ஆர்பிஐ நிர்வாகக் கட்டமைப்பை மறுஆய்வு செய்ய முடிவு

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிர்வாகக் கட்டமைப்பை மறுஆய்வு செய்வது குறித்து பரிசீலிக்க ஆர்பிஐ மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) நிர்வாகக் கட்டமைப்பை மறுஆய்வு செய்வது குறித்து பரிசீலிக்க ஆர்பிஐ மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஐ-யின் புதிய ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவரது தலைமையில் நடைபெற்ற முதல் ஆர்பிஐ கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, ஆர்பிஐ சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. 
அதில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சவால்கள், நாட்டின் பணப் புழக்கம், வங்கிக் கடன் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இது தவிர ஆர்பிஐ நிர்வாகக் கட்டமைப்பை மறுஆய்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆர்பிஐ நிர்வாகக் குழுவின் 18 உறுப்பினர்கள் பங்கேற்றனர். வங்கித் துறையின் தற்போதைய வளர்ச்சி மற்றும் போக்கு குறித்த வரைவு அறிக்கையும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த நவம்பர் 19-ஆம் தேதி அப்போதைய ஆர்பிஐ ஆளு நர் உர்ஜித் படேல் தலைமையில் ஆர்பிஐ மத்திய நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. 
அப்போது சுமார் 10 மணி நேரம் நீடித்த கூட்டத்தில், "ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதி ரூ.9.59 லட்சம் கோடி தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலை நிபுணர்கள் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டதுடன், வங்கிகளுக்கு கவலை தரும் பிரச்னைகள் குறித்து ரிசர்வ் வங்கியின் நிதி மேலாண்மை வாரியம் ஆய்வு செய்யும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெற்றக் கூட்டத்தில் உயர்நிலை நிபுணர்கள் குழு அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
முன்னதாக, ஆர்பிஐ-யின் இருப்பில் உள்ள ரூ.9.69 லட்சம் கோடியில் இருந்து மூன்றில் ஒரு பங்கை, அதாவது ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாகவும், அந்தத் தொகையை வழங்க ஆர்பிஐ மறுப்பதால்தான் இரு தரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமன்றி, ஆர்பிஐ சட்டம் 7-ஆவது பிரிவைப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கிக்கு சில உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக, விளக்கமளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "ரிசர்வ் வங்கி உள்பட எந்த அமைப்பிடம் இருந்தும் மத்திய அரசுக்கு கூடுதல் நிதி எதுவும் தேவையில்லை. ரிசர்வ் வங்கியிடம் இருப்பு நிதியை பெறும் நோக்கம் அரசுக்கு இல்லை. தேர்தல் வருவதால் அடுத்த 6 மாதங்களுக்கு மட்டும் கூடுதல் நிதியைத் தருமாறு நாங்கள் (மத்திய அரசு) கேட்கவில்லை. அதற்கான தேவையும் எழவில்லை' என்றார்.
இதற்கு முன்பு, ஆர்பிஐ முறையாக செயல்படாததால்தான் வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்தது என்று அருண் ஜேட்லி குற்றம்சாட்டி இருந்தார். அப்போது, ஆர்பிஐ-யின் தன்னாட்சி உரிமையில் தலையிட மத்திய அரசு முயலுவதாக ஆர்பிஐ துணை ஆளுநர் ஆச்சார்யா தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com