ரஃபேல் விவகாரத்தால் அமளி: நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்றம் நற்சான்று வழங்கியதை அடுத்து, இந்த விவகாரத்தை முன்வைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால்
ரஃபேல் விவகாரத்தால் அமளி: நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் பிரதமர் மோடிக்கு உச்சநீதிமன்றம் நற்சான்று வழங்கியதை அடுத்து, இந்த விவகாரத்தை முன்வைத்து ஆளும் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில், பெருமளவில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, ரஃபேல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த  மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நற்சான்று அளித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், அந்த மனுக்களை தள்ளுபடி செய்து விட்டது. இந்த விவகாரம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை எதிரொலித்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, ராகுல் காந்திக்கு எதிராக ஆளும் கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வலியுறுத்தினர். இதனால், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவை 40 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியபோது, ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்திய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்புக்கு ராகுல் காந்தி பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதை ஏற்க மறுத்த காங்கிரஸ் உறுப்பினர்கள், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். இரு தரப்பினரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் அமளி: இதே விவகாரத்தை முன்வைத்து, மாநிலங்களவையிலும் வெள்ளிக்கிழமை அமளி ஏற்பட்டது. மாநிலங்களவை உடனடிக் கேள்வி நேரத்துக்காக கூடியதும், புலந்த்சாஹர் வன்முறையைக் கண்டித்து சமாஜவாதி உறுப்பினர்கள் கோஷமிட்டார். மேக்காதாட்டு விவகாரத்தை எழுப்பி அதிமுக உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதியில் திரண்டு கோஷமிட்டனர். 
மற்றொரு புறம், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி உறுப்பினர்கள், ராகுல் காந்தி ஒரு பொய்யர் என்று கோஷமிட்டனர். உறுப்பினர்களின் அமளியால் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. அவையை சுமுகமாக நடத்துவதற்கு மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மேற்கொண்ட முயற்சி தோல்விகள் முடிந்தன. இதையடுத்து, அவையை வரும் திங்கள்கிழமை வரை அவர் ஒத்திவைத்தார்.
இதனால், குளிர்காலக் கூட்டத் தொடரின் நான்காவது நாளான வெள்ளிக்கிழமையும் இரு அவைகளிலும் குறிப்பிடும்படியாக எந்த அலுவல்களும் நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com