பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட் தாக்கல்: மத்திய நிதியமைச்சகம் ஏற்பு

அடுத்த நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டை தாக்கல்

புது தில்லி: அடுத்த நிதியாண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்வைத்த திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதன்மூலம், கடந்த 92 ஆண்டுகளாக ரயில்வே பட்ஜெட் தொடர்பாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை முடிவுக்கு வருகிறது.
இதுகுறித்து தில்லியில் சுரேஷ் பிரபு, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:
ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதினேன். ரயில்வேத் துறையின் நலன் மற்றும் நாட்டின் நலனுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கான நடைமுறைகளை தயாரிக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.
ரயில்வே அமைச்சக வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
ரயில்வே அமைச்சரின் திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் ஏற்றுக் கொண்டுவிட்டது. மேலும், இதற்கான நடைமுறைகளை உருவாக்குவதற்காக நிதியமைச்சகம், ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த 5 அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய நிதியமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. அந்த குழுவை, ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
92 ஆண்டுகால ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை முடிவுக்கு கொண்டு வருவதும், பிரதமர் மோடியின் சீர்திருத்த திட்டங்களில் ஒன்றாகும்.
இதன்படி, இரு பட்ஜெட்டுகளும் ஒன்றாக சேர்க்கப்பட்டால், ரயில்வே பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவது, குறைப்பது தொடர்பான முடிவுகளை மத்திய நிதியமைச்சர்தான் இனிமேல் எடுப்பார் என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
ரயில்வே ஊழியர் அமைப்பு எதிர்ப்பு: இதனிடையே, பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பதற்கு அனைத்து இந்திய ரயில்வே ஊழியர் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கோபால் மிஸ்ரா கூறுகையில், "இரு பட்ஜெட்டுகளும் இணைக்கப்பட்டால், ரயில்வேயின் சுதந்திரம் பறிபோகிவிடும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com