணக்கிட்டு ஒரு சராசரி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். சராசரி எனும் போதே இதை ஓரளவுதான் நம்ப முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம். 

அது அறுபது வயதிற்கு மேற்பட்டு சிலருக்கு இந்த அளவு குறையும். சிலருக்கு இதே சீரில் இருக்கும். உடல் பருத்துப் புஜம் பருத்துள்ளவருக்கு இந்த அளவைவிட 10- 15 மி. மீ அதிகம் இயற்கை அளவாகக் கொள்ளப்படுகிறது.

டாக்டரைப் பார்க்க க்யூவில் அமர்ந்திருக்கும் போது, மனதில் அமைதியுடன் நீங்கள் இருந்தால், ரத்தக் கொதிப்பை டாக்டர் பரிசோதிக்கும் போது சரியான ரத்த அழுத்தம் தெரிய வரும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com