வாரணசியில் தேசிய நெடுஞ்சாலைகள், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து: பிரதமர் மோடி துவக்கி வைப்பு

வாராணசியில் இரண்டு மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைகளையும், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
வாரணசியில் தேசிய நெடுஞ்சாலைகள், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து: பிரதமர் மோடி துவக்கி வைப்பு

உத்தரபிரதேச மாநிலம், வாராணசியில் இரண்டு மிகப் பெரிய தேசிய நெடுஞ்சாலைகளையும், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

34 கி.மீ. தொலைவுள்ள இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளும் ரூ.1,571.95 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. 16.55 கி.மீ. தொலைவுக்கு முதல் கட்டமாக சாலை அமைக்கப்பட்டது. இதற்கு ரூ.759.36 கோடி செலவானது. 17.25 கி.மீ. தொலைவில் பாபத்பூர்-வாராணசி இடையே 4 வழிச் சாலை அமைக்க ரூ.812.59 கோடி செலவானது.

பாபத்பூர் விமான நிலைய நெடுஞ்சாலை, வாராணசி விமான நிலையத்துக்கும், ஜான்புர், சுல்தான்பூர், லக்னௌ ஆகிய நகரங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தும். ஹர்ஹா பகுதியில் மேம்பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. புதிய சாலை திட்டத்தால் வாராணசியிலிருந்து விமான நிலையத்துக்கு பயணிக்கும் நேரம் குறையும். 

இதனிடையே, உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் நீர்வழித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன்மூலம், சரக்குகளை இடமாற்றம் செய்வது எளிதாகும். உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் (ஐடபிள்யூஏஐ) இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பாகும். உலக வங்கியின் நிதி உதவியுடன் தேசிய நீர்வழிப்போக்குவரத்து-1 (ஹால்டியா-வாராணசி) மேம்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.5,369 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையில் 50:50 என்ற விகிதத்தில் மத்திய அரசும், உலக வங்கியும் பங்களிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச ஆளுநர் ராம் நாயக், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர். இதனிடையே, மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவிலிருந்து வரும் சரக்கு கப்பலை பிரதமர் மோடி வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com