மஹாராஷ்டிராவில் ஐவர் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு 

மஹாராஷ்டிராவில் இடதுசாரி செயல்பாட்டாளர்கள் ஐவர் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் ஐவர் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்பு 

புது தில்லி: மஹாராஷ்டிராவில் இடதுசாரி செயல்பாட்டாளர்கள் ஐவர் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதி செய்ததாக, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிய பல்வேறு மாநிலங்களில், இடதுசாரி ஆர்வலர்களின் வீடுகளில் காவல்துறையினர் நடத்திய சோதனைகளில், இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான வராவர ராவ் உள்பட ஐவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பீமா-கோரேகான் பகுதியில் நடைபெற்ற எல்கர் பரிஷத்' நிகழ்ச்சியின் போது, வன்முறையைத் தூண்டியதாகக் கூறி, இடதுசாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 5 நபர்கள் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபட்டது, அங்கு பறிமுதல் செய்யப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அக்கடிதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியது குறித்தும் இடம்பெற்றிருந்தது. 

மற்றொரு கடிதத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் போல, பிரதமர் நரேந்திர மோடி மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பலர் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும், அவர்களுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகித்த காவல் துறையினர், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்தக் கடிதத்தில் ஹைதராபாதைச் சேர்ந்த இடதுசாரி சிந்தனையாளரான வராவர ராவின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரைத் தேடி ஹைதராபாதுக்குச் சென்ற மகாராஷ்டிர காவல் துறையினர், அங்கு ராவைக் கைது செய்தனர். மேலும், அவர் தங்கியிருந்த குடியிருப்பைச் சோதனை செய்த காவல் துறையினர், பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். 

இது தவிர சத்தீஸ்கர், மும்பை, மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், தெலங்கானா, தில்லி, ஹரியாணா, கோவா ஆகிய நகரங்களிலும், எல்கர் பரிஷத்' நிகழ்ச்சியின் போது வெடித்த வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தேடி, இடதுசாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில் முக்கியமாக ஹைதராபாதிலுள்ள ராவின் மகள் வீடு, தில்லியிலுள்ள இடதுசாரி ஆர்வலர் கெளதம் நவ்லகா வீடு, ஹரியாணாவிலுள்ள சுதா பரத்வாஜ் வீடு, கோவாவிலுள்ள ஆனந்த் தெல்தும்டே வீடு ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். மேலும், அவர்களுடைய நிதிப்பரிமாற்றங்கள், தொலைத்தொடர்புச் சாதனங்கள் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டன. இது தொடர்பாக, இதுவரை இடதுசாரி ஆர்வலர்கள் வெர்னான் கோன்சல்வேஸ், கெளதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், வராவர ராவ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ், நக்ஸல்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுடன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

அதேசமயம் இவர்கள் ஐவரும் முறையற்ற வகையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அவர்களை விடுவிக்க கோரியும் பிரபல வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர் உள்ளிட்டோர் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி  உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கானது புதன் மதியம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது  அப்பொழுது இந்த ஐந்து பேரைக் கைது செய்தது தொடர்பாக விளக்கம அளிக்குமாறு மஹாராஷ்டிர மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், ஐந்து பேரையும் வீட்டுக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் வழக்கினை வரும் வியாழன் அன்று ஒத்திவைத்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com