மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படுகிறது தொன்மையான பிரேதப் பரிசோதனைச் சட்டம்

பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் தொடர்பாக பிரிட்டீஷார் காலத்தில் கொண்டுவரப்பட்ட

நாகபுரி:  பிரேதப் பரிசோதனை நடைமுறைகள் தொடர்பாக பிரிட்டீஷார் காலத்தில் கொண்டுவரப்பட்ட 117 ஆண்டுகள் பழமையான சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட உள்ளது.
மகாராஷ்டிரத்தின் வார்தா மாவட்டத்தில் உள்ள சேவாகிராமத்தில் மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எம்ஜிஐஎம்எஸ்) செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவத் தடயவியல் பிரிவின் தலைவராக இருக்கும் டாக்டர் இந்திரஜித் காண்டேகர் கூறியதாவது:
மிகவும் பழமையான பிரேதப் பரிசோதனை சட்டம் தொடர்பாக நான் சுயமாக ஆய்வு செய்து அறிக்கை தயாரித்துள்ளேன். தற்போதுள்ள சட்டமானது இறப்பவர்களின் நெருங்கிய உறவினர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது.
மேலும், தற்போதுள்ள சட்டத்தின்படி மேற்கொள்ளப்படும் பிரேதப் பரிசோதனைகளை வைத்து, நீதிமன்றங்களால் குற்றவாளிகள் இழைக்கும் குற்றங்களை நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதிப்படுத்தி தீர்ப்பளிக்க முடிவதில்லை.
இந்த விஷயத்தில் கடந்த 1898-ஆம் ஆண்டு முதல், பிரிட்டீஷ் காலனி ஆதிக்க கால சட்டங்களையும், நடைமுறைகளையும் டாக்டர்கள் பின்பற்றி வருகின்றனர். அந்தச் சட்டங்களையும் நடைமுறைகளையும் பிரிட்டனிலேயே கைவிட்டு விட்டனர். ஆனால், நாம் அவற்றை இப்போதும் பின்பற்றி வருகிறோம்.
எனினும், இந்தியாவில் இந்தப் பழமையான நடைமுறைகள் கூட முழுமையாகவும், சரியாகவும் பின்பற்றப்படுவதில்லை. எனவே, பிரேதப் பரிசோதனை சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக நான் அறிக்கை தயாரித்துள்ளேன். அதை பிரதமர் அலுவலகத்திடம் சமர்ப்பித்தேன். மேலும், அதன் பிரதிகளை மத்திய உள்துறை அமைச்சர், சட்டத்துறை அமைச்சர் மற்றும் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன்.
எனது அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பிரதமர் அலுவலகம் அதை உள்துறை அமைச்சகத்தின் நீதிப் பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையைப் பரிசீலித்து, அதில் ஏதாவது திருத்தம் தேவைப்பட்டால் அது தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு சட்ட ஆணையத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது என்றார் டாக்டர் காண்டேகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com