மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும்போதே,  குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம். வேலைக்குச் செல்ல வேண்டுமா?  வேண்டாமா?
மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

சென்ற இதழின்  தொடர்ச்சி....   

குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும்போதே, குழந்தையை எப்படி வளர்க்க போகிறோம். வேலைக்குச் செல்ல வேண்டுமா? வேண்டாமா?  குழந்தையை யார் வளர்ப்பது, யார் பார்த்துக் கொள்வது போன்றவற்றையெல்லாம் முடிவு செய்ய வேண்டும். முடிந்தளவிற்கு பெற்றோர் அருகில் இருந்து குழந்தையை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.  அல்லது தாத்தா - பாட்டி உறவுகளையாவது அவர்களுடன் இருக்கச் செய்ய வேண்டும்.  தாத்தா - பாட்டி  உறவுகளைவிட ஆயாக்கள் யாரும் குழந்தையை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளமாட்டார்கள். 

சில பெற்றோர் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஓடி ஓடி சாம்பாதிக்கிறார்கள். ஆனால் சரியான முறையில் குழந்தையை கவனிக்காமல் ஒரு நாள் அந்த குழந்தையே இல்லாமல் போனால் பின் யாருக்காக சம்பாதிக்கிறார்கள், எதற்காக சம்பாதிக்க வேண்டும் என்று யோசிப்பதில்லை. 

பெண்  குழந்தைகளின் பாதுகாப்பை பற்றி குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் முன் பெற்றோர் தான் முதலில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் மீது எப்போதும் கவனம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் அவ்வப்போதைய உடல் வளர்ச்சி  குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களின் நார்மலான செயல்களிலிருந்து ஏதாவது மாற்றம் தெரிந்தால் உடனே அதனை உணர்ந்து, எதனால் இந்த மாற்றம் நிகழ்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் தங்களுடைய பிரச்னைகளை பற்றி பயமில்லாமல் பெற்றோரிடம்  பேசுவதற்கான இடத்தை வழங்க வேண்டும்.

காலையில் இருந்து மாலை வரை என்ன நடந்தது, யாருடன் எல்லாம் பேசினார்கள், விளையாடினார்கள் என்பதையெல்லாம் விளையாட்டாகவே பேச்சுக் கொடுத்து தெரிந்து கொள்ள வேண்டும்.  இப்படி பேசும்போது அவர்களை அறியாமலே குழந்தைகள் பலவற்றை கொட்டிவிடுவார்கள். குழந்தைகளை காத்தாடி போன்று சுதந்திரமாக பறக்க விட வேண்டும்.  ஆனால், கயிறு நம்மிடம் இருக்க வேண்டும். காத்தாடியை ரொம்ப இழுத்துப் பிடித்தால் கயிறு அறுந்து விடும். இலகுவாக விட்டால் கத்தாடி அறுந்துவிடும் எனவே கட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும்.

தற்போது  11 - வயது குழந்தைக்கு இப்படி  ஓர் அவலம் நடந்திருக்கிறது என்பதை அறிந்து  நமக்கு  பதறுகிறது. பல மாதங்களாக இந்த கொடூர செயல் நடைபெற்றுள்ளது என்று கூறுகிறார்கள். இது பெற்றோருக்கு தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒருவருக்குக் கூடவா தெரியாமல் இருந்திருக்கும். யோசித்து பாருங்கள். அப்படி யாராவது அறிந்திருந்தால் அவர்கள் நமக்கு ஏன் வம்பு என்று இருந்திருக்கலாம் அல்லவா.

இது நாளை நமக்கும் வரலாம் என்ற எண்ணம் இல்லாமல் போய்விட்டதும் இதற்கு ஒரு காரணம். மக்களிடம் சமூகப் பொறுப்பு குறைந்து போனதுதான் இது போன்ற வன்கொடுமைகள் தொடர்வதற்கு காரணங்கள் ஆகிறது. உள்ளங்கையில் உலகையே கொண்டு வரும் செல்போன்கள் தற்போது குழந்தைகளின் விளையாட்டு சாதனமாகிப் போனதால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வமும்,  அதனால் ஏற்படும் வக்கிரங்களும் கூடுகிறது. இதனால் ஆண், பெண் உடல் ரீதியான மாற்றங்கள் குறித்து அறிவியல்ரீதியாக குழந்தைகளுக்கு பாடமாக வகுப்புகளில் புரிய வைத்துவிட்டால் இது போன்ற கொடூரமான செயல்கள் குறைந்துவிடும். 

ஒவ்வொரு மனிதனும் தன் மனதை தன் வசத்துக்குள் வைத்துக் கொள்ள யோகா, தியானம் போன்றவற்றை பழக்கிக் கொள்ள வேண்டும். மனதை சுத்தமாக வைத்துக்  கொள்ள யோகாசனங்களும், தியானங்களும்தான் உதவும்.

ஒரு தவறு நடந்துவிட்டால், குற்றம் இழைத்தவன் மீது நமக்கு கோபம் வருகிறது. அதே சமயம் அந்த தவறு எந்த சூழலில் நடந்துள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால், பெரும்பாலும் பெற்றோரின் கவன குறைவால்தான் நிகழ்ந்திருக்கும். இதனால் பெற்றோர் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். பெண்கள் மீது நிகழ்த்தும் கொடுமைகளுக்கு அரபு நாடுகளில் இருப்பது போன்று கடுமையான தண்டனையை நமது அரசாங்கமும் அறிவிக்க வேண்டும். கடுமையான தண்டனைகள் மூலம் அடுத்து தவறு செய்ய நினைப்பவருக்கு பயத்தை உண்டு பண்ண வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்.  அது போன்று சமுதாயம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், தனி மனித ஒழுக்கம் காக்கப்பட வேண்டும்,  அரசும் விழிப்புடன் செயல்பட வேண்டும் இவைதான் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழி' என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com