குளிக்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்! வெறும் குளியல் சமாசாரம்தானே என்று அலட்சியம் காட்டாமல் முழுவதும் படித்துவிடுங்கள்! 

கூழானாலும் குளித்துக் குடி என்பது ஆன்றோர் வாக்கு. உண்மை. குளிப்பதினால் உடல் மட்டும் சுத்தமாகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
குளிக்கப் போகிறீர்களா? ஒரு நிமிடம்! வெறும் குளியல் சமாசாரம்தானே என்று அலட்சியம் காட்டாமல் முழுவதும் படித்துவிடுங்கள்! 


 
கூழானாலும் குளித்துக் குடி என்பது ஆன்றோர் வாக்கு. உண்மை. குளிப்பதினால் உடல் மட்டும் சுத்தமாகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மேனியில் தண்ணீர் பட்டவுடன் உடலுடன் சேர்ந்து, உள்ளமும் சுத்தமாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். 

சிலருக்கு, குளியலறைக்குச் சென்றதும்தான் பாட்டு வரும். பக்கெட்டிலிருந்து தண்ணீரை மொண்டு மொண்டு விட்டுக் கொண்டோ, பாத் டப்பிலோ அல்லது ஷவரின் கீழேயோ நின்று கொண்டு, பாடிக் கொண்டே மணிக்கணக்கில் நேரம் போவது கூடத் தெரியாமல் குளித்தபடி பாத்ரூமையே ஒரு வழி பண்ணிவிட்டுத்தான் வெளியே வருவார்கள். நிறைய நேரம் குளிப்பதால், உடலுக்கும், நீர்வளத்திற்கும்  ஏற்படும் சில பிரச்சினைகளும், அது மட்டுமல்லாது குளியலறை சுகாதாரக்கேடுகள் என்னென்ன என்பதையும் சற்றே பார்ப்போம். 

ஒரு நாளைக்கு எட்டு நிமிடங்கள் குளிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்பொழுது, வருடத்திற்கு சுமார் 48 மணி நேரம் குளிப்பதற்காக நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள். அந்த நேரத்தைச் சுருக்கி, ஒரு நாளைக்கு நான்கு நிமிடங்கள் குளியலுக்காகச் செலவழித்தால், வருடத்திற்கு சுமார் 24 மணி நேரம்தான் குளியலுக்காக அவகாசம் ஒதுக்குகிறீர்கள். 

தண்ணீர் செலவழிவதும் கணிசமாகக் குறைகிறது. மோட்டார் போட்டு  அதனால் கரண்ட் பில் ஏறுவதும் குறைகிறது. தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாகவே இருக்கும் நம் நாட்டில், தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

சிலருக்கு, ஒருமுறை சோப்பு போட்டுக் குளித்தால் திருப்தி உண்டாகாது. இரண்டு முறை, மூன்று முறை சோப்பைப் போட்டு, தேய் தேயென்று தேய்த்துக் குளித்தால் தான் நிறைவு உண்டாகும். A. A. D. என்று கூறப்படும் அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் டெர்மட்டாலஜி மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? அதிகமாக சோப்பை உபயோகித்தால், நம் சருமத்தினை பாதுகாக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன என்றும் அதனால் சருமம் வறண்டு, சிவந்து, சொறி ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள். 

தலைக்குக் குளிக்கும் போது, முதலில் தலைக்கு ஷாம்பூவை போட்டுக்கொண்டு, உடம்பெல்லாம் சோப்பு தேய்த்த பின்தான் தலையை அலசும் பழக்கம் பொதுவாக உள்ளது. அது தவறான பழக்கம். தலையின் சருமப் பகுதியில் ஷாம்பூவில் இருக்கும் ரசாயனம் வேர்க்கால்களில் இறங்கி சருமத்தில் பாதிப்பினை உண்டாக்கிவிடும். ஷாம்பூ தடவிய முடியை அலசி விட்டே உடலுக்கு சோப்பு போட வேண்டும். இல்லாவிட்டால் கடைசியாக தலைக்கு ஷாம்பூ குளியல் எடுத்துக் கொள்ளலாம். 

சில இளம் பெண்கள், தலைக்குக் குளித்தபின், விளம்பரங்களில் வரும் ஆரணங்குகளைப் போல், தேங்காய்ப்பூ துவாலையை தலையில் சுற்றிக்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். தேங்காய்ப்பூ டவலை (டர்க்கி டவல்) தலையிலிருந்து அவிழ்க்கும் பொழுது, முடி அதிக அளவில் உதிர்ந்து விடுவதோடு, வேர்க்கால்களுடன் கழன்று விடுவதற்கும் வாய்ப்பு உண்டாகிறது. 

தலை, உடல் துடைத்துக் கொள்ளும் துண்டுகளை பாத்ரூமிலேயே வைத்துக் கொள்ளும் வசதி இருக்கும். அவைகளை அங்கேயே வைப்பதால், பாக்டீரியாக்கள் பெருகி, தொற்று உண்டாக அதிகளவில் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், துண்டுகள், உடம்பு தேய்த்துக் கொள்ளும் ஸ்பான்ஞ் போன்றவைகளை பாத்ரூமில் வைப்பதைத் தவிர்த்தல் வேண்டும். 

தலைக்குக் குளித்தபின் கண்டிஷனர்கள் உபயோகிப்பவர்கள், முடியின் வேர்க்கால்களில் அப்ளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். முடியிலும், முடியின் நுனியிலும் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். 

எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால், எண்ணை தேய்த்துக் குளிப்பவர்கள், குளித்துவிட்டு வெளியில் வந்தவுடன், அடுத்தவர்களின் சௌகர்யத்திற்காக, தரையை நன்கு தேய்த்துக் கழுவி விட வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தவரின் மண்டையை உடைத்த பாவத்திற்கு ஆளாக நேரிடலாம். 

என்ன வாசகர்களே, ஒரு குளியல் சமாசாரத்திற்குள் எத்தனை விஷயங்கள் அடங்கியிருக்கின்றன, புரிந்து கொண்டீர்களா? 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com