தனித்துவம் வாய்ந்த 'ஞவரகிழி' சிகிச்சையின் பயன்கள்!

'ஞவரகிழி' என்ற ஆயுர்வேத சிகிச்சை முறை வேறு எந்த ஒரு சிகிச்சை முறையிலும் குறிப்பிடப்படாத தனித்துவம் வாய்ந்தது என்று கேள்விப்படுகிறேன்
தனித்துவம் வாய்ந்த 'ஞவரகிழி' சிகிச்சையின் பயன்கள்!

'ஞவரகிழி' என்ற ஆயுர்வேத சிகிச்சை முறை வேறு எந்த ஒரு சிகிச்சை முறையிலும் குறிப்பிடப்படாத தனித்துவம் வாய்ந்தது என்று கேள்விப்படுகிறேன். அது பற்றிய விவரம் கூறவும். - விஸ்வநாதன், ஆத்தூர்.

மூட்டுகளில் ஏற்படும் வாயுப் பிடிப்பு நீங்குவதற்காகவும், உட்புறக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி, அவற்றின் தொய்வான நிலையை மாற்றி வலுப்படுத்தவும், இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உடலெங்கும் எடுத்துச் செல்லப்படும் திறனை அதிகரிக்கவும், தோலின் நிறத்தை மேம்படுத்துவதற்காகவும், பசியைத் தூண்டிவிடுவதற்காகவும், சீரண சக்தி நன்கு வளரச் செய்வதற்காகவும், சூம்பிப் போன கை, கால்கள் வலுவடைந்து புஷ்டிப்படுவதற்காகவும், உடல் வலு, தசை உருண்டு திரண்டு வலிமை அடைவதற்காகவும் 'ஞவரக்கிழி' எனும் சிகிச்சையை ஆயுர்வேத மருத்துவ முறை பரிந்துரைக்கிறது.

அறுபது நாளில் விளையக் கூடிய செந்நிற வகை அரிசியை ஞவர அரிசி என்று கேரளத்திலும், தமிழ்நாட்டில் ‘காரரிசி’ என்றும் பெயர் பெற்ற அபூர்வ வகை அரிசியைத்தான் இந்த சிகிச்சை முறைக்குப் பயன்படுத்துகிறார்கள். 'கிழி' என்றால் மூட்டை கட்டுதல் என்று பெயர். இதன் செய்முறை பற்றி நீங்கள் அறிந்து கொள்வது நலம். 

தேவையான பொருட்கள்

ஞவர அரிசி - 350 கிராம் 
சித்தாமுட்டிவேர் - 300 கிராம் 
(குறுந்தோட்டி )
தண்ணீர் - 4 லிட்டர் 
பசும்பால் - 1 லிட்டர்
காடாத்துணி - 3 
(18 x 18 அங்குலம் )

தயாரிப்பு முறை

300 கிராம் குறுந்தோட்டி எனும் சித்தாமுட்டி வேரை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும். நான்கு லிட்டர் தண்ணீரை சேர்த்துக் காய்ச்சி, ஒரு லிட்டர் மீதமாகும்படி கஷாயமாகக் குறுக்கி வடிகட்டவும்.

350 கிராம் ஞவர அரிசியில் அரை லிட்டர் குறுந்தோட்டி கஷாயத்தைச் சேர்த்து - அந்தக் கலவையில் அரை லிட்டர் பசும் பாலும் கலந்து, அடுப்பிலேற்றி கெட்டியான சாதம் ஆகும் பதத்தில் தயாரித்துக் கொள்ளவும். 

தயாராக உள்ள 3 காடாத் துணிகளின் மீது, இந்த சாதத்தை சம அளவாகப் பங்கிட்டு, மூட்டை கட்டிக் கொள்ளவும். 

மீதமுள்ள அரை லிட்டர் கஷாயத்தையும், பாலையும் பாத்திரத்தில் கலந்து அடுப்பிலேற்றி சூடாக்கவும். அதில் இந்த மூன்று மூட்டைகளையும் முக்கி, சூடாக்கி உடலெங்கும் தேய்ப்பதற்காகப் பயன்படுத்தவும் .

30 கிராம் நெல்லி முள்ளி சூரணத்தை நன்கு நெகிழும் பதத்தில் தண்ணீருடன் கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். 

ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளில் இதைப் பற்றிய செய்முறை விளக்கம்

1. காலையில் நோயாளி இயற்கை உபாதைகளை நன்கு நீக்கிய பிறகு, மரப்பலகையில் அமர்ந்து கொள்ள வேண்டும்.

2. தலை, காதுமடல், கைகள், கால்கள் மற்றும் பாதங்களில் சிறிது மூலிகைத் தைலத்தை வெது வெதுப்பாகத் தடவி விடுவார்கள். 

3. பின்னர் உடல் முழுவதும் எண்ணெய்த் தேய்ப்பு செய்யப்படும்.

4. நெல்லிவிழுதை உச்சந் தலையில் பற்று போட்டு துணிவைத்து கட்டிவிடுவர்.

5. நோயாளியைப் படுக்க வைத்து இருபுறமும் இரண்டு மசாஜ் செய்யும் நபர்கள் நின்று கொண்டு, ஒரு மூட்டை, கஷாயம் மற்றும் பாலுடன் வெந்து கொண்டிருக்கும் நிலையில், மற்ற இரு மூட்டைகளை, ஆளுக்கு ஒன்றாக, கையில் பிடித்துக் கொண்டு உடல் முழுவதும் உருட்டி உருட்டி தேய்த்துவிடுவார்கள். மூன்றாவது நபர் மூட்டைகளின் சூடு ஆறாமல் இருப்பதற்காக, மூன்றையும் பால் கஷாயத்தில் முக்கி முக்கி எடுத்து மசாஜ் செய்பவர்களிடம் கொடுப்பதும் வாங்குவதுமாக செய்து கொண்டே இருப்பார். சுமார் 30 - 45 நிமிடங்கள் வரை, இந்த உருட்டல் முறையை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செய்து கொண்டேயிருப்பார்கள். 

அதன் பிறகு, மூட்டைகளைப் பிரித்து உள்ளிருக்கும் சாதத்தை பால் கஷாயத்துடன் கலந்து, பசை போன்று செய்து உடலெங்கும் சுமார் 10 நிமிடங்கள் தேய்த்துவிடுவார்கள். அடுத்த 10 நிமிடங்கள் உடலிலேயே ஊற வைத்து, தென்னம் ஓலையால் வழித்துவிட்டு சிறிது எண்ணெய்யை மசாஜ் செய்து, வெந்நீரில் குளிக்கச் சொல்வார்கள். உடல் உபாதைக்குத் தக்கவாறு 7 (அ) 14 (அ) (21) நாட்கள் செய்யலாம். 

பேராசிரியர்  எஸ். சுவாமிநாதன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, 
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com