டிஆர்எஸ் கட்சியின் 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்: அதிர்ச்சி அறிக்கை வெளியானது!

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை
டிஆர்எஸ் கட்சியின் 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்: அதிர்ச்சி அறிக்கை வெளியானது!

ஹைதராபாத்: தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் குற்ற வழக்குகளை சந்தித்து வருபவர்கள் என்றும் அவர்களின் சராசரி சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

தெலங்கானா மாநிலம் புதிதாக உருவாக்கப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் தேர்தலிலும் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியே வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தின் முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவியேற்றார். இருப்பினும், சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைய பல மாதங்கள் இருந்த நிலையில், முன்கூட்டியே அதை கலைக்கும்படி ஆளுநருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பரிந்துரைத்தார். இதையடுத்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுடன் சேர்த்து, தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கும் அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டது.

இத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இருப்பினும் டி.ஆர்.எஸ் கட்சி 88 தொகுதிகளை கைப்பற்றி, மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பலம் பெற்றது. காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி 21 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. பாஜக ஒரேயொரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்ததையடுத்து, தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 2ஆவது முறையாக ஹைதராபாதில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று வியாழக்கிழமை பதவியேற்றார் சந்திரசேகர் ராவ்.

இந்நிலையில், தில்லியை சேர்ந்த ஜனநாயக ரீதியான சீர்திருத்த சிந்தனை சங்கம் (ஏ.டி.ஆர்) வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில், தெலங்கானா பேரவைக்கு 2018-இல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 119 எம்.எல்.ஏ.க்களில் 73 பேர் (61 சதவீதம்) குற்ற வழக்குகளை சந்தித்து வருவது தெரிய வந்துள்ளது. இவர்களின் சொத்து மதிப்பு முந்தைய உறுப்பினர்களோடு ஒப்பிடுகையில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. 
 
குற்ற வழக்குகளை சந்தித்து வரும் 77 பேரில், 47 பேர் மீது (40 சதவீதம்) கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். குற்ற வழக்குகளை சந்திப்பவர்களில் அதிகம்பேர் (50 பேர்) தெலங்கானா ராஷ்டிர சமிதியை சேர்ந்தவர்கள். 2014 ஆம் ஆண்டு பேரவையில் இடம்பெற்ற ஒரு எம்.எல்.ஏ.வின் சராசரி சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 70 லட்சமாக இருந்தது. 

ஆனால், தற்போது நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் இடம்பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்து, ரூ.15 கோடியே 71 லட்சமாக உள்ளது. 

காங்கிரசை சேர்ந்த ராஜகோபால் ரெட்டி ரூ.314 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். இவரைத்தொடர்ந்து மாரி ஜனார்த்தன் ரெட்டி (டிஆர்எஸ்), கே. உபேந்தர் ரெட்டி (காங்கிரஸ்) ஆகியோர் ரூ. 161 கோடி, 91 கோடி சொத்துக்களுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர். 

கடந்த 2014 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் பலரும் மீண்டும் 2018 பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதிலும் டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.

இருப்பினும், 2014 சட்டப்பேரவையில் 9 ஆக இருந்த பெண் உறுப்பினர்களின் பலம் தற்போது 6 ஆக குறைந்துள்ளது. 

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் அவர்கள் தாக்கல் செய்த சுயமான பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ததின் அடிப்படையிலேயே பெறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com