தில்லியில் 44 சிறு அணைகள் தேவை: ஆய்வில் தகவல்

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையில் தில்லி வனப் பகுதிகளில் 44 சிறு அணைகளை

புது தில்லி: நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வகையில் தில்லி வனப் பகுதிகளில் 44 சிறு அணைகளை ஏற்படுத்துவதும், 480 நீர் நிலைகளை உருவாக்குவதும் அவசியம் என்று இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இன்டாக் அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் அதிகரித்து வரும் குடியிருப்புகள், வணிக கட்டுமானங்கள் ஆகியவற்றால் நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையிலும், நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையிலும் இது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள நிலத்தடி நீர் ஆய்வில் நிபுணத்துவம் பெற்ற இந்திய தேசிய கலை, கலாசாரப் பாரம்பரிய அறக்கட்டளை (இன்டாக்) அமைப்பிடம் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு கேட்டுக் கொண்டது.
 இப்பணியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தில்லி நீர்ப் பாசனத் துறை அமைச்சர் கோபால் ராய் ஒப்படைத்தார். இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக ஆய்வுப் பணியை மேற்கொண்ட இந்த அமைப்பு, இது தொடர்பான அறிக்கையை தில்லி அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
 நிலத்தடி நீரைப் பாதுகாக்க தில்லி வனப் பகுதியில் 44 சிறு அணைகள், 480 நீர் நிலைகள் அமைக்கப்படுவது அவசியமாகும். மேலும், 500 சதுர மீட்டர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். அதேபோன்று தண்ணீர் செல்லும் வடிகால்களில் கான்கிரீட் அமைப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக நீரை உறிஞ்சும் வகையில் மென்தன்மையுள்ள மண் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று இன்டாக் தனது ஆய்வு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.
 இது குறித்து தில்லி அரசின் உயரதிகாரி கூறியதாவது: இன்டாக் அமைப்பின் ஆய்வு அறிக்கையில் சாக்கடை, குளங்கள் ஆகியவற்றில் திடக் கழிவுகள் கொட்டப்படாமல் இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்த தில்லி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
 300 சதுர மீட்டர் அளவுள்ள அனைத்துக் குடியிருப்புகள், வர்த்தக மனையிடங்களில் முன் பகுதியில் மென்தன்மையுள்ள மண் அமைப்பு ஏற்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.
மேலும், தினமும் 10 ஆயிரம் லிட்டர் கழிவு நீரை உற்பத்தி செய்யும் குடியிருப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதியை ஏற்படுத்தும் வகையில் துணை விதிகளை செயல்படுத்துவதும் அவசியமாகும் என்று அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார் அந்த அதிகாரி.
 இந்த ஆய்வு அறிக்கை தொடர்பாக தங்களது கருத்துகளை ஒரு மாதத்திற்குள் தெரிவிக்குமாறு தொடர்புடைய அனைத்துத் துறைகளையும் தில்லி நீர்ப் பாசனத் துறை அமைச்சர் கோபால் ராய் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com