இந்தியா

சுனாமி பாதித்த இந்தோனேசியாவுக்கு இந்தியா உதவும்: சுஷ்மா சுவராஜ்

PTI


புது தில்லி: இந்தோனேசியாவில் எரிமலை சீற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இந்தியா சார்பில் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியாவில் சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பெரும் சோகத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீட்புப் பணிகளில் இந்தோனேஷியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிக்க இந்தியா தயாராக உள்ளது என்று சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலை தாக்கி 281 பேர் உயிரிழந்தனர்.

கடந்த சில நாள்களாக புகைந்து கொண்டிருந்த அனக் கிரகட்டோவா எரிமலை சனிக்கிழமை, உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் வெடித்தது. இதையடுத்து, அதிலிருந்து வெளிப்பட்ட சாம்பல் மற்றும் புகை வானில் பல மீட்டர் உயரத்துக்கு பரவியது. 

இந்த எரிமலை சீற்றத்தையடுத்து சுமத்ரா தீவையொட்டி சுனாமி அலை உருவானது. சுனாமி அலை சுமத்ராவின் தெற்குப் பகுதி மற்றும் ஜாவாவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளை கடுமையாகத் தாக்கின. 

சுனாமி தாக்கிய பகுதிகள் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் நிறைந்தது என்பதால் பலர் அந்த அலையின் கொடூரப் பிடியில் மாட்டிக் கொண்டனர். சுனாமி அலையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சுமத்ரா மற்றும் ஜாவா பகுதிகளைச் சேர்ந்த 748 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 28 பேரைக் காணவில்லை. நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. சம்பவத்தையறிந்த தேசிய பேரிடர் மேலாண்மை முகமை அமைப்பினர் மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கினர். கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடும் பொதுமக்களை மீட்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.

எரிமலை சீற்றத்தால் சுனாமி ஏற்படுவது என்பது மிக மிக அரிதான நிகழ்வாகும். தற்போது கடலில் ஏற்பட்ட சுனாமி அலை அந்த எரிமலை சீற்றம் காரணமாக கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் அமைந்து விட்டன என சர்வதேச சுனாமி தகவல் மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுன்டா நீரிணைப்பையொட்டியுள்ள கடற்கரையோரப் பகுதிகளில் சுனாமியின் போது மக்கள் அதிகஅளவில் குழுமியிருந்தனர். நிலநடுக்கத்தையடுத்து சுனாமி ஏற்படுவதைப் போன்று இந்த நிகழ்வானது அமையவில்லை. மாறாக எரிமலை சீற்றம் காரணமாக திடீரென சுனாமி உருவானதால் எச்சரிக்கை செய்வதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிரகட்டோவா எரிமலை கடந்த 1883-ஆம் ஆண்டில் சீற்றத்தை வெளிப்படுத்தியதில் 36,000 பேர் உயிரிழந்தனர். கடந்த 2004 டிசம்பர் 26-இல் சுமத்ரா பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் காரணமாக உருவான சுனாமி அலையில் இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள நாடுகளைச் சேர்ந்த 2,20,000 பேர் உயிரிழந்தனர். இதில் 1,68,000 பேர் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT