கர்ப்ப காலத்தில் தாம்பத்தியத்திற்கு தடை? மத்திய அரசின் சர்ச்சைக்குரிய கையேடு!

ஆரோக்கியமான  குழந்தை பிறப்புக்கு கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று, மத்திய அரசின் ஆயுஷ் துறை வெளியிட்டுள்ள கையேடு ஒன்று சர்சையைக் கிளப்பியுள்ளது
கர்ப்ப காலத்தில் தாம்பத்தியத்திற்கு தடை? மத்திய அரசின் சர்ச்சைக்குரிய கையேடு!

புதுதில்லி: ஆரோக்கியமான  குழந்தை பிறப்புக்கு கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்று, மத்திய அரசின் ஆயுஷ் துறை வெளியிட்டுள்ள கையேடு ஒன்று சர்சையைக் கிளப்பியுள்ளது.

தில்லியில் மத்திய அரசின் ஆயுஷ் துறை  சார்பாக சமீபத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில், 'தாய் மற்றும் சேய் நலம்' என்னும் பெயரில், ஆரோக்கியமான  குழந்தை பிறப்புக்கு கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் தொடர்பான கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். மத்திய அரசின் நிதியுதவி பெரும் 'யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான மத்திய குழு' என்னும் அமைப்பு இந்த கையேட்டினை தயாரித்துள்ளது. இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள்தான் தற்பொழுது சர்சையைக் கிளப்பியுள்ளது.

இந்த கையேட்டில், 'கர்ப்பிணிகள் பேராசை, கோபம், உணர்வுப்பூர்வமான தொடர்பு, வெறுப்பு மற்றும் காமம் உள்ளிட்டவைகளிலிருந்து தங்களை விலக்கி கொள்ள வேண்டும். கெட்டவர்களை விட்டு விட்டு நல்லவர்ககளுடன் மட்டும் தான் தொடர்பிலிருக்க வேண்டும்.

அத்துடன் டீ, காபி, சர்க்கரை, வெள்ளை மாவு பொருட்கள், கரம் மசாலா, எண்ணையில் பொறிக்கப்பட்ட பொருட்கள், முட்டை மற்றும் அசைவம் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

அத்துடன் ஆன்மிக சிந்தனைகள்  கொண்டிருப்பதோடு மகத்தான ஆளுமைகளின் வரலாறுகள் ஆகியவற்றை படிக்க வேண்டும்.

இறுதியாக தங்களது படுக்கையறை சுவர்களில் 'நல்ல அழகான' குழந்தைகளின் படங்களை மாட்டி வைத்திருக்க வேண்டும்.இதன் மூலம் கருவிலிருக்கும் குழந்தைக்கு நல்ல விளைவுகள் ஏற்படும்' என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் கூறியதாவது

இந்த கையேடானது கர்ப்பிணிகளுக்கு உதவக் கூடியது என்று  நம்பப்படும் யோகா பயிற்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கையேட்டில் எங்குமே அவர்கள் உடல் உறவைத் தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை. யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையிலும், வருடக்கணக்கான யோகா பயிற்சிகளின் விளைவாக நமது முன்னோர்கள் கண்டறிந்த அறிவின் அடிப்டையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com