ஆய்வறிக்கை நிராகரிப்பு தான் கேரள வெள்ளத்துக்கு காரணம்: சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை நிராகரித்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தெரிவித்துள்ளார்.
ஆய்வறிக்கை நிராகரிப்பு தான் கேரள வெள்ளத்துக்கு காரணம்: சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் ஆய்வறிக்கையை நிராகரித்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

ஆலுவா, சாலக்குடி, செங்கன்னூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் ஆணையம் வெளியிட்ட ஆய்வறிக்கையை நிராகரித்ததுதான் கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்துக்கு காரணம் என்றும், இதேபோன்று கோவா மாநிலத்திலும் இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்:

கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட அணைகள், சாலைகள், குவாரிகள், சுரங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் தொடர்பாக ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் பாதிப்புகள் குறித்து கடந்த 2011-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் ஆணையம் ஆய்வறிக்கை வெளியிட்டு எச்சரித்திருந்தது. ஆனால் அவை எதையும் கேரள அரசு பின்பற்றவோ அல்லது நடைமுறைப்படுத்தவோ இல்லை.

இயற்கையின் இந்த சீற்றத்தின் காரணம் ஒட்டுமொத்த சமூகத்தையும் தான் சேரும். மக்கள் தங்களின் சொந்த உரிமைகளை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. உள்நோக்கம் கொண்ட ஒரு சில சக்திகளின் பின்னணியில் தான் இந்த ஒட்டுமொத்த அரசாங்கத்தின் இயக்கமும் அமைந்துள்ளது. இந்த பேரழிவுக்கு அதுதான் முக்கிய காரணம்.

இது கேரளாவுக்கு மட்டும் கிடையாது. கோவா மாநிலத்தில் நடைபெற்று வரும் சுரங்க முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி ஷா தலைமையிலான ஆணையத்தின் ஆய்வறிக்கையும் பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதில், சுரங்கப் பணிகளில் அரசின் நடைமுறைகள் பின்பற்றப்படுவது தொடர்பான ஆய்வுகள் எதுவும் நடைபெறவில்லை. இந்த சுரங்க நடவடிக்கைகளால் பல்லுயிர் அமைப்பில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதே நிலைத் தொடர்ந்தால் கோவா மாநிலத்தில் இதுவரையும், இனிவரும் காலங்களிலும் இயற்கைப் பேரிடர்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இவ்வாறு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் கட்கில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com