அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவில் மாற்றமில்லை: இரோம் ஷர்மிளா

மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16 ஆண்டுகளாக
அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவில் மாற்றமில்லை: இரோம் ஷர்மிளா

இம்பால்:  மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, தான் அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.
மணிப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா (44) பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், "அரசியலில் ஈடுபட்டு மணிப்பூர் முதல்வராவதே எனது லட்சியம். அவ்வாறு ஆனப்பிறகு, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவதே எனது முதல் பணி' என்று அறிவித்திருந்தார்.
இதனிடையே, இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தைக் கைவிட்டதில் அவரது ஆதரவாளர்களும், பொது மக்களும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு உள்ளூர் மக்களால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் அவரது அரசியல் பிரவேசத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில தீவிரவாத அமைப்புகளும் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து இரோம் ஷர்மிளா இம்பாலில் பிடிஐ செய்தியாளரிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அரசியலில் ஈடுபடுவது என்ற முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் எனக்கு ஆதரவளிக்க வில்லை எனில், என் தனிப்பட்ட வாழ்க்கையை கவனிப்பேன். நான் அரசியலில் ஈடுபடுவதற்கு மக்கள் ஆதரவு அளிப்பர் என நம்புகிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com