பசுப் பாதுகாப்பு அமைப்பினருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

பசுப் பாதுகாப்பு அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு

புது தில்லி:  பசுப் பாதுகாப்பு அமைப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் பசு இறைச்சியை வைத்திருந்ததாக தலித்துகள், முஸ்லிம்கள் பாதுகாப்புப் படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதையடுத்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியும் பசுப் பாதுகாப்பு அமைப்பினருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோரை சமூக விரோதிகள் என்றும், அவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மோடி கேட்டுக் கொண்டிருந்தார். இதையடுத்து, பசுப் பாதுகாப்புப் பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் பிரமுகர் தேக்சின் எஸ். பூனாவாலா என்பவர், வன்முறையில் ஈடுபடும் பசுப் பாதுகாப்பு அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடும்படி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள், சிறுபான்மையினர் மீது சில குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றன; சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கு நிலை உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு அந்த குழுக்களை தடை செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடும் பசுப் பாதுகாப்பு அமைப்பினரை பாதுகாக்கும் வகையில், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சட்டப் பிரிவை சட்டவிரோதமானது என்று அறிவித்து அதை நீக்க வேண்டும்' எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com