பாஜகவை மக்கள் நிராகரித்துவிட்டனர்: காங்கிரஸ்

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும்,
புது தில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தொண்டர்கள்.
புது தில்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அந்தக் கட்சியின் தொண்டர்கள்.


ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும், அடுத்த மக்களவைத் தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதேபோல், பல்வேறு எதிர்க்கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன. 
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய பாஜக அரசின் ஆட்சியில், நாட்டு மக்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் தொடர்பான முக்கிய பிரச்னைகளை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து எழுப்பி வருகிறார். அவர் முன்வைக்கும் கேள்விகளுக்கு, பிரதமர் மோடியிடம் எந்த பதிலும் இல்லை. 
தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் சிறப்பான செயல்பாட்டுக்கு ராகுல்தான் காரணம்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வாக்குறுதிகளை முன்வைத்து ஆட்சியை பிடித்த பாஜகவால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், அடுத்த மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். மோடியின் செல்வாக்கு சரியத் தொடங்கி விட்டது என்றார் அசோக் கெலாட்.
தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக்: அடுத்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பிரியாவிடை அளிக்கப்போவதை உணர்த்துவதாக தற்போதைய பேரவைத் தேர்தல் முடிவுகள் உள்ளன. மோடி தலைமையிலான மோடி அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு படுதோல்வி கிடைத்துள்ளது.
மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி: தற்போதைய பேரவைத் தேர்தல்களில் பாஜகவுக்கு எங்கும் இடமில்லாமல் போய்விட்டது. ஜனநாயகத்தில் மக்கள்தான், எப்போதுமே முக்கியத்துவம் நிறைந்தவர்கள். இது, மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.
அநீதி, அராஜகம், விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துதல், அரசு அமைப்புகளை வலுவிழக்கச் செய்தல், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள், சிறுபான்மையினருக்காக எந்த பணியையும் செய்யாதிருத்தல் என்ற மத்திய அரசின் போக்குக்கு தோல்வியே மிஞ்சியுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்: மத்திய பாஜக அரசின் கொள்கைகளால், விவசாயிகள், இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், தாங்கள் ஆட்சி செய்த மாநிலங்களில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு பின், பாஜக இல்லாத இந்தியா உருவாகும்.
சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்: எளியவர்கள் ஒன்று கூடினால், பலசாலிகளை வீழ்த்திவிடலாம் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com