மனநல மருத்துவம்

பெண்கள் மீதான வன்மங்களும், வக்கிரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன?

ஸ்ரீதேவி குமரேசன

கடந்த சில ஆண்டுகளாகத்தான் மெல்லமெல்ல மேலெழுந்து வந்து கொண்டிருக்கும் பெண் இனத்தை, தொடங்கிய இடத்திற்கே மீண்டும் தள்ளிவிடும் பரமத பாம்பு போன்ற இறக்கமற்ற சிலரின் செயல்களால் பெண் இனம் மீண்டும் முடக்கப்படும் சூழல் உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை. நிர்பயா, ஸ்வாதி, இன்னும் வெளிச்சத்துக்கு வராத இன்னபிற தோழிகள் என தொடர் கொடூரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க. சட்டங்களும், திட்டங்களும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவுகட்ட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதுபோன்ற கொடுமைகளை கண்டித்து, சென்னையில் பெண்ணியல் ஆர்வலர்கள் சார்பில் ஓர் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட மனநல ஆலோசகர் வசந்தி பாபு நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

இன்றைய சமுதாய சூழலில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்புகள் அதிகம் உள்ளது. பொதுவாக மனிதர்கள் எல்லாரும் பொருள் சேர்க்க வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும், புகழ் சேர்க்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் தனிமனித ஒழுக்கம் முக்கியம் என்பதை யாரும் நினைப்பதில்லை. மனநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அது போன்று நல்ல சாப்பாடு, தூக்கம், அமைதி போன்றவற்றை இழந்து இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருப்பதும், துக்கம், கோபம், சந்தோஷம் என எதையும் ஒருநிலைப்படுத்த தெரியாமல் மனித மனசு மாசுபட்டுள்ளதும், கரை பட்டுள்ளதும்தான், பெண்கள் மீதான வன்மங்களும், வக்கிரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணமாகிறது.

முன்பெல்லாம், கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். பெரும்பாலான பெண்கள் இல்லதரசிகளாக இருந்தனர். இதனால் குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பியதும் அவர்களுடன் பேசவும், அவர்களுக்கு தேவையானதை செய்யவும் ஆட்கள் இருந்தனர். ஆனால் தற்போது, 80 சதவீத குடும்பங்கள் தனிக்
 குடித்தனங்களாக உள்ளனர். அதிலும் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் பள்ளி முடிந்து திரும்பியதும், அவர்களே வீட்டின் பூட்டை திறந்து உள்ளே வந்து தாளிட்டுக் கொண்டு , பிரிஜ்ஜில் வைத்துள்ள உணவை எடுத்து சூடாக்கி சாப்பிட வேண்டும். அவர்கள் பேசவோ, தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவோ, பிரச்னைகளை சொல்லவோ ஆளில்லாமல் குழந்தைகள் மனம் இறுகிக் கிடக்கிறது. அப்படியே பெற்றோர் வீடு திரும்பினாலும், ஒரு வித டென்ஷனுடனேயே அவர்கள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு குழந்தைகளுடன் பேசவோ, பகிர்ந்து கொள்வோ நேரமில்லை.

மேலும், ஆரோக்கியமற்ற உணவு, சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாதது, வேலைப் பளு, உடல் அசதி போன்றவற்றினால் கண்மூடி படுத்திருந்தாலும் மனசு தூங்காமல் விழிப்புடன் இருக்கிறது. இதனால் தூக்கமின்மை ஏற்படுகிறது. மனிதனுக்கு தூக்கம் குறைந்து போனாலே உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. அதுபோன்று வேகம் அதிகம் உள்ளது. ஒவ்வொரு தனி மனிதனின் நிதானமும் வரவரகுறைந்து போகிறது. இதனால் மன ஆரோக்கியமும் கெட்டு போகிறது. மனிதனின் நிதானம் குறையும் நிலை தொடர்ந்து ஏற்படும்போது மனதில் வக்கிரங்கள் தோன்றுகின்றன.

குழந்தைகளை பள்ளியில் சேர்க்க நினைக்கும்போது அவர்களுக்கு தனியாக சாப்பிட பழக்குவது, பாத்ரூம் செல்ல பழக்குவது போன்றவற்றை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம் அல்லவா, அப்போதே வேற்று ஆள் தங்களைத் தொட அனுமதிக்கக் கூடாது என்பதையும், குட் டச், பேட் டச் போன்றவற்றையும் புரியும்படி சொல்லித் தர வேண்டும். இப்படி செய்வதனால் குழந்தைகளை ஒருவர் தொட நேரிடும்போது அது சரியா, தவறா என்பதை அவர்களால் உணர முடியும்.

இனியும் இதுபோன்ற வன்மங்கள் தொடராமலிருக்க, பெற்றோர்தான் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையின் ரோல்மாடல் ஆவார். எனவே, குழந்தைகள் முன் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் முன் சண்டையிட்டு கொள்ளும் பெற்றோர் பின்னர், ஒருவருக்கு சமரசமாகி தனியாக கொஞ்சிக் கொள்வார்கள். ஆனால் குழந்தையின் மனதில் அவர்களின் சண்டை மட்டும்தான் நிற்கும். இதனால் குழந்தைகள் தனது நண்பர்கள் இடத்தில் இலகுவாக சண்டை போடுகிறார்கள்.

அது போன்று நிறைய வீடுகளில் குழந்தைகளை வளர்க்க ஆயாக்களை அமர்த்துகிறார்கள். பல வீடுகளில் அந்த ஆயாக்களே குழந்தைகளின் பிரச்னையாக இருக்கிறார்கள். குழந்தையை, ஆயா எந்நேரமும் திட்டுவதும், அடிப்பதும், மயக்கமருந்து கொடுத்து தூங்க வைப்பதுமாக இருக்கிறார்கள். இது தெரியவந்த பின் பெற்றோர் தவிக்கிறார்கள்'  என்றார்.

 இதையெல்லாம் தவிர்க்க என்ன செய்யலாம்?

 இவர் கூறும் ஆலோசனைகள் அடுத்த பதிவில்....
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

SCROLL FOR NEXT