சபரிமலை: சில கட்டுப்பாடுகளை நீக்கியது கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காவல்துறையினரால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சிலவற்றை நீக்கி, கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
சபரிமலை: சில கட்டுப்பாடுகளை நீக்கியது கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் காவல்துறையினரால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சிலவற்றை நீக்கி, கேரள உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. சபரிமலையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட உயர்நிலை குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பரில் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால், அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில், கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.
இதனிடையே, சபரிமலையில் நேரில் ஆய்வு செய்வதற்காக, மாநில காவல்துறை தலைமை இயக்குநர் உள்பட 3 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலை குழுவை, உயர்நீதிமன்றம் அமைத்தது. இந்த குழுவினர், பம்பை, நிலக்கல், சபரிமலை சந்நிதானம் ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், காவல்துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தனர். பின்னர், தங்களது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் ராமசந்திர மேனன், என்.அனில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வாவர் நடை, மகாகாணிக்கை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்ற வேண்டும்; சரங்குத்தியில் இரவு 11 மணிக்கு பிறகு பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். 
உயர்நிலை குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படுவதை காவல்துறை தலைமை இயக்குநர் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதேவேளையில், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்காக, காவல்துறையினர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
பேரவை ஒத்திவைப்பு: இதனிடையே, சபரிமலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியை அடுத்து, கேரள சட்டப் பேரவை 8-ஆவது நாளாக புதன்கிழமையும் ஒத்திவைக்கப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com