கண்டேன் புதையலை

புதையல் 28

பிரியசகி

வாங்க பழகலாம்!

(லட்சிய வாழ்வு கைவரப் பெற அறிவொளி தரும் பயிற்சிகளின் முக்கியத்துவம் உணர்ந்த கார்த்திக் மற்றும் விஷ்ணு இருவரும் இனி தாங்களும் இப்பயிற்சிகளை மேற்கொண்டு நன்கு படிக்கப் போவதாக உறுதியளித்தனர்.)

கார்த்திக் : சார் படிக்குறதுக்கு எவ்வளவோ வழிமுறைகள் இருக்குன்னு உங்ககிட்டப் பேசும்போது தான் தெரியுது சார்.

அறிவொளி :  கற்றலுக்கான சூத்திரம் என்ன தெரியுமா கார்த்திக்?

கார்த்திக் :  தெரியாதே சார்.

அறிவொளி :  கற்றல் என்பது 10% படிப்பது, 20% கேட்பது, 30% பார்ப்பது, 50% பார்ப்பது மற்றும் கேட்பது, 70% பிறருடன் கலந்து உரையாடுவது, 80% நாமே அனுபவித்து உணர்வது, 95% நாம் உணர்ந்ததை பிறருக்குக் கற்றுக்கொடுப்பது.

விஷ்ணு :  உண்மைதான் சார். நான் தனியா  இருக்கும் போது கார்த்திக் மாதிரி யாரோடவாவது சேர்ந்து படிச்சாலோ அல்லது சொல்லிக் கொடுத்தாலோ நல்ல புரியும்.

சந்தோஷ் : நான் படிச்ச காலத்துல புரியாத விஷயமெல்லாம் கூட நான் ஆசிரியரான பிறகு தான் எனக்குப் புரிய ஆரம்பிச்சிருக்கு.

அறிவொளி : சரியா சொன்னீங்க சந்தோஷ். வகுப்புல கூட நல்லா படிக்கிற பிள்ளைகளை படிக்காத பிள்ளைகளுக்கு சொல்லிக் குடுக்க சொன்னா இரண்டு பேருமே பயனடைவாங்க. நான் என்ற தனி மனிதனா  இருக்கும்போது 50% மட்டுமே பூர்த்தியடையும் கற்றல், நாம் என்பதன் முக்கியத்துவம் உணர்ந்து பிறரோடு கலந்து பழகும் போது மட்டுமே முழுமையடையும். இன்றைய உலகமயமான காலகட்டத்தில் மத்தவங்களோடு கலந்து பழகுவது ரொம்ப ரொம்ப முக்கியம்.

சந்தோஷ் :  ஆமா, இப்பல்லாம் வேலைக்கான நேர்முகத் தேர்வுல ஒருத்தர் படிச்சி வாங்கின மார்க்குக்கு ஒரு குறிப்பிட்ட அளவு முக்கியத்துவம் மட்டுமே தரப்படுது. அவர் வேலை பார்க்கும் இடத்தில் மத்தவங்களோட எப்படி பழகுவார்?, குழு கலந்துரையாடலில் கொடுத்த தலைப்பில் எப்படி பேசுறார்?, சிக்கலான சூழலை எப்படிக் கையாள்வார்? தன்னோட கருத்தை மத்தவங்களுக்குத் தெளிவா புரிய வைக்க முடியுதா? குழுவா வேலை செய்யும் போது மத்தவங்களை வழி நடத்தும் தலைமைப் பண்பு இருக்கா? என்பதையெல்லாம் சோதிச்சுப் பாத்துதான் வேலை கொடுப்பாங்க.

கார்த்திக் :  எங்க வகுப்புலயே யுவராஜ்னு ஒரு பையன் இருக்கான் சார். எல்லாப் பாடத்திலும் 90-க்கு மேலத்தான் எடுப்பான். ஆனா யாரோடையும் பேசவே மாட்டான். அவனை மாதிரி பசங்க எல்லாம் இன்டெர்வியூவில் கஷ்டப்படுவாங்களா சார்?

சந்தோஷ் : ஆமா கார்த்திக், பிள்ளைங்க வெறும் புத்தகப் புழுக்களா மட்டுமில்லாம எல்லோரோடையும் கலந்து பழகி அனுபவ அறிவு பெறுவது அவசியம். ஏன்னா எவ்வளவு பெரிய பலசாலியும் தனக்கேற்ற ஓரு குழுவோட சேரும் போது தான் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். இந்தியர்கள்  தனித்தனியாக இருக்கும் போது பலசாலிகள், அறிவாளிகள், திறமைசாலிகள், ஆனால் யார் பெரியவன் என்ற போட்டி மனப்பான்மை, அடுத்தவன் தன்னை விட முன்னேறி விடக்கூடாது என்ற சுயநலம் காரணமாக குழுவாக இயங்க வேண்டிய சமயங்களில் பலமிழந்து போயிடுறாங்க. நம்ம இந்திய கிரிக்கெட் குழுவே இதுக்கு நல்ல உதாரணம்.

அறிவொளி :  உண்மை தான் சந்தோஷ். கிரிக்கெட் குழுவில்  மட்டுமில்ல பள்ளிக்கூடம், அலுவலகங்களில் எல்லாம் கூட இந்த மாதிரி மனநிலையைப் பார்க்கலாம். முழுக் குழுவும் வேலையைப் பகிர்ந்து செய்தா சுலபமா ஜெயிக்கலாம். ஆனா பல இடங்களில் யார் ஏமாளியோ அவங்களையே அதிகமா வேலை வாங்கும் பழக்கம் உண்டு. வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு, வேலை செய்யாதவனுக்கு கூலியைக் கொடு என்பது தான் பல நிர்வாகங்கள் பின்பற்றும் தத்துவம். இவங்களை விட பறவைகளே மேலானவை.

விஷ்ணு : மனுஷனை விடப் பறவைகள் மேலானவையா எப்படி சார்? 

அறிவொளி : ஆமா, பறவைகள் கூட்டமா பறக்கும் போது எப்படி பறக்கும்னு கவனிச்சிருக்கியா ? 

கார்த்திக் : நான் பார்த்திருக்கேன் சார். கூட்டமா ஆங்கில எழுத்து V வடிவத்துல பறக்குங்க  . பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கும்.

அறிவொளி : பார்க்கறதுக்கு மட்டும் அழகு இல்ல நாம கத்துக்க வேண்டிய ரொம்ப அழகான டீம் ஒர்க் அது.  ' V '  வடிவத்தின் முனையில் இருக்கும் பறவை தன் அலகாலும் இறக்கையாலும் காற்றைக் கிழிச்சுக்கிட்டு பறப்பதால் மற்ற பறவைகள் எளிதா பறக்கும்.  ஆனா அந்த முதல் பறவை சோர்ந்து போகும் போது  உடனே கடைசியில் இருக்கும் பறவை முதல்ல வந்துடும். முதல்ல இருப்பது கடைசிக்குப் போய் எளிதா பறக்கும்.  இப்படி ஓவ்வொன்னா மாத்தி மாத்தி முதல் வரிசைக்குப் போய் தலைமை ஏற்று கூட்டத்தை வழி நடத்துவதால் மொத்த கூட்டமும் எளிதா அடைய வேண்டிய இடத்தை அடைஞ்சிடும்.

சந்தோஷ் :  ரொம்ப அருமையான உதாரணம் சார். குடும்பம், அலுவலகம் எல்லா இடங்களிலும் ஒருசிலர் தானே எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்றதை விட வேலையைப் பகிர்ந்து செஞ்சா அவங்களும் சோர்வடைய மாட்டாங்க. வேலையும் சுலபமா முடியும். இதுக்கு மத்தவங்களோட கலந்து பழகும் திறன் முக்கியம்.

அறிவொளி : கூட்டுக் குடும்பங்கள் இருந்த போது மற்றவர்களோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கிறது விட்டுக் குடுத்து போவது, பகிர்ந்து சாப்பிடுவது, குழுவா விளையாடுறது, சூழ்நிலைக்கேத்தபடி தன்னை மாத்திக்கிறது, பெரியவங்க சொல்வதைக்  கேட்டு நடப்பது, இது போன்ற குணங்கள் எல்லாம் பிள்ளைகளுக்குத் தானா வந்தது. ஆனா இப்பக் கூட்டுக் குடும்பங்கள் சிதைஞ்சுப் போய் தனித்தீவுகளானப் பின்னாடி இதையெல்லாம் பிள்ளைகளுக்குக் கத்துக் குடுக்குறது பெற்றோருக்கு சுமையாகிப் போச்சு.  குறைந்த பட்சம் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்க்காம குறைந்த பட்சம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளோட விளையாடவாவது அனுமதிக்கணும். கார்த்திக், விஷ்ணு எந்தெந்த விளையாட்டுக்கள் குழு மனப்பான்மையை வளர்க்கும் சொல்லுங்க பார்க்கலாம்.

விஷ்ணு : கண்ணாம்மூச்சி, ஏழுகல், பச்சைகுதிரை, போலீஸ் திருடன் இப்படி நிறைய விளையாட்டுகள்  இருக்கு சார் .

சந்தோஷ் : சரி நான் இன்னொரு விளையாட்டு சொல்லித் தரவா?

கார்த்திக் : ஓ! தாராளமா சொல்லிக் குடுங்க சார்.

சந்தோஷ் : ஒரே வயதுல இருக்கக் கூடிய பிள்ளைகள் ஒரு குழுவுக்கு மூணு பேர்னு ரெண்டு குழுக்களா பிரிச்சுக்கணும். முதல் குழுவில் ஒருத்தரை திரைக்குப் பின்னால நிக்க வைச்சுட்டு அவர் கிட்ட இயற்கைக் காட்சி அல்லது மிருகங்கள் இருப்பது போல ஏதாவது ஒரு படத்தைக்  கொடுத்திடனும். இரண்டாவது ஆள்கிட்ட அதே படத்தை துண்டு துண்டா வெட்டி குடுத்துடனும். முதல் ஆள் திரைக்குப் பின்னால இருந்து அது என்ன உருவம், எந்த பாகத்துக்குப் பின்னால எதை வைக்கணும்னு சொல்ல சொல்ல இரண்டாவது ஆள் அதை எடுத்துக் கொடுக்க மூன்றாவது ஆள் சரியான உருவத்தை இரண்டு நிமிடங்களுக்குள் அமைக்கணும்.இரண்டு குழுவில் யார் சீக்கிரம் முழு உருவத்தையும் அமைக்கிறாங்களோ அவங்க தான் வெற்றி பெற்றவங்க.

கார்த்திக் : ரொம்ப சூப்பரா இருக்குது சார்..

சந்தோஷ் : இந்த மாதிரி போட்டிப் போட்டுக்கிட்டு குழுவா செயல்படும் போது குழந்தைகளுக்குத் தான் நினைப்பதை மத்தவங்களுக்கு சரியா புரிய வைக்கும் திறன் வளரும். அதோட வேகமா செயல்படும் திறனும், மற்றவர்களோட ஒத்துழைக்கும் திறனும் வளரும்.

கார்த்திக் : சார் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

அறிவொளி : என்ன கார்த்திக் சொல்லு .

கார்த்திக் : சந்திரமுகி படத்துல ரஜினி மத்தவங்க மனசுல நினைக்கறதெல்லாம் சரியா சொல்வாரே, அந்த மாதிரி நிஜமா செய்ய முடியுமா. இல்லை சினிமாவுக்காக அப்படி எடுத்தாங்களா ?

அறிவொளி : பிறர் மனதைப் படித்தல் என்பது ஒரு கலை கார்த்திக்.

கார்த்திக் : அதுக்கு ஏதாவது பயிற்சி இருக்கா சார்? இருந்தா சொல்லிக் குடுங்க சார்.

அறிவொளி : சரி சொல்றேன் ....

(பிறர் மனதைப் படிக்கும் கலையைக் கற்க ஒரு வாரம் காத்திருப்போமா!)

- பிரியசகி 

priyasahi20673@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT