ஆணையிட்ட எடியூரப்பா; அமல்படுத்துவாரா குமாரசாமி? 

கர்நாடகாவின் முதல்வராக பல சர்ச்சைகளுக்குப் பிறகு எடியூரப்பா கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்ற எடியூரப்பா பதவியேற்ற கையோடு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். 
ஆணையிட்ட எடியூரப்பா; அமல்படுத்துவாரா குமாரசாமி? 

கர்நாடகாவின் முதல்வராக பல சர்ச்சைகளுக்குப் பிறகு எடியூரப்பா கடந்த வியாழக்கிழமை பொறுப்பேற்றார். இதையடுத்து, அவர் பதவியேற்ற கையோடு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். அதில், 2 பேர் மாநில உளவுத்துறை பிரிவுக்கு மாற்றப்பட்டனர். 

ஆனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா சனிக்கிழமை அன்று முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனால், கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. கர்நாடகாவின் புதிய முதல்வராக குமாரசாமி 23ம் தேதி பொறுப்பேற்று ஆட்சி அமைக்க உள்ளார். 

இந்நிலையில், புதிய ஆட்சியில் எடியூரப்பா பிறப்பித்த 5 ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்றம் அப்படியே விடப்படுமா அல்லது மீண்டும் மாற்றம் செய்யப்படுமா என்ற குழப்பம் நீடிக்கிறது. 

காவல்துறை தலைமை கூடுதல் இயக்குநர் அமர் குமார் பாண்டே மற்றும் காவல்துறை துணைத்தலைவர் சந்தீப் பாட்டீல் ஆகிய இருவரும் மாநில உளவுத்துறைக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இந்த 2 அதிகாரிகளும் ஆணை பிறப்பித்த கடந்த வியாழக்கிழமை அன்றே தங்களது பொறுப்பை ஏற்றுக்கொண்டனர்.   

இதுதவிர, சிக்கமாகலுரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அண்ணாமலை ராமநகராவுக்கு மாற்றப்பட்டார். பிதார் காவல்துறை கண்காணிப்பாளர் தேவராஜா பெங்களூரு மத்திய பிரிவின் துணை காவல் ஆணையராகவும், உழல் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் கிரிஷ் பெங்களூருவின் வடகிழக்கு பிரிவின் துணை காவல் ஆணையராகவும் மாற்றப்பட்டனர்.

இதில், அண்ணாமலை சிக்கமாகலுரு பொறுப்பை வேற காவலரிடம் ஒப்படைத்துவிட்டு, ராமநகராவுக்கு பொறுப்பேற்க சென்றார். ஆனால், இடமாற்றத்துக்கான பிறப்பிதழ் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால், பிறப்பிதழுக்காக ராமநகராவில் காத்திருந்த அவர் மீண்டும் சிக்கமாலுருவுக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி அவரது இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து உள்துறை அமைச்சக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கையில், "காங்கிரஸ், மஜத கூட்டணி புதிய ஆட்சி பொறுப்புக்கு வர இருக்கிறது. புதிய ஆட்சி வந்தவுடன் மீண்டும் அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என்பதால் இடமாற்றம் செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் தங்களது புதிய பதவிகளின் பொறுப்பை ஏற்கவேண்டாம் என்று அதிகாரிகளை நிறுத்திவைத்திருக்கப்பட்டுள்ளது" என்றார். 

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் தெரிவிக்கையில், "காவல்துறை இயக்குநரிடம் இருந்து எங்களிடம் எந்த இடமாற்ற பிறப்பிதழும் வரவில்லை. அதனால், நாங்கள் புதிய பொறுப்பை இன்னும் ஏற்கவில்லை. இது புதிய ஆட்சியை பொறுத்து தான் உள்ளது. இடமாற்றம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை. அதனை ரத்து செய்வதா அல்ல அதற்கான பிறப்பிதழை வழங்குவதா என்பதை தீர்மானிப்பதில் தான் தாமதம் ஆகிறது என்பதை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்" என்று தெரிவித்தார்.    

முன்னாள் முதல்வர் பிறப்பித்த ஆணையை செயல்படுத்துவாரா அடுத்த முதல்வர் குமாரசாமி என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com