புதையல் 26 

'காலைல ஐந்து  மணிக்கு எழுந்து அரக்க பரக்க சமையலை செய்யணும். அரை மணி
புதையல் 26 

இசையால் இணைந்திருப்போம்! 

(வாழ்க்கையில் இசையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கோபம், பதற்றம் என பீட்டா நிலையிலிருக்கும் மனதை ஆல்பா நிலைக்குக் கொண்டு வர இசை எவ்வாறு உதவுகிறது என்பதை அறிவொளி விளக்கிக்  கொண்டிருந்தார் )

அறிவொளி :  சினிமா பார்க்கும் போது நாம்  கதை, நடிப்பு, நகைச்சுவை, பாட்டு, டான்ஸ் இதையெல்லாம் ரசிக்கிறோமே தவிர பின்னணி இசையைப் பத்தி பெருசா யோசிக்கிறதே இல்லை. ஆனா பின்னணி இசை இல்லைன்னா படத்துல ஒரு சுவாரஸ்யமே இருக்காது. இப்ப சமீபத்துல வந்த வெற்றிப் படம் எதையாவது பின்னணி இசை இல்லாம எப்படி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. 

கார்த்திக் :  நேத்து ஒரு பேய் படம் பார்த்தேன் சார். நீங்க  சொன்னதும் பின்னணி இசை இல்லாம அந்த படத்தை கற்பனை பண்ணவே முடியல. ரொம்ப மொக்கையா இருக்கு.

அறிவொளி : ஆமா கார்த்திக் இசை சினிமாவுக்கு மட்டுமில்ல நம்ம வாழ்க்கைக்கு சுவை கூட்டவும் ரொம்ப முக்கியம். வாழ்க்கை ரொம்ப மெக்கானிக்கலா ஆயிடுச்சுன்னு புலம்பறவங்களுக்கு இப்ப சொல்லப் போற பயிற்சி ரொம்ப உதவும். ஒரு நாள் நிகழ்வு முழுக்க ஒரு தாளில் எழுதிட்டு ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பொருத்தமான இசையை மனசுக்குள் நாமே இசைத்துப் பார்த்தா சினிமாவை விட வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமா  ஆயிடும்.

விஷ்ணு :  சார் நம்ம ஸ்கூல் கமலா மிஸ் நிறைய நாள் லேட்டா வந்து ஹெட்மாஸ்டர்கிட்ட அடிக்கடி திட்டு வாங்குவாங்க. அந்த கோவத்தை எங்க மேல காட்டுவாங்க. ஒரு நாள் அவங்க இன்னொரு மிஸ் கிட்ட பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டேன், 

'காலைல ஐந்து  மணிக்கு எழுந்து அரக்க பரக்க சமையலை செய்யணும். அரை மணி நேரம் காட்டுக்கத்தலா கத்தி கணவரையும் பிள்ளைகளையும் எழுப்பி விட்டா எனக்கு உதவி செய்யலைனாலும் அவங்க வேலைகளையாவது அவங்களே பார்த்துக்குவாங்களானா அதுவும் கிடையாது.

அவங்களையெல்லாம் கிளப்பி அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடும். அதுக்கப்புறம் நான் கிளம்பி வந்தா பஸ்ஸை மிஸ் பண்ணி ஆட்டோ பிடித்து வந்து சேர்றதுக்குள்ள பெல்லடிச்சுடுச்சு. சிடு மூஞ்சி ஹெட்மாஸ்டர்க்கிட்ட திட்டு வாங்கிட்டு டென்ஷனோட கிளாஸ்சுக்கு போனா முக்கால்வாசி பசங்க ஹோம் ஒர்க்கே முடிக்காம இன்னும் டென்ஷன் ஆக்குறானுங்க.' அப்பிடின்னு பேசிக்கிட்டுருந்தாங்க.

நீங்க சொல்ற மாதிரி இவங்களோட வேலைகளுக்கு ஒரு பின்னணி இசைப் போட்டா அவ்வை ஷண்முகி படத்துல கமல் பாடும் 'வேலை வேலை எப்போதும் வேலை' என்ற பாட்டுத்தான் சரியாக இருக்கும் இல்லையா சார். (எல்லோரும் சிரித்தனர்  )

அறிவொளி :  நல்ல கற்பனை விஷ்ணு. பாவம் கமலா மிஸ் இதே மாதிரி தொடர்ந்து பீட்டா அலைவரிசையின் உச்சத்துலயே அவங்க இருந்தா தலைவலி,  ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதின்னு நோய்களால கஷ்டப்படுவாங்க.  அதோட வீட்லயும் உறவுகளுக்குள்ளே மன வருத்தம் தான் வரும்.  அதுக்கு பதிலா வழக்கமா எழுந்திருப்பதைவிட ஒரு மணி நேரம் முன்னாடி எழுந்து, கடவுளைக் கும்பிட்டு, பறவைகளோட கீச் கீச் இசையை ரசித்தபடி மனதில் புல்லாங்குழல் இசையை ஓட விட்டு அந்த நாளைத் தொடங்கினா எப்படி இருக்கும்!

கணவரையும் பிள்ளைகளையும் கூட சீக்கிரமே எழுப்பிவிட்டு கிளம்ப வைத்தா கமலா மிஸ்ஸின் சிரித்த முகத்தைப் பார்த்த சந்தோஷத்தில் அவங்களும்  உற்சாகமா கிளம்பிடுவாங்க. சீக்கிரம் வந்ததால ஸ்கூல்லேயும் ஹெட்மாஸ்டர் திட்றதுக்கு பதிலா பாராட்டுவாரு. அதுவே அவங்களை உற்சாகப்படுத்தும்.  அதே உற்சாகத்தோட பாடம் நடத்தினா பிள்ளைங்களும் படிக்க வேண்டியதெல்லாம் சரியா செய்துடுவாங்க. எல்லாமே ஒண்ணோட ஒண்ணு சங்கலி போல தொடர்புடையவை தான்.

இதே மாதிரி ஒவ்வொருத்தரும் காலைல எழுந்ததும் ஒரு மெல்லிசையை மனதில் ஓடவிட்டு அந்நாளைத் தொடங்கினா மனம் ஆல்பா நிலையில் அமைதியா இருப்பதால் அந்த நாள் முழுசும் அவங்களுக்கு மட்டுமில்லாம அவங்களைச் சார்ந்தவங்களும் மகிழ்ச்சியான நாளா அமையும்.

சந்தோஷ் : இந்த பயிற்சி ரொம்ப நல்லாயிருக்கு சார். கண்டிப்பா இதை தினமும் நாங்க பயிற்சி செய்வோம்.

அறிவொளி : நல்லது சந்தோஷ், அடுத்து நான் சொல்லப்போகும் பயிற்சி மூளையின் இசை மையத்தை பலப்படுத்தும் பயிற்சி.

கார்த்திக் :  அப்படியா நாங்க என்ன செய்யணும் சொல்லுங்கள் சார்.

அறிவொளி :  அமைதியா தியான நிலைல உட்கார்ந்து, சில நிமிடம் மூச்சினை உற்று நோக்கணும், கவலைகளை மறந்து, உடம்பை  நல்லா தளர்த்திக்கோங்க. உங்க கவனம் முழுவதையும் உடம்பின் கேட்கும் திறனுக்குக் கொண்டு வரணும்.

உடம்பின் எந்தெந்த பாகங்கள் கேட்கும் திறனோடு சம்பந்தப்பட்டுள்ளது என மனக் கண்ணால் பாருங்கள்.  உங்க மூளையில் கேட்கும் அறை, இசை அறை என இரு அறைகள் இருப்பதாகக் கற்பனை செய்துக்கோங்க. உங்க வலது காது தான் மூளையின் கேட்கும் அறைக்குப் போகும் வழி எனவும் உங்களோட உருவம் லிட்டில் ஜான் போல மிகச் சிறியதாகி, காதின் வழியாக கேட்கும் அறைக்கு நீங்க நடந்து போவதாகவும் நினைச்சுக்கோங்க.  அந்த அறையில் குப்பை கூளங்கள் நிறைந்து, சுவரில் சிலந்தி வலைகளும், தரையில் பழைய மெழுகு போன்ற பொருள் உறைந்தும் ஜன்னல்கள் மூடப்பட்டும் இருப்பதைப் பார்க்கறீங்க. அங்கே ஒரு முலையில் அறையைப் சுத்தப் படுத்தத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருக்குறதைப் பார்க்குறீங்க.

உடனே அறையை ஒட்டடை அடிச்சு, குப்பையையெல்லாம் சுத்தமா பெருக்கியெடுத்து, மெழுகை தேய்ச்சுக் கழுவி விட்டு ஜன்னல்களைத் திறந்து விடுறீங்க. ஜில்லுனு சுத்தமானக் காற்று உள்ளே வந்து மிச்சம் மீதி இருக்கும் தூசிகளையும் அடிச்சிட்டுப் போயிடுது. இப்போ உங்க கேட்கும் திறன் முன்னைவிட பல மடங்கு அதிகமானதை உணர்கின்றீங்க. 

சுத்தமாக்கப்பட்ட அறையில் சந்தோஷமா நடந்து போகும் போது ஒரு மூலையில் இன்னொரு கதவு மேல இசையறைனு எழுதி இருக்கு. உள்ளே நுழைந்தால் அந்த அறையும் இருண்டு, பாழடைந்த வாசனையோட, தூசும், உடைந்த இசைக்கருவிகளும் நிறைந்து காணப்படுகிறது. இப்போது இந்த அறையையும் சுத்தப்படுத்தி, ஜன்னல்களைத் திறந்து விடுகிறீர்கள். கேட்கும் அறையின் வழியாக சுத்தமான காற்றும் வெளிச்சமும் இசை அறைக்குள் நிரம்புகிறது. உங்களுக்கு பிடித்த இனிய இதமான இசை தானாக காற்றில் பரவி மனதை நிரப்புகிறது.

திருப்தி ஏற்படும்வரை இந்த சந்தோஷத்தில் திளைத்து விட்டு, நீண்ட நாள் உபயோகப்படுத்தாமலிருந்த இந்த அறைகளை தினமும் உபயோகப்படுத்த தயார் செய்த மகிழ்ச்சியுடன், ஜன்னல் கதவுகளைத் திறந்தவாறே வைத்துவிட்டு, இசையறையை விட்டு கேட்கும் அறை வழியாக வெளியே வந்து வலது காதின் வழியாக வெளி உலகத்திற்கு வந்து உங்கள் பழைய நிலையை அடைகிறீர்கள்.  மெதுவாக கண்களைத் திறந்து, உடலைத் தளர்த்தி பின், இசை அறையில்  கேட்ட இசையை நினைவுப் படுத்திப் பாருங்கள்.  இந்த அனுபவம் உங்களுக்குள்  என்ன மாற்றங்களை ஏற்படுத்தி இருக்குன்னு யோசிங்க.  

கார்த்திக் : சார் இதெல்லாம் கற்பனை மாதிரியே எனக்கு தோணல நிஜமாவே அந்த அறையில் குப்பையும், கை கால்ல எல்லாம் பிசுபிசுன்னு மெழுகும் ஒட்டிக்கிட்டு அருவெறுப்பா இருந்துச்சு. நல்லா தேச்சுக் கழுவி சுத்தம் பண்ணப் பிறகு தான் சந்தோசமா இருந்தது.

விஷ்ணு :  சார் எனக்கு லிட்டில் ஜான் படத்தைப் பார்த்தப்ப நாமும் இந்த மாதிரி நினைச்ச உடனே குள்ளமா ஆக முடிஞ்சா எவ்ளோ நல்லாயிருக்கும்னு நினைச்சிருக்கேன். இன்னைக்கு என்னை நானே அப்படி குட்டியா பார்க்க முடிஞ்சதும் நினைச்சவுடனே பழையபடி மாற முடிஞ்சதும் ரொம்ப ஜாலியா இருந்திச்சு.

சந்தோஷ் :  இருண்டு பாழடைந்த வாசனையோட இருந்த இசை அறையை சுத்தப் படுத்தி, ஜன்னல் திறந்து விட்டதுமே ஜில்லுனு காத்தோட எனக்கு ரொம்ப பிடிச்ச இளையராஜாவோட ‘இது ஒரு பொன் மாலை பொழுது’ என்ற பாட்டு கேட்டது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்தது சார்.

அறிவொளி : ஆமா சந்தோஷ், ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி நம்ம மூளைக்கு உண்மையாகவே நடப்பது போல் கற்பனை செய்யப்பட்டதற்கும், உண்மையில் நடப்பதற்கும் வித்தியாசம் தெரியாது.  இந்தப் பயிற்சியை தினமும் செய்பவர்களோட மிக நுட்பமான சத்தத்தையும் கேட்கும் திறன் அதிகரிக்கும் அதோட இசையை ரசித்து அனுபவித்து அதன் பலன்களை அனுபவிக்கும் திறனும் அதிகரிக்கும்.

கார்த்திக் :  யார் மீதாவது  ரொம்ப கோவம் இருந்தா அதை இந்த மாதிரி ஏதாவது பயிற்சி மூலம் சரி பண்ண முடியுமா சார் ?

அறிவொளி : ம்... செய்யலாம். யார் மேல உனக்கு ரொம்ப அதிகமா கோபம் இருக்கோ, அந்தக் கோபத்துக்கு காரணமான நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வா. இப்ப எதாவது ஒரு குத்துப் பாட்டையோ இந்த காட்சிக்கு பின்னணி இசையா போட்டு திரும்ப நிகழ்வை மனதில் ஓட்டிப் பார். இப்ப எப்படி இருக்கு?

கார்த்திக் : (கண்களை மூடியபடியே சிரித்துக் கொண்டிருந்தான்) ரொம்ப காமெடியா இருக்கு சார்.

அறிவொளி :  இப்ப சினிமா மாதிரி ஓடிக்கிட்டிருக்க நிகழ்வை படமா உறைய வை.  பளிச்சுனு தெரியும் படத்தை மங்கலாக்கு, அளவை சிறியதாக்கு மனதின் ஒரு முலைக்கு கீழே இறக்கு. இதே நபரோட சமாதானமா சந்தோஷமா இருந்த நிகழ்வை மனதில் கொண்டு வந்து அதை உறைய வைக்க அதை அளவில் பெரிதா பிரகாசமா ஆக்கு மனசு முழுக்க இந்த படம் பெரிசாக ஆக, முதலில் இருந்த கோபமான படம் சின்னதா கடுகு போல  மறைஞ்சே போயிடுச்சு.

எப்பவும் மனசு சந்தோஷமா இருக்கும் போது நீ கேக்க விரும்பும் பாட்டு இப்ப மனசுக்குள்ள கேக்குது.  இப்ப நீ ரொம்ப சந்தோஷமா இருக்குற மாதிரியே இனி எப்பவும் இந்த நபரோட சந்தோஷமா இருக்க போறே.  இனி சண்டை, கோபம் எதுவும் கிடையாது.  ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டு கண்களை மெதுவா திற எப்படி இருக்கு கார்த்திக்?

கார்த்திக் : ரொம்ப தேங்க்ஸ் சார்,   ராகுல் என்ற ஒரு பையனோட மட்டும் எனக்கு எப்பவும் பிரச்னை வந்துக்கிட்டே இருக்கும்.  போய் பேசி சரி பண்ணலாம்னு நினைச்சாலும் ஏதோ ஒண்ணு தடுக்கும். நான் ஏன் முதல்ல பேசணும்,  அவன் வந்து பேசட்டுமேன்னு தோணும்.  ஆனா இப்ப அந்த சண்டை போட்ட நிமிஷம் மறந்து போய் அவனோட சந்தோஷமா விளையாடியது தான் நல்லா பளிச்சுன்னு தோணுது இப்ப நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் சார். ரொம்ப தேங்க்ஸ்.

சந்தோஷ் : நீ மட்டும் இல்ல கார்த்திக் பெரியவங்களே இது மாதிரி யாரோடையாவது சண்டை போட்டுட்டு மனசை பாரமாக்கி வச்சிருப்பாங்க. எத்தனையோ கணவன் மனைவியர் தங்களுக்குள்ள இருக்க சின்ன சின்ன பிரச்சனையை ஊதி ஊதிப் பெருசாக்கிடுவாங்க.  அவதானே முதல்ல சண்டையை ஆரம்பிச்சா, அவளே வந்து பேசட்டும்னு கணவனும், ஏன் அவர் வந்து பேசினா குறைஞ்சா போயிடுவாருன்னு மனைவியும் நினைச்சு கடைசிவரை பேசாமலே விவாகரத்து பண்ணி பிரிஞ்சு போனவங்ககூட உண்டு. பேசணும்னு நினைச்சாலும் ஈகோ தடுக்கும்.  இந்த பயிற்சியால முதல்ல மனசளவில் இருக்கற தடையை சரி செய்து அவங்களோட சந்தோஷமா இருந்த நாட்களை மனசில் முன்னிறுத்துக்கிட்டா பிறகு அவங்களை நேரில் பார்க்கும் போது பேசவோ சமாதானமா பேசவோ எந்த தடையும் இருக்காது.

கார்த்திக் :  உண்மை தான் சார் இனிமே ராகுலோட பேச எனக்கு எந்தத் தயக்கமும் கிடையாது.

விஷ்ணு :  இவங்க ரெண்டு பேர் மாதிரியே எல்லா டீச்சருங்களும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும் இல்லடா கார்த்திக் ! 

கார்த்திக் :  ஆமாண்டா வாழ்க்கைக்குத் தேவையான எவ்ளோ நல்ல விஷயம் கத்துக்க குடுக்குறாங்க !

அறிவொளி :  அடடா! ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க தம்பிகளா இன்னும் நிறைய இருக்கே ! உடல் முழுக்க இசையைக் கேட்டு ரசிக்குறதுன்னா என்னன்னு தெரியும ?

விஷ்ணு : இசை மழையில் நனையறதுன்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கோம், உடல் முழுக்க இசையைக் கேக்குறதுன்னா எப்படி ? 

(எப்படி எனத் தெரிந்து கொள்ள அடுத்த வாரம் வரை காத்திருப்போம். அதற்கு இன்று அறிவொளி சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை மேற்கொண்டு பிறருடன் உள்ள மனஸ்தாபங்களை சரி செய்து கொள்வோமா? )

- பிரியசகி 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com