புதையல் 30

பிறர் மனதைப் படிப்பது எப்படி, மேடைப்பேச்சில்  சிறந்து விளங்குவது எப்படி, பிறர்
புதையல் 30

வையத்தில் வாழ்வாங்கு வாழ...!

(பிறர் மனதைப் படிப்பது எப்படி, மேடைப்பேச்சில்  சிறந்து விளங்குவது எப்படி, பிறர் மனதில் இடம் பிடிப்பது எப்படி என்பதையெல்லாம் உதாரணங்களுடன் விளக்கி முடித்தப் பின் வாழ்க்கையை ஜெயிப்பது எப்படி என்பது  பற்றி தெளிவு படுத்தலானார் அறிவொளி)

சந்தோஷ் : சிலரெல்லாம் மத்தவங்களோட சிரிச்சி பேசாம எப்பவும் இறுக்கமான முகத்தோடவே திரியுறாங்க. அது அவங்களை சுத்தி இருக்கறவங்களுக்கு மட்டுமில்லாம அவங்களுக்குமே  மன அழுத்தத்தை தராதா சார் ?

அறிவொளி : நிச்சயமா தரும் சந்தோஷ். இறுக்கமான முகம் அவங்களுக்குள்ளே இருக்கும் மன அழுத்தத்தோட வெளிப்பாடாகவும் இருக்கலாம். சிலர் ஒரு சூழல்ல அப்படி இருந்தாலும் வேறொரு சூழல்ல சகஜமா சிரிச்சுப் பேசுறவங்களா இருப்பாங்க.

கார்த்திக் : ஆமா சார். ராஜாராம் சார் போன வாரம் குடும்பத்தோட வெளியே  போறதைப் பார்த்தேன். அவர் பிள்ளைங்களோட அப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு போறதைப் பார்த்தா எனக்கு  கோவமா வந்திச்சு. எங்ககிட்ட மட்டும் ஏன் இப்படி சிடுசிடுன்னு மூஞ்சிய வெச்சுக்கிட்டு  கடுப்பேத்துறார்னு தெரியல.

அறிவொளி : (புன்னகைத்தவாறே பேசுகிறார் )

நாம எல்லோருமே பிறந்ததுலேர்ந்து இறக்கும் வரைக்கும் நிறைய முகமூடிகளைப் போட்டுக்கிட்டுத் தான் இருக்கோம் கார்த்திக். நண்பர்களோட இருக்கும் போது ஒரு முகம். அலுவலகத்துல இருக்கும் போது இன்னொரு முகம்னு நமக்கு பல பொய் முகங்கள்  இருக்கு.

ராஜாராம் மாதிரி சிலபேர் வீட்டில் கலகலப்பா இயல்பா இருந்தாலும் பள்ளியில அந்த மாதிரி இருந்தா  பிள்ளைங்க தன்னை மதிக்க மாட்டாங்கன்னு கண்டிப்பானவரா நடந்துக்குவாங்க.  வேற சில பேர் நண்பர்களோட ஜாலியா இருந்தாலும் தன சொந்த வீட்டிலேயே சர்வாதிகாரியா நடந்துக்குவாங்க. தன் இயல்புக்கு மாறா நடக்கும் இவங்க காலப்போக்கில் அதுவே இயல்பா மாறிப் போய் சொந்த குடும்பத்தாராலேயே வெறுக்கப்படுவாங்க. ஆசிரியரா இருந்தா மாணவர்களாலும் சக ஆசிரியர்களாலும் வெறுக்கப்படுவாங்க. சில நேரம் பாதிக்கப்பட்டவர்களால் பழிவாங்கப்படுவதும் நேரும்.

சந்தோஷ் : எனக்கு தெரிஞ்ச ஒரு பள்ளிக்கூடத்து தலைமை ஆசிரியர் ஒருத்தர் பள்ளிக்கூடத்து மாணவர்களிடமும்  ஆசிரியர்களிடமும்  அளவுக்கு மீறி கண்டிப்பா நடந்துக்குவார். அதுக்கு அவர் சொல்லும் காரணம் முப்பது வருஷ ஆசிரியப் பணி  வாழ்க்கையில் என்னோட ஒரு மாணவன் கூட பெயிலானதே கிடையாது. காரணம் இராணுவக் கட்டுப்பாட்டோடு ஒழுக்கத்தையும் கடைபிடிக்க வைக்குறதுதான் என பெருமையா சொல்லிக்குவார். 

ஒரு நாள் பன்னிரெண்டாம் வகுப்புல ஒரு பையனும் பெண்ணும் தனியா நின்னு பேசிக்கிட்டுருப்பதைப் பார்த்தவர் விசாரிச்சிருக்கார். இனக்கவர்ச்சியால இருவரும் நெருங்கி பழகுறதைத் தெரிஞ்சிக்கிட்டு அந்தப் பொண்ணை எல்லோர் முன்னாடியும் ரொம்ப திட்டியிருக்கார். அந்த பையனையும் அவங்க நட்புக்கு உதவிய இன்னொரு பையனையும்  சட்டையைக் கழட்டிட்டு மைதானத்தில வெய்யில்ல நிக்க வச்சிருக்கார். எல்லோரும் தன்னைக் கேவலமா பார்த்து சிரிப்பதைக் கண்டு கூனிக்குறுகிப் போன அந்த இரண்டு பிள்ளைகளும் தற்கொலை பண்ணிக்கிட்டு இறந்து போய்ட்டாங்க. அவங்க எழுதி வச்சிருந்த உருக்கமான கடிதத்தில் எங்க மரணத்துக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம்னு அவர் பேரை எழுதியிருந்தாங்க டாக்டர் ஆகணும்னு கனவு கண்டுகிட்டிருந்த எம் புள்ளையை அநியாயமா கொன்னுட்டானே பாவின்னு இறந்து போன பிள்ளைகளோட பெற்றோர் அழுது புலம்பியது ரொம்பக் கொடுமையா இருந்தது. அந்த இரண்டு பேரோட சேர்ந்து தண்டனையை அனுபவிச்ச நண்பன் இந்த நிகழ்வால ரொம்ப மனசு பாதிக்கப்பட்டு தேர்வை சரியா எழுத முடியாம பெயிலாகிப்  போனான்.  இப்ப அந்த தலைமையாசிரியர் தன் இமேஜ் எல்லாம் உடைஞ்சிப்  போய் பத்திரிக்கைகளில்  நாறடிக்கப்பட்டு கோர்ட் , கேஸுன்னு அலைந்துக்கிட்டிருக்கார்.

சந்தோஷ் :  இந்த வயசுல இனக்கவர்ச்சி ஏற்படுவது சகஜம் தானே . அதை எப்படிக் கையாள்வது எப்படின்னு தெரியாத ஒரு ஆளால மூணு பிள்ளைங்களோட வாழ்க்கையே வீணாப் போச்சே. அந்தப் பிள்ளைகளும் உணர்ச்சிவசப்பட்டு முட்டாள்தனமான தற்கொலை முடிவை எடுத்திருக்க வேண்டாம்.  

அறிவொளி : இவங்க மட்டுமில்ல சந்தோஷ் ஒவ்வோர் ஆண்டும் 15- 20 லட்சம் பேர் தற்கொலைக்கு முயற்சி செய்றாங்க. இதில் 15 - 20 ஆயிரம் பேர் இறந்து போறாங்க. அம்மா, அப்பா திட்டினாங்க, ஆசிரியர்கள் திட்டினாங்க, பரிட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, கடன் தொல்லை, குடும்பப் பிரச்னை  இப்படி ஏதாவது ஒரு காரணத்துக்காக நான்கு நிமிடங்களுக்கு ஒரு இந்தியன் தற்கொலை செய்து கொல்வதாகவும்  அதில் மூன்றில் ஒருவர் முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் என்றும் புள்ளி விவரம் சொல்லுது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தகவலின்படி உலகத்திலேயே அதிக தற்கொலை நடப்பது இந்தியாவில் தான். வானொலி புகழ் தென்கச்சி சாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவலின்படி தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிக தற்கொலைகள் நிகழும் இடம் தமிழ்நாடுதான் என்பதைக் கேட்டு நாம வெட்கி தலை குனியனும்.

கார்த்திக் : இந்தியா நல்ல விஷயங்களில் முதல் இடம் பிடிக்காம எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை, சர்க்கரை வியாதி உள்ளவர்களின் எண்ணிக்கை, தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை இப்படி கெட்ட விஷயத்துல எல்லாம் முன்னாடி இருக்குறது உண்மையிலேயே ரொம்ப அவமானமா இருக்கு சார்.

அறிவொளி : ஆமா கார்த்திக், பிரச்னைகளுக்கு சாகுறதுதான் தீர்வுன்னா உலகத்துல யாருமே உயிரோட இருக்க முடியாது. உயிரே போகும் பிரச்சனைன்னு நாம நினைக்கும் விஷயங்களுக்கு மேல உன்னதமான  விஷயங்கள் உலகத்துல எவ்ளவோ இருக்கு என்பதை இவங்க எல்லாம் புரிஞ்சிகிட்டா இப்படி ஒரு முடிவுக்கு போக மாட்டாங்க.

சந்தோஷ் : தற்கொலை மட்டுமில்ல சார் மணமுறிவுகளும் இப்ப ரொம்ப அதிகமாகிடுச்சு. முன்னாடி கூட்டுக்குடும்பங்கள் இருந்தப்போ பத்து பன்னிரண்டு பிள்ளைகள் இருந்தாலும் ஒருத்தரோட ஒருத்தர் விட்டுக் கொடுத்துப் போவது , மத்தவங்களை மரியாதையா பேசுவது, மத்தவங்க உணர்வுகளை மதித்து நடப்பது எல்லாம் குடும்பத்து உறவினர்கள் மூலமாவே பிள்ளைகளுக்கு கற்று கொடுக்கப்பட்டது. இப்ப ஒத்தைப் பிள்ளை அதுவும் செல்லப்பிள்ளையா இருப்பதாலே 'நான் ',  ' எனக்கு' என்ற தன்முனைப்பும், சுயநலமும் அதிகமாகி  பிள்ளைகள்  நீயா, நானா? என போட்டி போட்டு வாழ்க்கையே கேள்வி குறியாகிக்கிறாங்க.

விஷ்ணு : இந்த நிலையை மாத்த என்ன பண்ணனும் சார் ?

அறிவொளி :  நான் நினைப்பதெல்லாம் நடக்கணும், என்  எண்ணத்துக்கேத்தபடி மத்தவங்க  மாறணும்னு நினைக்காம  சூழ்நிலைக்கு  ஏத்தபடி  வளைந்து கொடுக்கவும், மத்தவங்களோட உணர்வுகளை மதித்து நடக்கவும் வீடும் , பள்ளியும் பிள்ளைகளுக்கு சின்ன வயசுலேர்ந்தே கற்று கொடுக்கணும். சாரி, ஓகே, தேங்க்யூ என்ற இந்த மூன்று மந்திராவார்த்தைகளை சரியா உபயோகிக்கத் தெரிஞ்சவங்களுக்கு பகைவர்களே இருக்க முடியாது. பிடிவாதம், சண்டை, கோபம் போன்ற எதிர்மறை குணங்களால சாதிக்க முடியாததை எல்லாம் இந்த மந்திர வார்த்தைகளால் சாதிக்க முடியும்.

சந்தோஷ் : ஒருசிலர் எப்பவும் இந்த உலகமே தனக்கு எதிரா இருப்பதா கற்பனை பண்ணிக்கிட்டு மன அழுத்தத்தோடவே இருப்பாங்க. அவங்க மாதிரி ஆட்களுக்கு நம்பிக்கையும் வாழ்க்கையில் பிடிப்பையும் ஏற்படுத்த ஏதாவது பயிற்சி இருக்கா சார் ?

அறிவொளி : இருக்கு சந்தோஷ் . மனஅழுத்தம் இருக்கும் யார் வேணாலும் இந்தப் பயிற்சியை செய்யலாம். இப்ப நீங்க தான் அந்த ஆள்னு சொன்னா உங்களுக்கு பிடித்த நபர் (நண்பர் அல்லது வாழ்க்கைத் துணை) ஒருவருடன் சற்று நேரம் மனம்விட்டு, ஒளிவு மறைவின்றி உங்களது இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ளுங்க. நம்பிக்கைக்குரிய இந்த நபரின் எதிரே உட்கார்ந்து, ஒருவரது கை கீழும் மற்றவரது கை அதன் மேலும் இருக்கும்படி பிடித்து , கண்களை மூடி ஆழ்ந்து மூச்செடுத்து உடலையும் மனதையும் தளர்த்துங்கள். உங்கள் மனக்கவலைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தையும் மறந்து இணைந்திருக்கும் கரங்களின் மீது மட்டுமே கவனத்தை செலுத்துங்கள். இணைந்த கரங்களின் வழியாக புதிய ஜீவசக்தி உடல்முழுவதும் பாய்வதை உணருங்கள்.

உங்களிருவருக்கும் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் மறந்து, பிரிக்க முடியாத ஆழ்ந்த உறவு ஏற்படுவதை உணருங்கள். கண்களைத் திறந்து, ஏதும் பேசாமல் இந்தப்புதிய அனுபவத்திற்காக கண்களால் நன்றி கூறுங்கள். மீண்டும் கண்களை மூடி இணைந்திருக்கும் கைகளின் மீது கவனத்தை செலுத்துங்கள்.  ஆழ்ந்த மூச்செடுத்து உடலையும் மனதையும் தளர்த்துங்கள். மீண்டும் கண்களைத் திறந்து உங்கள் துணைவரின் இடத்தில் உங்களுக்கு அறிமுகமான அனைவரும் (பிடித்தவர், பிடிக்காதவர், உங்களுடன் பிரச்னை செய்பவர்கள் உங்களுக்கு முன்மாதிரிகளாக நினைப்பவர்கள் , வரலாற்றுத் தலைவர்கள்) இருப்பதாக கற்பனை செய்யுங்கள், யாவரும் வட்டமாக ஒருவரோடு ஒருவர் கைகோர்த்திருப்பதாகவும், யாருடனும் எந்த கசப்புணர்வும் இன்றி எல்லோருடைய முகமும் கவலையின்றி மலர்ந்திருப்பதாகவும் கற்பனை செய்யுங்கள்.

இந்த கற்பனையானது, நீங்கள் தனிநபரல்ல, தனித்தீவில் இல்லை, உங்களுக்கு உறுதுணையாக மனித சமுதாயம் முழுவதும் கைகோர்த்துள்ளது என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். இம்மாபெரும் அண்டத்தின் முக்கிய பகுதி நீங்கள் ‘உயிர்கள் வாழும் ஒரே கோள்' என்ற பூமியின் பெருமைக்கு நீங்களும் ஒரு கரணம் என்பதை உணருங்கள். நீங்கள் இன்னும் சாதிக்க வேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது. மனிதர் யாவருடனும் இணைந்த கரங்களால் கிடைத்துள்ள இப்புதிய தெம்பினால் உங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணருங்கள்.

உங்களுடன் கைகோர்த்துள்ள தலைவர்களின் வாழ்க்கையை அவர்கள் சந்தித்த அவமானங்களையும், தோல்விகளையும் அந்த அனுபவங்களின் படிப்பினையால் அவர்கள் பெற்ற வெற்றியையும் சிந்தித்து பாருங்கள். நாம் சந்தித்துள்ள தோல்வி மிகச் சாதாரணமானது. நம் வாழ்வின் வெற்றி பறிக்கப்படவில்லை. சற்று தாமதப்பட்டுள்ளது அவ்வளவே. வெற்றிக்கனி நம் கைக்கு மிக அருகிலேயே உள்ளது. சறுக்கி விழுந்த நாம் எழ முயற்சித்தாலே பாதி வெற்றி கிடைத்ததற்கு சமம். மீதி பிறருடன் இணைந்து செய்யும் கூட்டு முயற்சியால் தானாகவே நிறைவேறும். இந்த நம்பிக்கை உங்கள் மனதில் ஏற்பட்டதும் கண்களைத் திறந்து இப்பயிற்சியில் நீங்கள் பெற்ற அனுபவத்தை உங்கள் துணைவர் / நண்பரோட பகிர்ந்துக்கணும்.

சந்தோஷ் : எல்லோருக்கும் ரொம்ப உபயோகமானப் பயிற்சி சார். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதுன்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க. அப்படிப்பட்ட இந்த அரிய மானிடப் பிறவியோடப் பயனை பிறருடன் கலந்து பழகி தனக்கும் மத்தவங்களுக்கும் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வதன் மூலம் வாழ்க்கையையே ஜெயிக்க முடியும்.

கார்த்திக் : வாழ்க்கையில் ஜெயிக்கறதுக்கும் வாழ்க்கையையே ஜெயிக்கறதுக்கும் என்ன சார் வித்தியாசம்.

அறிவொளி : திறமை, பணம், புகழ் மூலம் சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வந்தவங்க யாருடைய பேராவது சொல்லுங்க பார்க்கலாம்.

விஷ்ணு : பில்கேட்ஸ், நாராயணமூர்த்தி, சச்சின் டெண்டுல்கர்  , இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் இப்படி நிறைய பேர் இருக்காங்க சார்.

அறிவொளி : சரி இவங்க எல்லாம் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை முழுமையா பயன்படுத்தி தன்னை உயர்த்திக்கிட்டு வாழ்க்கையில் ஜெயித்தவங்க.  தன்னையே இந்த சமுதாயத்துக்கு அர்பணித்தவங்க, தன்னலமற்ற சேவை செய்தவங்க, சமுதாயத்தை உயர்த்த வழி செய்தவங்க யார் பேராவது சொல்லுங்க பார்க்கலாம்.

கார்த்திக் : இயேசு, புத்தர், மகாத்மா காந்தி, அன்னை தெரசா இவங்க எல்லாம் தானே சார்.

அறிவொளி : ஆமா கார்த்திக் இந்த மானிட சமூகத்துக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த இவங்க தான் வாழ்க்கையையே ஜெயித்தவங்க. இறந்து பல்லாண்டுகள் ஆனாலும்  வாழ்வாங்கு வாழ்பவர்கள். தன்னைப்   பத்தி யோசிக்காம மத்தவங்களோட நலன் பத்தி எப்போதும் சிந்திக்கிறவங்க யாரும் இந்த உயர்நிலையை அடைய முடியும். அன்பு மட்டுமே பரஸ்பரம் கொடுக்க கொடுக்க குறையாமல் அதிகரிக்க கூடியது. என்னை அன்பு செய்ய யாரும் இல்லைன்னு நினைக்கிறவங்க கூட அதே அன்புக்காக தன்னைப் போல ஏங்குறவங்க இந்த உலகில் ஏராளமானவர்கள் உண்டு என்பதை உணர்ந்தா அவங்களோடக் கரம் கோர்த்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதா மாத்திக்க முடியும். வாழ்க்கையையே ஜெயிக்கவும் முடியும். சாதாரண மனிதன் சமுதாயத்தில் வளர்கிறான் சாதனை மனிதனோ சமுதாயத்தையே வளர்க்கிறான்.

(வாழ்க்கையில் புலம்பல்களோடு மரண தேவனுக்காக காத்துக் கொண்டிருப்பதோ மரணத்தையே வென்று வாழ்வாங்கு வாழ்வதோ நாம் தேர்வு செய்து கொள்வதைப் பொறுத்ததே. நீங்கள் எதைத் தேர்வு செய்யப் போகின்றீர்கள்.)

தொடரும்...

பிரியசகி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com