கதுவா வழக்கு விசாரணை நியாயமாக இல்லை என்றால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை 

கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கதுவா வழக்கு விசாரணை நியாயமாக இல்லை என்றால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை 

புதுதில்லி: கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கதுவாவில் இருக்கும் பழங்குடியின இஸ்லாமியர்களை மிரட்டும் வகையில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்து உள்ளது. சிறுமிக்கு நிதி வேண்டும் என இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

தற்பொழுது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சி ராம், விஷால் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பில், நேர்மையான விசாரணை நடைபெற விசாரணையை சண்டிகாருக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டது.  இதுதொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.எம்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு  முன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வியாழன் அன்று இந்த வழக்கானது மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியதாவது:

இந்த வழக்கு விசாரணையின் முக்கிய கவலையே நேர்மையாக நடக்குமா என்பதுதாகதான் உள்ளது. வழக்கில் நேர்மையாக விசாரணை நடந்து வந்தாலும் அதனை திசை திருப்ப இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பார் கவுன்சில் என்ன சொல்கிறது என்ற விவகாரத்தில் செல்ல வேண்டாம். அது நமக்கு கவன விலக்கத்தை ஏற்படுத்தும்.

எங்களுடைய முதல் கவலை என்பது இந்த வழக்கில் ஒரு நியாயமான விசாரணையை உறுதி செய்வது. நீதியில் எந்தஒரு தடையும் ஏற்படக்கூடாது என்பதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவருக்காக வாதிடும் வழக்கறிஞர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை அரசியல் சாசனம் உறுதியளிக்கிறது.

நியாயமாக விசாரணைக்கு நடக்க இயலாது என்பதற்கு சிறிதளவு வாய்ப்பு இருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கருதி எங்களை அணுகினாலும் வழக்கின் விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும் என்பதை அவர்களுக்கு உறுதியளிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் தரப்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com