மிஸோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரமில், மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ். வடகிழக்கு பிராந்தியத்தில் காங்கிரஸ் ஆட்சி
மிஸோரமில் ஆட்சியை இழந்தது காங்கிரஸ்!


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிஸோரமில், மிஸோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ். வடகிழக்கு பிராந்தியத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்த ஒரே மாநிலம் மிஸோரம் மட்டுமே; தற்போது அங்கும் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.
கிறிஸ்தவ மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள மிஸோரமில், கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வந்தது. முதல்வராக மூத்த தலைவர் லால் தன்ஹாவ்லா பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், அங்குள்ள 40 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. இதில், 26 தொகுதிகளில் மிஸோ தேசிய முன்னணி வெற்றி பெற்றது. இதன் மூலம் பெரும்பான்மை பலத்துடன் அக்கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. அதேவேளையில், கடந்த முறை 34 இடங்களை கைப்பற்றியிருந்த காங்கிரஸ், இந்த தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
பாஜக கணக்கு தொடக்கம்: 
ஸோரம் தேசியவாத கட்சி, மிஸோரம் மக்கள் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகள் இணைந்து உருவாக்கிய ஸோரம் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள், 8 இடங்களில் வெற்றி பெற்றனர். துய்சாவ்ங் பேரவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட புத்தா தன் சக்மா வெற்றி பெற்றதன் மூலம், மிஸோரமில் பாஜக கணக்கை தொடங்கியுள்ளது.
இரு தொகுதிகளிலும் முதல்வர் தோல்வி: மிஸோரம் முதல்வராக இருந்த லால் தன்ஹாவ்லா (76), தாம் போட்டியிட்ட செர்ச்சிப், சம்பாய் ஆகிய இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். இதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
புதிய முதல்வர் தேர்வு: மிஸோரமில் கடந்த 2008-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஆட்சியை பிடித்துள்ள மிஸோ தேசிய முன்னணி கட்சி, ஆரம்பத்தில் பிரிவினைவாத இயக்கமாக செயல்பட்டது. 
பின்னர் 1986-ஆம் ஆண்டில் மிஸோ உடன்படிக்கையின் மூலம் வன்முறையை கைவிட்டு, அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
இக்கட்சியின் தலைவர் ஸோரம்தங்கா (84), 1998 முதல் 2008 வரை மிஸோரம் முதல்வராக பதவி வகித்தவர். தற்போது அவரது கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ள நிலையில், புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. அதில், புதிய முதல்வராக ஸோரம்தங்காவும், துணை முதல்வராக தான்லுயாவும் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் கும்மணம் ராஜசேகரனை சந்தித்த ஸோரம்தங்கா, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

மிஸோரம் தலைநகர் ஐஸாலில் பேரவைத் தேர்தல் வெற்றியைக் கொண்டாட, கட்சித் தலைமையகத்தில் குவிந்த மிஸோ தேசிய முன்னணித் தொண்டர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com