5. மனப்போக்கு: மாற்றக் கூடியவை! அகண்ட பார்வை

நம்மை மாற்றிக் கொள்வதற்கு நாம் இடம் கொடுத்து விட்டாலே உடனடியாக நமக்குள் ஒரு சுதந்திர உணர்வு ஏற்படும்.
5. மனப்போக்கு: மாற்றக் கூடியவை! அகண்ட பார்வை

மனப்பான்மையைப் பற்றி, குறிப்பாக, அது எவ்வாறு ‘மாற்றமில்லாததா?’ என்பதைப் பற்றி கடந்த சில வாரங்களாக பேசிக் கொண்டு  வருகிறோம். நம்முடைய மனப்பான்மை நாம் நினைக்கும் விதங்களில், ஆற்றலில், செயல்பாட்டில் தென்படும். இதுவரையில் நாம் பார்த்தது, ‘ஆம், மனப்பான்மை மாற்ற முடியாது, நான் இப்படித்தான்’ என்பவர்கள் எவ்வாறு மற்றவர்கள் நற்சொல்லுக்குக் காத்திருப்பார்கள், ஊக்குவிக்கும் பலவற்றை தங்களது அடையாளங்களாக்கிக் கொள்வார்கள் என்று. இதில் அவர்கள் பெறும் மதிப்பெண், ஊதியம், சான்றிதழ் எல்லாம் அடங்கும். இதன் விளைவுகளையும் விவரித்துப் பேசி வந்தோம். இவர்கள் தாமாக யோசித்தோ, சுயமாகவோ வேலை செய்யமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘மற்றவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்’ என்ற நினைப்பு உண்டு. இவர்கள் குறுகிய மனப்பான்மை உள்ளவர்களாக இருப்பார்கள்.

இனி வரும் பாகங்களில் பேசப் போவது,  மனப்போக்கு: மாற்றக் கூடியவை’ இதற்கு, ‘அகண்ட பார்வை’ தேவையானது.

மனப்பான்மை மாற்றக் கூடியவை!

மனப்பான்மை என்பது ஒரே விதமாகவும், அதே நிலையில் நிலைத்து இருக்க வேண்டும் என்பதே இல்லை. மாற்றி அமைக்க முடியும். மனப்பான்மையை மாற்றிக் கொள்ள விரும்புவார்களை எளிதாக அடையாளம் காணமுடியும். வளைந்து கொடுப்பவர்களாக இருப்பார்கள், சூழ்நிலைக்கு ஏற்றபடி தன்னை மாற்றி அமைத்துக் கொள்வார்கள்..

முக்கியமாக இவர்களின் யுக்திகள் மிக எளிமையானவையே இருப்பதால் அடையாளம் கண்டு அறிதல் மிகவும் ஈஸி! அவர்களின் அடையாள அட்டைகள் இப்படித் தென்படும்: இவர்களுக்குக் கற்றல் என்பதை எப்பொழுதும் ஆர்வமாக அணுகுவார்கள். எதை எடுத்தாலும் அவர்களின் ஆவல் மிகத் தெளிவாகத் தென்படும். தெரிந்து கொள்வதையும் புரிந்து கொள்வதையும் பிரதானமாகக் கருதுவார்கள். இதற்குக் காரணமே அவர்கள் தங்களுக்கு ‘தெரிந்தது, கை அளவே’ என்று இருப்பதுதான்.

இந்தத் தன்னடக்கம் மிகவும் வெளிப்படையாகத் தென்படும். எந்த ஒரு அச்சமின்றி, ‘தெரியவில்லை’ என்றால் அதை எந்தவித ஒளிவு மறைவின்றி சொல்வார்கள். இப்படி, வெளிப்படையாகக் காட்டுவதில் வெட்கமோ, கூச்சமோ படமாட்டார்கள். தெரியாத நிலையில் இருப்பதற்குப் பதிலாக, தானாகத் தேடியோ, அல்ல மற்றவர்களிடம் உதவிக் கேட்டு கொண்டோ தெரிந்து கொள்வார்கள். தெரியாததை அறிந்து கொள்வதற்கு முக்கியத்துவம் தருவார்கள்.

இப்படிச் செய்வதில் எந்த ஒரு உள் நோக்கமும் இருப்பதில்லை. அதாவது, இவர்களைப் பொருத்தவரை மதிப்பெண்கள், பட்டங்கள், என்ற கவசங்கள் அணிவதற்கு என்றும் முக்கியத்துவம் இல்லை.

அதற்குப் பதிலாக, கேள்வி எழுப்புதல், தேடுதல் - முடிக்கும் வரை முயற்சி என்பதே அவர்களின் தாரக மந்திரமாகும்! இந்தச் சுபாவத்தினால் ஆக்கப்பூர்வமாக இருக்க முடிகிறது.

எதை எடுத்தாலும் செய்வதில்தான் அதிகமான சந்தோஷம் அடைவார்கள். முடிப்பதிலேயே குறியாக இருக்க மாட்டார்கள். எதைச் செய்தாலும் அவர்களின் கண்ணோட்டத்தில் அதைப் புதிர் போல் எடுத்து அதன் ஒவ்வொரு பாகத்தைப் புரிந்து, அறிந்து கொள்வதில் ஆனந்தப் படுவார்கள். இந்த உணர்வுதான் அவர்களை ஊக்கவிக்கும். முடித்துவிட்டு “சபாஷ்" கிடைப்பதில் இல்லை.

இவர்களின் பக்குவமான அணுகு முறை இப்படித் தோன்றும்:

‘நீங்க சொல்றாப்புல, இது கஷ்டம் தான். ஃபர்ஸ்ட் என்னவென்று புரிந்து கொள்ளலாம். செய்யறது, அப்புறம்’

‘ஓ, வாயேன், எனக்குத் தெரிந்ததை சொல்லித் தரேன்’

‘(மனதுக்குள்: இத எங்க நுழைக்கலாம்? இங்கே? ம் ம்) அண்ணே, ஒன் மினிட் ஒரு ஹெல்ப், ப்ளீஸ்’

‘ஸாரி, டீச்சர். இதை எனக்குக் கொஞ்சம் திரும்ப விளக்க முடியுமா, ப்ளீஸ்?

அகண்ட பார்வை உள்ளவர்களை வித்தியாசப்படுத்துவதே: விளக்கம் கேட்பது, சந்தேகங்களைத் தெளிவு செய்வது, இவை எல்லாமே கற்றலில் அடங்கும் என்று ஏற்றுக் கொள்வார்கள். இந்த வழிமுறைகள் தலை குனிவு என்று கருத மாட்டார்கள்.

தன் குறைபாடுகளைச் சரி செய்ய முயல்வார்கள். இவர்கள், வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்க முயற்சிப்பவராக இருக்க மாட்டார்கள். இவர்களுக்குப் போட்டி, பதவி முக்கியம் என்பதே இல்லை. மற்றவர்களுக்கு உதவுவது, சொல்லித் தருவது, தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்வது, இவர்களின் அங்க அடையாளமாகும். இதுவே அவர்களின் தனித்துவமாகும்.

முயற்சி, உதவி கேட்பது, உதவுவது, புரிந்து கொள்வது என்பதற்குத் தான் பிரதான இடம் கொடுப்பார்கள். பரிசு, பதவி இருக்கிறதோ, இல்லையோ ஆனாலும் வாழ்க்கைப் பாதையில் வெற்றி மட்டும் காண்பார்கள்.

நன்மைகள்

நம்மை மாற்றிக் கொள்வதற்கு நாம் இடம் கொடுத்து விட்டாலே உடனடியாக நமக்குள் ஒரு சுதந்திர உணர்வு ஏற்படும். ஏன்? வரும் தகவல்களை, கருத்துக்களை, எண்ண அலைகளை வரவேற்போம். வருவதை ஏற்றுக்கொள்வோம். நாமும் முயற்சிப்போம். நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, தேவையானதைத் தேர்வு செய்வோம். அதாவது, ஒரு பரந்த மனப்பான்மையுடன் பார்ப்போம், செயல்படுவோம்.

பல தரப்பட்ட கருத்துக்களைக் கேட்டு கொள்வதால் நமக்கு மேலும் புரிந்து கொண்டு நல்ல முறையில் செயல்பட உதவிடும். மற்றவர்கள் சொல்வதிலும் ஏதோ ஒன்று இருக்கிறது என்று மதிக்கத் தெரிவதே நல்ல குணமாகும்.

‘ஆம் எனக்குத் தெரியாது’ என்று ஏற்றுக் கொள்வதினால் நம்மைத் தாழ்த்திக் கொள்கிறோம் என்பதல்ல. மாறாக அப்படிச் சொல்வதற்கு தெளிவு ஒரு முக்கியமான அம்சமாகும். அத்துடன், தைரியமும் இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக நேரும். ஏன், எப்படி? நம்மைப் பற்றிய குறைகளைப் பகிர்ந்து கொள்ள, அதைச் சரி செய்ய நமக்குள் உள்ள மனோதிடம் தென்படும். அதுவும் நம் சக்தியே!

இப்படித் தன்னை தானே சுதாரிப்பதால், ‘எனக்கு எல்லாம் தெரியும்’, ‘யாராலையும் என்னை மிஞ்ச முடியாது’ என்று எண்ணுவதாகாது. தெரிந்து கொள்ள இன்னும் இருக்கிறது என்றே இருப்பார்!

இவர்களின் அடையாளம்: பக்குவம், அடக்கம், தெளிவு! மற்றவர் சொல்லையும் உள்வாங்கிக் கொள்வார் (இப்படி இருக்கையில், மற்றவருக்கும், இவர்கள் மேல் மரியாதை கூடுமோ?) இதை மேலும் விளக்க, வரும் வாரங்களில் பேசலாம்.

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com